“சின்னத்திரை நடிகர் சங்கத்தை வளமான சங்கமாக மாற்றுவோம்…” – நடிகர் ‘ஆடுகளம்’ நரேனின் தேர்தல் பேச்சு..!

“சின்னத்திரை நடிகர் சங்கத்தை வளமான சங்கமாக மாற்றுவோம்…” – நடிகர் ‘ஆடுகளம்’ நரேனின் தேர்தல் பேச்சு..!

தமிழ்நாடு சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தேர்தல் சூடு பிடித்திருக்கிறது.

இந்த முறை தேர்தலில் 4 அணிகள் போட்டியிடுவதுதான் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

தற்போதைய தலைவரான ஜி.சிவன் ஸ்ரீநிவாஸ்  தலைமையில் ‘வசந்தம் அணி’ என்கிற பெயரில் ஒரு அணியும், நடிகை நிரோஷாவின் தலைமையில் ‘நம்ம அணி’ என்கிற பெயரில் ஒரு அணியும், நடிகர் ரவி வர்மாவின் தலைமையில் ‘உழைக்கும் கரங்கள்’ என்கிற பெயரில் ஒரு அணியும், நடிகர் போஸ் வெங்கட்டின் தலைமையில் ‘புதிய தலைமுறை அணி’ என்கிற பெயரில்  ஒரு அணியுமாக… மொத்தம் நான்கு அணிகள் இத்தேர்தலில் அணி வகுத்து நிற்கின்றன.

ஒரு தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், 2 துணைத் தலைவர்கள், 4 இணைச் செயலாளர்கள், 14 செயற்குழு உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக் கமிட்டிக்கு இந்த நான்கு அணிகளைச் சேர்ந்தவர்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

வரும் ஜனவரி 26-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் ஒவ்வொரு அணியினரும் வாக்குகளை கவர்வதற்காக அனைத்து உறுப்பினர்களுக்கும் தங்களது அணியின் தேர்தல் அறிக்கைகளையும், வாக்குறுதிகளையும் அள்ளி வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

DSC02168

இந்த நிலையில் ‘உழைக்கும் கரங்கள் அணி’யின் சார்பாக கொள்கை விளக்கக் கூட்டம் நேற்று மாலை சாலிக்கிராமம் ஏ.கே.ஆர்.மஹாலில் நடைபெற்றது.

‘உழைக்கும் கரங்கள்’ அணியின் சார்பில் போட்டியிடும் நடிகர் ரவி வர்மா அணியில் தலைவர் பதவிக்கு அவரே போட்டியிடுகிறார். நடிகர் ‘ஆடுகளம்’ நரேன் செயலாளர் பதவிக்கும், ஜெயந்த் பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள்.

துணைத் தலைவர் பதவிக்கு நடிகை லஷ்மி, நடிகர் ராஜ்காந்த் இருவரும் போட்டியிடுகிறார்கள்.

இணைச் செயலாளர் பதவிக்கு நடிகர்கள் அசோக் சாமுவேல், டி.சிவக்குமார், ஸ்ரீகஜேஷ், நடிகை டாக்டர் ஷர்மிளா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

DSC02215

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு நடிகைகள் தேவி கிருபா, டி.தீபா, எஸ்.ராகவி, பிரேமலதா, பிரேமலதா, செளதாமணி, தேவி, ஸ்வேதா பண்டேகர், நடிகர்கள் வெங்கடகிருஷ்ணன், சுதாகர், சி.என்.ரவிசங்கர், பிரகாஷ் ராஜன், எஸ்.பாண்டியராஜ், ஈஸ்வர் ரகுநாதன், ஆர்.தேவேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கூட்டத்தின் துவக்கத்தில் இந்த அணியில் போட்டியிடுபவர்கள் அனைவரும் வந்திருந்த உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.

‘உழைக்கும் கரங்கள்’ அணியின் தேர்தல் அறிக்கை நோட்டீஸாக அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் தரப்பட்டிருந்தது.

இந்த அணியின் தேர்தல் அறிக்கை இதுதான் :

“1. நமது சங்கம் துவங்க காரணகர்த்தாவாக இருந்த நம் அனைவரின் நினைவில் வாழும் மறைந்த தலைவரும், நடிகருமான எஸ்.என்.வசந்த் அவர்களின் மறைந்த நாளான மே 14-ம் தேதியன்று நமது சங்கத்தில் ஆண்டு தோறும் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தப்படும்.

