நடிகர் விக்ரம் பிரபு, உலகளாவிய பார்வையாளர்கள் ரசிக்கும் வகையிலான திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதில் உறுதியாக செயல்பட்டு, தனது ஒவ்வொரு தேர்விலும், அவரது திரைப்படங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
சமீபத்தில் இயக்குநர் முத்தையா இயக்கிய ‘புலிக்குத்தி பாண்டி’ திரைப்படத்தில் ஒரு கிராமிய பாத்திரத்தில், முழுதாக தன்னை மாற்றிக்கொண்டு, தனது திறமையை நிரூபித்திருந்தார்.
இந்த முறை இயக்குநர் முத்தையா கதை, வசனத்தில், கார்த்தியின் திரைக்கதை இயக்கத்தில் ‘டைகர்’ என்ற படத்தில் விக்ரம் பிரபு நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு வில்லனாக பிரபல இயக்குநரான பி.வாசுவின் மகனான சக்தி வாசு நடிக்கிறார் என்பதுதான் சிறப்புச் செய்தி.
இந்த டைகர் படத்தை எம் ஸ்டுடியோஸ் மற்றும் ஓபன் ஸ்கிரீன் பிக்டர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக அனந்திகா நடிக்க, வில்லனாக சக்தி வாசு நடிக்கிறார். இவர்களுடன் ‘அட்டு’ பட புகழ் ரிஷி, டேனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
எழுத்து, இயக்கம் – கார்த்தி, இசை – சாம் C.S., ஒளிப்பதிவு – கதிரவன், கலை இயக்கம் – வீரமணி, படத் தொகுப்பு – மணிமாறன், புகைப்படங்கள் – முருகன், நடன இயக்கம் – பாபா பாஸ்கர், சண்டை இயக்கம் – கணேஷ் மாஸ்டர், நிர்வாகத் தயாரிப்பு – S.வினோத் குமார்-தம்பி M பூபதி.
இப்படம் குறித்து இயக்குநர் கார்த்தி கூறுகையில், “இந்த ‘டைகர்’ படம் ஆரம்பம் முதல் இறுதிவரை ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும், பரபர த்ரில்லராக இருக்கும்.
ஒரு திரைக்கதை எழுத்தாளராக இந்தப் படத்தில் இயக்குநர் முத்தையா பங்களிப்பது உண்மையில் உணர்வுப்பூர்வமாக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. படத்திற்கு இது ஒரு முக்கிய ஈர்ப்பை தரும் அம்சமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இத்திரைக்கதையை கூற வாய்ப்பளித்ததற்கும், இப்படத்தை ஒப்புக் கொண்டதற்கும் விக்ரம் பிரபு சாருக்கு, மிகுந்த நன்றி. ஒட்டு மொத்த தொழில் நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய தூணாக அமைந்துள்ளனர். இந்தப் படம் நிச்சயமாக பார்வையாளர்களை ஈர்க்கும், பரபர திரில்லராக, ஒரு நல்ல அனுபவத்தை தரும்…” என்றார்.