பிரபலங்களாக இருப்பது அப்படியொன்றும் எளிதான விஷயமல்ல. அவர்களை வலையில் சிக்க வைக்கும் மீனாக ஆக்கத் துடிக்கும் கிரிமினல்களை சமாளிக்கவே இனி வரும் காலங்களில் அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கும் போலிருக்கிறது..!
சமூக வலைத்தளங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகும்போது பிரபலங்களின் பெயர்களில் இயங்கும் போலி கணக்காளர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டேதான் போகிறது.
போலியாக கணக்கை திறந்துவைத்து அதில் வில்லங்கமான செய்திகளை இட்டு, பிரபலங்களை சங்கடத்திற்குள்ளாக்குவதை ஒரு ஹாபியாக வைத்திருக்கிறார்கள் ஒரு சிலர்.
அவர்களில் லேட்டஸ்ட்டாக சிக்கியிருப்பவர்கள் நடிகர், இயக்குநர் சமுத்திரக்கனி.
இவருடைய பெயரில் Actor Samuthirakani என்கிற பெயரில் டிவிட்டரில் போலி அக்கவுண்ட்டை வைத்து ஒரு முகம் தெரியாத நபர் அவ்வப்போது சர்ச்சையான விஷயங்களை எழுதி வருகிறார்.
இதனை சமீபத்தில்தான் அறிந்த சமுத்திரக்கனி, சில நாட்களுக்கு முன்பாக இது பற்றி ஒரு எச்சரிக்கையையும் தெரிவித்து தனது உண்மையான டிவிட்டர் கணக்கு @thondankani என்பதுதான் என்றும் தெரிவித்தார்.
மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பாக சைபர் கிரைம் போலீஸிலும் இது பற்றி புகாரும் அளித்திருக்கிறார் சமுத்திரக்கனி.
இந்த நிலைமையில் சற்று நேரத்திற்கு முன்பு அந்த போலி ஐடியில் சற்றே பெரிய வில்லங்கமான விஷயம் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார் அந்த கிரிமினல் நண்பர்.
இயக்குநர் விஜய், நடிகை அமலாபால் இடையிலான விவகாரத்து வழக்கு பற்றி இயக்குநர் சமுத்திரக்கனியின் கருத்தாக அவர் வெளியிட்டிருப்பது நிச்சயம் இயக்குநர் சமுத்திரக்கனியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவே உள்ளது.
இது பற்றி இயக்குநர் சமுத்திரக்கனியின் கவனத்திற்கு உடனடியாக நாம் கொண்டு சென்றபோது மிகவும் வருத்தப்பட்டார்.
“இயக்குநர் விஜய் எனக்கு தம்பி மாதிரி. அவனுடைய வளர்ச்சியில் எனக்கு பெரிதும் அக்கறையுண்டு. அவனுடைய அனைத்துவித முயற்சிகளுக்கும் எனது ஆதரவினை தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்தத் திருமண முறிவு விஷயத்தில்கூட நான் அவனது பக்கம்தான் நிற்கிறேன்..
இப்படிப்பட்ட சூழலில் அந்தக் கிரிமினல் இப்படியொரு செய்தியை என் பெயரில் பரப்புவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறேன். அவர்கள் நிச்சயமாக வெகு சீக்கிரமாக அந்த நபரை பிடித்துவிடுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்..!
இந்த என் பெயரிலான போலி டிவிட்டர் அக்கவுண்ட் விஷயத்தை அனைத்து வகையான மீடியாக்களும் திரைத்துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்..” என்றும் கேட்டுக் கொண்டார்.
படத்திற்கு படம் ரசிகர்களின் வீட்டில் இருக்கும் அண்ணனாக, தம்பியாக, மச்சானாக, ஆசிரியனாக மனதில் பதியும் வண்ணம் நடித்துக் கொண்டிருக்கும் நடிகன் சமுத்திரக்கனியை, இப்படி அவஸ்தைப்பட விடலாமா..?
காவல்துறை தீவிரமாக, விரைந்து விசாரணை செய்து அந்தக் கிரிமினலை பிடித்து தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்..!










