‘ஆட்ட நாயகன்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘மகேஷ் சரண்யா மற்றும் பலர்’, ‘தற்காப்பு’, ‘ஏதோ செய்தாய்’ படங்களில் நடித்தவர் நடிகர் சக்தி வாசு. இவர் இப்போது தனது தந்தையான இயக்குநர் பி.வாசு இயக்கியிருக்கும் ‘சிவலிங்கா’ படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் முக்கியமான ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப் படம் பற்றியும், தனது கேரக்டர் பற்றியும் நடிகர் சக்தி வாசு பேசும்போது, “கன்னட ‘சிவலிங்கா’ படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். கன்னடத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது அந்தப் படம்.
அந்த ‘சிவலிங்கா’ படத்தை எப்படியும் அப்பா தமிழில் இயக்குவார்ன்னு முன்னாடியே நானும் ஊகித்திருந்தேன். ஆரம்பத்தில், இந்தப் படத்தின் டிஸ்கஷனின்போது நானும் அப்பாவுடன் இருந்தேன். நான் நடித்த கேரக்டருக்கு யாரை நடிக்க வைக்கலாம்னு அப்பா யோசனை செஞ்சுட்டிருந்தாரு. அப்போ அந்தக் கேரக்டர் மேல எனக்கும் ஒரு கண்ணு விழுந்துச்சு. நாம நடிக்க வேண்டிய கேரக்டர்ன்னு என் உள் மனசு சொல்லுச்சு.
உடனேயே அப்பாகிட்ட அப்ளிகேஷன் போட்டேன். ‘நீங்க எப்படி ஆப்தமித்ரா படத்தை தமிழ்ல சந்திரமுகின்னு செஞ்சு சூப்பர் டூப்பர் ஹிட்டாக்குனீங்களோ.. அதே மாதிரிதான் இந்தப் படத்தையும் தமிழ்ல எடுத்து ஹிட்டாக்கப் போறீங்க. அப்போ அந்த ஹிட்டான படத்துல நான் இருந்தால் என்னுடைய கேரியருக்கும் யூஸ்புல்லா இருக்கும். அதுனால அந்த கேரக்டரை எனக்கு கொடுத்திருங்க’ன்னு கேட்டேன். அப்பா சட்டுன்னு தரலை. அவரும் ரொம்ப யோசித்துதான் ‘உன்னால செய்ய முடியுமா..? தன்னம்பிக்கை இருக்கா? முடியுமா?’ன்னு நூறு கேள்வி கேட்டுட்டுத்தான் கொடுத்தார்.
என் கதாபாத்திரம் லாரன்ஸ் ஸாருக்கு சமமான வேடமாக அமைந்திருந்தாலும் என்னை ஊக்கப்படுத்தி நடிக்க வைத்த லாரன்ஸ் சாரின் பெருந்தன்மை வேறு யாருக்கும் வருமா என்று தெரியவில்லை.
இந்த ‘சிவலிங்கா’ படத்தில் சிபிசிஐடி போலீஸ் அதிகாரியாக ராகவா லாரன்ஸ் ஸார் நடித்திருக்கிறார். அவர் மிக, மிக ஸ்டைலிஷான நடிப்பை படத்துல காட்டியிருக்கார்.
இந்தப் படத்தில் நான் முஸ்லீம் வேடத்தில் நடித்திருக்கிறேன். நான் இதுக்கு முன்னாடியே சில முஸ்லீம் கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ‘தொட்டால் பூ மலரும்’, ‘நினைத்தாலே இனிக்கும்’ போன்ற படங்களில் முஸ்லீம் கேரக்டர்களில் நடித்த அனுபவம் எனக்குண்டு.
இந்தக் கதைல ஒரு புறாதான் முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்கு. கன்னடத்துல நடிச்சப்ப அந்த புறா என்கூட ரொம்பப் பழகிருச்சு. அதுனால படப்பிடிப்பு முடிந்ததும் அந்தப் புறாவை வீட்டுக்குக் கொண்டு வந்து நானே வளர்க்க ஆரம்பித்தேன். தமிழ்ப் படத்துக்கு வேற புறாவை கொண்டு வந்தாங்க. ஷூட்டிங் முடிந்ததும் அதை கொண்டு போயிட்டாங்க.
கன்னடத்துல என்னுடன் நடித்த புறாவின் பெயர் சாரா. அதனால் தமிழ்ல நடிச்ச புறாவுக்கும் சாரான்னே பேரு வைச்சோம். இதுல என்ன ஆச்சரியம்ன்னா படத்துல எனக்கு ஜோடியா நடித்த நடிகையின் பெயரும் சாராதான்.
நான் இதுவரையிலும் ஹீரோவாக நடித்த படங்களைவிடவும் இந்தப் படம் எனக்கு ரொம்ப முக்கியமான படம். தவிர என் கேரக்டருக்கும் இதுல பெரிய ஸ்கோப் இருக்கு. கன்னடத்தைப் போலவே தமிழிலும் இந்தப் படம் பெரிய ஹிட்டடிக்கும்னு நான் உறுதியா நம்புகிறேன்.
முன்னாடி எனக்கு சரியா பக்குவம் இல்லை. அந்தச் சமயத்துல சற்குணம் ஸார் என்கிட்ட வந்து ‘களவாணி’ படத்தோட கதையைச் சொல்லி நடிக்க்க் கேட்டாரு. அப்போ நான் இருந்த மனநிலைல ‘அந்தக் கதையே எனக்கு புரியலை’ன்னு சொல்லிட்டேன். அப்புறம் அந்தப் படத்தோட ஹிட்டை நினைத்து வருத்தப்பட்டேன். பட்.. இனிமேல் அப்படியிருக்காது. இப்போது ஓரளவு மெச்சூரிட்டி வந்திருப்பதால் எந்த வேடத்தையும் கையாளும் தைரியம் எனக்குள் வந்திருக்கிறது.
இந்தப் படத்துக்கு அப்புறம் நல்ல கதை, நல்ல கேரக்டர்ன்னு வெயிட்டான படங்களில் தனி ஹீரோவா நடிக்கிற வாய்ப்பு வரும்ன்னு எதிர்பார்க்கிறேன். தவிர, என்னைப் பொருத்தவரையிலும் நல்ல கேரக்டரா இருந்தால் வில்லனா நடிக்கக்கூட தயங்க மாட்டேன்…” என்றார்.
வெல்டன்.. நல்ல முடிவுதான்..! ஓடுற படத்துல நாம இருக்கணும். அப்படியிருந்தால்தான் இங்கே பிழைக்க முடியும்.! ஒரு நல்ல பிரேக் கிடைக்கும்வரையிலும் கிடைக்கிற படங்களில், கிடைக்கும் வேடங்களிலெல்லாம் நடிக்க வேண்டியதுதான்..! அதுதான் நல்லது..!