2. நமது உறுப்பினர்களுக்கு வாய்ப்புகளை பெற்றுத் தரும் வகையில் கலை நிகழ்ச்சிகள், விளம்பர நிகழ்ச்சிகள், தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொது நிகழ்ச்சிகள், தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வாய்ப்பு என அவரவர் தகுதிக்கேற்ப சங்கத்தில் சார்பில் பரிந்துரை செய்யப்படும்.

3. நமது உறுப்பினர்களுக்கு இயன்ற அளவு மருத்துவ உதவிகளும், உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி பயில சிறந்த ஆலோசனைகளும், இயன்ற உதவியும் சங்கத்தின் மூலமாகச் செய்து தரப்படும்.

4. நமது உறுப்பினர்கள் அவர்களின் நியாயமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சங்கத்தை அணுகினால், அதற்கு சட்ட ரீதியாக உதவிட நமது சங்கம் உறுதுணையாக இருக்கும்.

5. நமது உறுப்பினர்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகளின் மூலமாகக் கிடைக்கும் பலன்களைப் பெற்றுத் தர சங்கம் துரிதமாகச் செயல்படும்.

6. நமது சங்கத்தின் செயல்பாட்டிற்கு பயன்படும்வகையில் சங்கத்தின் நிதி நிலையை அதிகப்படுத்திட அனைத்து உறுப்பினர்களின் ஆலோசனைகளும் வரவேற்கப்படும்.

7. வாகன வசதியில்லாத சங்க உறுப்பினர்களுக்கு தொழில் ரீதியாக சென்னைக்குள் சென்று வர அரசு பேருந்தில் இலவச பாஸ் பாஸ் பெற்றுத் தர உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

8. ஆண்டுதோறும் நடைபெறும் சங்கத்தின் பொதுக் குழுவில் 65 வயதுக்கும் மேற்பட்ட நமது சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத் தொகையும், சிறப்புக் கெளரவமும் வழங்கப்படும்.

9. சின்னத்திரையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு, சின்னத்திரை நடிகர் சங்கம் சார்பில் ‘சின்னத்திரை சிறப்பு விருதுகள்’ வழங்கப்படும்.

10. சின்னத்திரை நடிகர் சங்கத்திற்குத் தனியாக கட்டிடம் கட்ட இடம் வேண்டி, தமிழக அரசின் மூலமாக உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

11. சின்னத்திரை நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கு தனிப்பட்ட முறையிலோ, அல்லது தொழில் ரீதியாகவோ ஏற்படும் பிரச்சினைகளுக்கு சங்கம் எந்த வகையிலும் ஒத்துழைப்பு தர இயலாது.

12. தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் சின்னத்திரை நடிகர்களுக்கான விருதுகளைப் பெறுவதற்கு, உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கு சங்கத்தின் சார்பில் பரிந்துரை செய்ய இயலாது.”

– இவ்வாறு தங்களது தேர்தல் அறிக்கையில் ‘உழைக்கும் கரங்கள் அணி’யினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய கூட்டத்தில் நிர்வாகப் பதவிகளுக்குப் போட்டியிடும் உறுப்பினர்கள் அனைவருமே பேசினார்கள்.

இந்தக் கூட்டத்தில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ரவிகாந்த் பேசுகையில், “நான் பல தேர்தல்களில் பல அணிகளில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்று சங்கப் பணிகளை செய்துள்ளேன். எப்போதும் என் மீது ஒருவரும் குற்றம், குறை சொல்லும் அளவுக்கு நடந்து கொண்டதில்லை.

actor rajkanth

சென்ற நிர்வாகத்தில் நான் மாற்று அணியில் இருந்தேன். அது உங்களுக்கே தெரியும். இப்போது இந்த அணிக்கு நான் வந்ததன் காரணம், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என்பதால்தான்.

அந்த அணியில் இப்போதைய நிர்வாகத்தில் இருந்தபோது சிவன் ஸார் “எப்போதும் எந்த விஷயமாக இருந்தாலும் ரவி வர்மாவிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டுத்தான் எதையும் செய்கிறேன்…” என்கிறார். அப்போது உண்மையான தலைவர் யார்..? அவரா..? இவரா..?

இப்போதைய நிர்வாகத்தினர் “15 லட்சம் ரூபாய் வரையிலும் சங்கக் கணக்கில் சேமித்து வைத்திருக்கிறோம்” என்கிறார்கள். யார் நிர்வாகத்தில் இருந்தாலும் இதைத்தான் செய்வார்கள். இது சாதனை அல்ல. அலுவலக செயல்பாடுகளில் ஒன்று. இதைப் போய் எப்படி ‘சாதனை’ என்று சொல்வது..?

