full screen background image

“எந்த சலசலப்புக்கும் நான் அஞ்ச மாட்டேன்..” – நடிகர் சரத்குமார் பேட்டி

“எந்த சலசலப்புக்கும் நான் அஞ்ச மாட்டேன்..” – நடிகர் சரத்குமார் பேட்டி

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் நேற்று மதுரை வந்தார். அவர் மதுரை ஆதீனத்தை, அவரது மடத்தில் சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, “எனது தலைமையிலான அணி நிச்சயமாக இந்த்த் தேர்தலில் வெற்றி பெறும்..” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் மேலும் பேசும்போது, “நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த் செயல்பட்டபோது நான் செயலாளராகப் பொறுப்பு வகித்தேன். அப்போது நடிகர் சங்கத்திற்கு 4 கோடியே 25 லட்சம் ரூபாய் கடன் இருந்தது. அதனை தற்போது அடைத்து விட்டோம். இதில் ராதாரவியின் ஒத்துழைப்பும், உழைப்பும் இருக்கிறது. விஜயகாந்த்தையும், என்னையும் அழைத்து வந்தது ராதாரவிதான். சங்கம் சிறப்பாக செயல்படுவதற்கு தேவையான நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஆனால் எதிரணியினர் இதெல்லாம் தெரியாமல் பேசுகிறார்கள். ஆதாரமின்றி குற்றம் சுமத்துகிறார்கள். சங்க பிரச்சினை மட்டுமின்றி, திரைத்துறை சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களிலும் தீர்வு கண்டுள்ளோம். சங்கம் ஒற்றுமையாகவும், அனைவரும் சகோதரர்களாகவும் செயல்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். 

தென் இந்திய நடிகர் சங்கம் 1952-ல் தொடங்கப்பட்ட பாரம்பரியமிக்க சங்கம். சங்க நடவடிக்கைகளில் குற்றம் சுமத்துபவர்கள் தங்கள் கருத்துகளை பொதுக் குழுவில் தெரிவிக்க வேண்டும். அதைவிட்டு வெளியில் தவறாக பேசுகிறார்கள. தலைவராக இருப்பவருக்குத்தான் அந்த வலி தெரியும்.

நடிகர் சங்க கட்டிடம் கட்டும் விவகாரம் கோர்ட்டில் உள்ளது. சங்கம் மீண்டும் கடனில் சிக்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். ஆனால் எதிர்த் தரப்பினர் புரியாமல் பேசுகிறார்கள். பூச்சி முருகன் அவர் பங்கிற்கு வழக்கு போட்டுள்ளார். அவர் தி.மு.க.வை சேர்ந்தவர். நான் முதல்-அமைச்சர் புகழ்பாடுவதாக, நடிகர் சந்திரசேகர் சொல்கிறார். அவர்கள் யாருடைய தூண்டுதலில் பேசுகிறார்கள் என்று நானும் சொல்ல முடியும்.

நடிகர் சங்கத் தேர்தலில், உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆனால் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். எந்த சலசலப்புக்கும் நான் அஞ்சப் போவதில்லை. எங்கள் அணிக்கு தோல்வி பயம் இல்லை.

ஜூலை 15-ம் தேதி நடைபெறும் நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் அணி வெற்றி பெறுவது நிச்சயம். நாடக நடிகர்களை, சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று மன்சூர் அலிகான் கூறுகிறார். வரலாறு தெரியாமல் அவர் பேசுகிறார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் நாடகத் துறையில் இருந்துதான் சினிமா துறைக்கு வந்தனர். நாடகத்தில் இருந்துதான் சினிமா தோன்றியது. நாடக நடிகர்களை சினிமாத் துறையில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது. சிவாஜி மணிமண்டபத்தை பெரிய இடத்தில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன…” என்றார்.

Our Score