“மாநாடு’ படத்திற்கு மக்கள் நிச்சயம் ஆதரவு கொடுப்பார்கள்” – சிம்புவின் எதிர்பார்ப்பு..!

“மாநாடு’ படத்திற்கு மக்கள் நிச்சயம் ஆதரவு கொடுப்பார்கள்” – சிம்புவின் எதிர்பார்ப்பு..!

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில்  உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’.

இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா’ கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – யுவன் சங்கர் ராஜா, பாடல்கள் – மதன் கார்க்கி, ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன், படத் தொகுப்பு – கே.எல்.பிரவீண், சண்டை இயக்கம் – சில்வா, கலை இயக்கம் – உமேஷ் ஜே.குமார், உடையலங்காரம் – வாசுகி பாஸ்கர்.

அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிம்பு அப்துல் காலிக்’ என்ற முஸ்லிம் இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது இந்தப் படத்தில் இடம் பெறும் ’மெர்ஸைலா’ என்கிற பாடல் வெளியாகி உள்ளது.

பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ள இந்தப் பாடலை யுவனும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடியுள்ளனர்.

இந்தப் பாடல் உருவான விதம் குறித்தும் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும் சுவாரஸ்யமான தகவல்களை நாயகன் சிம்பு, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் நேற்று மாலை ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தின் வழியாகப் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது நாயகன் சிம்பு பேசுகையில், “வெங்கட் பிரபு எப்பவுமே கதை சொல்ல மாட்டாரு. இந்த ‘மாநாடு’ படத்தைப் பத்தி ஒரு ஐடியா மட்டும் சொன்னாரு. அது கேக்கவே வித்தியாசமா இருந்துச்சு. வெங்கட் பிரபு விளையாட்டான ஆளு. ஆனா இந்தப் படம் பார்த்ததும் இவர்தான் இந்தப் படத்தை எடுத்தாரான்னு அவர் மேல ஒரு ஆச்சர்யமே வரும்.

கல்யாணி சூட்டிங் ஸ்பாட்டுல ஏகப்பட்ட கேள்வி கேட்பாங்க. அவங்க சினிமா குடும்பத்துல இருந்து வந்தவங்க. சினிமா பத்தி தெரியும்னாலும் இன்னும் நிறைய கத்துக்க விரும்புறாங்க.

எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன் ரெண்டு பேரும் சேர்ந்து சும்மா கிழிச்சிருக்காங்க. அவங்க நடிச்சதைப் பார்த்து எனக்கே டயலாக் மறந்து போய் நின்னுட்டேன். நான் பண்ற டென்சனுக்கு எஸ்ஜே.சூர்யா காட்டுற ரியாக்சனுக்கு தியேட்டர்ல இரசிகர்கள் என்ன மாதிரி ரியாக்சன் காட்டுவாங்கன்னு பாக்குறதுக்கு ஆவலா இருக்கேன். இந்தப் படத்தை தியேட்டர்ல பாக்குற இரசிகர்கள், படம் முடிஞ்சதும் அப்படியே எஸ்.ஜே.சூர்யாவை தூக்கிட்டுப் போயிருவாங்க.

இந்தப் படம் ஏன் தள்ளிப் போச்சுன்னு தெரியல. ஆனால் அந்த நேரத்துல பண்ணியிருந்தால்கூட இவ்வளவு சரியா வந்திருக்காதுன்னுதான் சொல்வேன். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இவ்வளவு நாள் பொறுமையா இருந்து இந்தப் படத்தை முடிச்சிருக்கார்னா உண்மையிலேயே பெரிய விஷயம்.

இந்தப் படத்துல சிங்கிள் ஷாட்டுல ஒரு காட்சியில நடிச்சிருக்கேன். இதுக்கு முன்னாடி ‘மன்மதன்’ படத்துல ‘மொட்டை மதன்’ கேரக்டர் அழுதுகிட்டே பேசுற மாதிரி காட்சிலதான் அப்படி சிங்கிள் டேக்ல நடிச்சேன்.

சின்ன வயசுல நடிக்கிறப்ப எனக்கு அழுகை வரணும்னா என்னோட தொடைல சுரீர்னு அடிக்கணும். ஆனால் இப்ப அந்த மாதிரி காட்சிகளுக்குள்ள போயிட்டா தன்னால அழுகை வருது. காட்சி முடிஞ்சிருச்சுன்னு தெரிஞ்சுகூட என்னால அழுகைய நிப்பாட்ட முடியலை.

இப்போதெல்லாம் நல்ல படம் கொடுத்தா மக்கள் பாராட்டுறாங்க. மோசமான படம் கொடுத்தால் கழுவி ஊத்துறாங்க. இந்த ‘மாநாடு’ படத்தைப் பார்த்துட்டு இவ்வளவு சுவாரஸ்யமா ஒரு விசயத்தைச் சொல்லிருக்காங்களேன்னு அந்த வேலைக்கு கண்டிப்பா மரியாதை கொடுப்பாங்க…” என்றார்.

Our Score