முன்பு உறுப்பினர்களுக்கான நுழைவுக் கட்டணம் 3,500 ரூபாயாக இருந்தது. இப்போது அது 15,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அப்போது நுழைவுக் கட்டணம் உயரத்தானே செய்யும்..? இதிலென்ன ‘சாதனை’ இருக்கிறது…?

இந்த விழாவுக்கு வருவதற்கு முன்புகூட எனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள். “உங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்” என்று. “முடியாது” என்றுதான் சொன்னேன். அண்ணன் ரவி வர்மா இதற்கு முன்பாக இரண்டு தேர்தல்களில் நின்று தோற்றாலும் இன்னமும் அதே வீரியத்துடன் சங்கத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டுமே என்ற எண்ணத்திலேயே உழன்று கொண்டிருப்பவர். அதனாலேயே அண்ணனுடன் இப்போது சேர்ந்துள்ளேன்.

இப்போது இருக்கும் அணி நல்லதுதான் செய்திருக்கிறார்கள் என்றால் இப்போது மூன்றாக உடைந்ததற்கு என்ன காரணம்..? போஸ் வெங்கட்டிடம் இது பற்றி என்னுடைய நண்பர் ஒருவர் கேட்டதற்கு, ‘அந்த டீம்ல இருந்து நாங்க நல்லதுதான் செய்தோம். ஆனால் அதையெல்லாம் ‘நான்தான் செய்தேன்’னு எப்படி சொல்றது..? அதுனாலதான் தனியா நிக்குறேன்’ என்றாராம்.

அதாவது அவர் ‘நான்தான் செய்தேன்’ என்று பெயர் எடுப்பதற்காகத்தான் தனி அணியாக நிற்கிறாராம். இதில் பொது நலன் எங்கே இருக்கிறது..? சுயநலம்தானே இருக்கிறது..? இதை நம்பி எப்படி நமது உறுப்பினர்கள் ஓட்டளிப்பார்கள்..?” என்றார் சூடாக..!

actress dr.sharmila

இணைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் டாக்டர் ஷர்மிளா பேசும்போது, “ஒரு பக்கம் சிவன் ஸார் நிக்குறார். இன்னொரு பக்கம் நிரோஷா மேடம் நிக்குறாங்க. அடுத்து போஸ் வெங்கட் நிக்குறாரு. இவங்க எல்லாருமே எனக்குத் தெரிஞ்சவங்கதான். நண்பர்கள்தான். இருந்தாலும் எனக்கு இந்த அணியை, குறிப்பாக எங்களது அணியின் தலைவரான ரவி வர்மா ஸாரை எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் இந்த அணியில் நிற்கிறேன்.

எனக்கு ரவி வர்மா ஸாரை பற்றி முதலில் அதிகம் தெரியாது. நாங்கள் இணைந்து ஒரு சீரியலில் நடிக்கத் துவங்கியபோதுதான் அவரைப் பற்றி அதிகம் தெரிந்து கொண்டேன்.

படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் ரவி வர்மா ஸார் எப்போதும் நமது நடிகர் சங்கத்தைப் பற்றியும், உறுப்பினர்களின் நலம் பற்றியுமே பேசிக் கொண்டிருப்பார். எப்போதும் அவருடயை கையில் பல பேப்பர்கள் இருக்கும். அதில் நமது உறுப்பினர்களின் பலவித கோரிக்கைகள், உறுப்பினர்களின் விவரங்களை வாங்கி வைத்திருப்பார். ‘நான் தோற்றாலும் பரவாயில்லை. நம்ம உறுப்பினர்களுக்கு ஏதாவது செய்யணும்மா’ என்று சொல்லிக் கொண்டேயிருப்பார். இப்படிப்பட்ட நல்லவருடன்தான் நான் பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் ரவி வர்மா ஸாருடன் இணைந்து போட்டியிடுகிறேன்.

இந்த அணியில் வந்தவர்களுக்கெல்லாம் பதவிகளை கொடுக்கவில்லை. நாங்களே தேர்ந்தெடுத்து இந்தப் பதவிக்கு இவர் வந்தால் நன்றாக இருக்கும் என்றெண்ணி அவரை அழைத்துப் பேசி பதவிக்கான போட்டியில் நிறுத்தியிருக்கிறோம்.

படித்திருந்தால் மட்டும் போதாது.. ஆற்றலும் வேண்டும்.. இது இரண்டுமே இருந்தால்தான் எந்தப் பொதுப் பணியையும் நம்மால் செய்ய முடியும். அது எங்களது இந்த ‘உழைக்கும் கரங்கள் அணி’யினருக்குத்தான் இருக்கிறது. எனவே எங்களது அணிக்கே அனைவரும் வாக்களித்து வெற்றிப் பெறச் செய்யுங்கள்..” என்று கேட்டுக் கொண்டார்.

actor adukalam naren

இந்த அணியில் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் நடிகர் ‘ஆடுகளம்’ நரேன் பேசுகையில், “எனது இனிய நண்பன் ரவி வர்மாவின் தலைமையில் நான் நமது சங்கத்தின் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவதில் பெருமைப்படுகிறேன்.

நான் எனது திரையுலக வாழ்க்கையை சின்னத்திரையில்தான் துவங்கினேன். அன்றிலிருந்து இன்றவரையிலும் எனது நெருங்கிய நண்பனாக இருப்பவன் ரவி வர்மா.

நான் ஒரு முறை ஒரு கன்னடப் படப்பிடிப்பிற்காக பெங்களூர் போயிருந்தேன். அங்கே ஒரு நாள் இரவு ஷூட்டிங் முடிந்த பின்பு எங்கேயாவது ஹோட்டலுக்கு போய் சாப்பிடலாம் என்று நினைத்திருந்தேன். அப்போது அந்தப் படத்தின் நாயகனும் என்னை சாப்பிட அழைத்தார். சரி போவோம் என்று கிளம்பினோம்.

எங்கேயாவது பெரிய ஸ்டார் ஹோட்டலுக்குக் கூட்டிப் போவார் என்று நினைத்தேன். ஆனால் அவரோ ‘பக்கத்தில் சின்னத்திரை நடிகர் சங்கத்தினரின் அலுவலக கேண்டீன் இருக்கு. அங்கே போவோம். டிபன் நல்லாயிருக்கும். வாங்க’ என்று சொல்லி அழைத்துப் போனார்.

அங்கே போய் பார்த்தால் அற்புதமான அலுவலகம் அது. உள்ளே நீச்சல் குளத்துடன் ஒரு ரெக்ரியேஷன் கிளப் மாதிரி அந்தச் சங்க அலுவலகம் இருந்தது. நல்ல சாப்பாடு. உறுப்பினர்கள் தங்களது குடும்பத்தினருடன் எப்போதும் வந்து போகும் அளவுக்கு செட்டப் செய்து வைத்திருக்கிறார்கள்.

இதைப் பார்த்தவுடன் எனக்கு நமது நிலைமையை எண்ணிப் பார்த்து ஒரு ஏக்க நிலை ஏற்பட்டது. அதுபோல் நமது தமிழ்நாட்டு சின்னத்திரை நடிகர்கள் நினைத்தால் நமக்கென்று ரெக்ரியேஷன் கிளப்.. குடும்பத்துடன் பேசிப், பழகும் அளவுக்கு ஒரு பெரிய அமைப்பாக உருவாக்கலாமே என்றெண்ணம் எனக்குள் எழுந்தது.

அப்போது என் நண்பன் ரவி வர்மாவிடம் இது பற்றிப் பேசினேன். அப்போது, ‘அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்தால்தான் எதையுமே செய்ய முடியும். முதலில்ல தேர்தலில் நின்று ஜெயித்து பொறுப்புக்கு வர வேண்டும். பின்புதான் மற்றதெல்லாம்…’ என்றான். ‘சரி.. இந்தத் தேர்தலில் நீ நிக்குறதா இருந்தால் சொல். நானும் நிற்கிறேன்’ என்றேன். அவனும் ‘சரி’ என்றான். இப்போது ஓட்டு கேட்டு உங்கள் முன்னால் நிற்கிறேன்.

நான் சினிமாவில் பிஸியான ஆர்ட்டிஸ் என்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் 24 மணி நேரமும் இந்தச் சங்கத்திற்காக உழைக்கக் காத்திருக்கிறேன். நான் ஒருவேளை சங்கத்தில் இருக்க முடியாவிட்டால் நான் இல்லாத நேரத்தில் சங்கப் பணியினைச் செய்ய 2 துணைத் தலைவர்களும், 4 இணைச் செயலாளர்களும் காத்திருக்கிறார்கள். எனவே சங்கத்தில் எந்தப் பணியும் நின்றுவிடாது.

நமது உறுப்பினர்கள் இந்த ‘உழைக்கும் கரங்கள்’ அணியின் சார்பாகப் போட்டியிடும் 23 உறுப்பினர்களையும் ஒரு சேர தேர்ந்தெடுக்க வேண்டும்…” என்று கேட்டுக் கொண்டார்.

actor ravimarma

இறுதியாக ‘உழைக்கும் கரங்கள்’ அணியில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நடிகர் ரவி வர்மா பேச வந்தார். அவர் தன் பேச்சின் துவக்கத்தில் இந்தச் சங்கத்தை முதன்முதலில் ஆரம்பித்த… மறைந்த நடிகர் வசந்த்தின் செயல்களையும், அதற்காக அவர் பட்ட கஷ்டங்களையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த வசந்தின் மனைவி மற்றும் மகனை மேடைக்கு அழைத்து பொன்னாடை போர்த்தி கெளரவித்தார் ரவி வர்மா.

பின்பு அவர் பேசுகையில், “நான் திராவிட இயக்க பரம்பரையைச் சேர்ந்தவன். என் அப்பா அண்ணாதுரை, பெரியாரிடத்திலெல்லாம் பேசிப் பழகி, அவர்களின் தொண்டனாக வாழ்ந்தவர். எனக்குக் கொள்கைதான் முக்கியம்.

அதனால்தான் இரண்டு முறையும் தேர்தலில் தோல்வியுற்றாலும் மீண்டும் உங்கள் முன்னால் மூன்றாவது முறையாகத் தேர்தலில் நிற்கிறேன். நான் விரும்புவதெல்லாம் நம்முடைய சங்க உறுப்பினர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் எத்தனை தோல்விகளைச் சந்தித்தாலும், அவமானங்களைச் சந்திக்க நேரிட்டாலும், அதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு உங்களுக்காக உழைக்க முன் வந்திருக்கிறேன்.

இதுவரையிலும் நடந்த தேர்தல்களில் நான் தோல்வியடைந்தாலும் திரும்பத் திரும்ப நிற்கிறேன் என்று சொல்லிக் காட்டி ‘நான் பெரிய பணக்காரன். அதனால்தான் தோற்றாலும் பரவாயில்லை என்று தேர்தலில் நிற்பதாக’ சிலர் சொல்லி வருகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை.

கடந்த இரண்டு தேர்தல்களில் நான் தோல்வியடைந்தாலும் சில லட்சங்கள் செலவு செய்து எனக்காக அந்தத் தோல்வியைத் தாங்கிக் கொண்டவன் எனது நண்பன் ‘ஆடுகளம்’ நரேன்தான். இன்றைக்குத் தமிழ்த் திரையுலகத்தில் நாசருக்கு அடு்த்து பிஸியான கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் நமது நரேன்தான்.

‘இந்தத் தேர்தலில் நீ நின்றால் நான் நிச்சயமாக நிற்கிறேன்’ என்று முன்னால் வந்து நின்றான் நரேன். அதனால்தான் இந்தக் கூட்டணி உருவாகியிருக்கிறது.

ravi varma team

நிச்சயமாக நாங்கள் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்தால் எங்களுடைய தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பவை அனைத்தையும் செய்து காட்டுவோம். திறம்படச் செயலாற்றுவோம்.

எங்களுடைய சக தோழர்கள் அனைவருமே ஒவ்வொரு துறையிலும் சிறப்பானவர்கள். அவர்களின் வழி காட்டுதலில் நமது சங்கம் சிறப்பாக இயங்க எங்களது அணியை ஜெயிக்க வைக்க வேண்டியது உங்களது கடமை. அதைச் செய்வீர்கள் என்று நம்புகிறோம்..” என்றார்.

இதையடுத்து மீதமிருக்கும் மூன்று அணிகளுமே தத்தமது கொள்கை விளக்கக் கூட்டங்களை தொடர்ந்து நடத்த ஆயத்தமாகியிருக்கின்றன.

தேர்தல் நாளுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் ஒவ்வொரு படப்பிடிப்புத் தளங்களிலும் படப்பிடிப்பை நிறுத்தும் அளவுக்கு இந்த சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்காளர் கேன்வாஸிங் அமோகமாக நடந்து கொண்டிருக்கிறதாம்..!

Our Score