full screen background image

“சங்கப் பணத்தில் கண்டிப்பாக கை வைக்க மாட்டோம்…” – நடிகை நிரோஷாவின் சத்தியம்..!

“சங்கப் பணத்தில் கண்டிப்பாக கை வைக்க மாட்டோம்…” – நடிகை நிரோஷாவின் சத்தியம்..!

தமிழ்நாடு சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நடிகை நிரோஷா தலைமையிலான நம்ம அணியின் சார்பில் போட்டியிடுபவர்களின் அறிமுக விழா நேற்று மாலை சாலிகிராமம் ஏ.ஆர்.கே. மஹாலில் நடைபெற்றது.

இந்த ‘நம்ம அணி’யில் நடிகை நிரோஷாவே தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். நடிகர் பரத் செயலாளர் பதவிக்கும், நடிகர் ஸ்ரீதர் பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

நடிகர் வி.டி.தினகரன், நடிகை கன்யா பாரதி ஆகிய இருவரும் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.

நடிகர்கள் விஜய் ஆனந்த், ரவீந்திரன், முனீஸ்ராஜா, நடிகை மோனிகா ஆகிய நால்வரும் இணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

நடிகைகள் ஷில்பா, கரோலின், சன்தோஷி, ஸ்வேதா, சுஜாதா மற்றும் நடிகர்கள் சதீஷ், வசந்த்குமார், அஸ்வின் குமார், பிர்லா, ஜெயராமன், எஸ்.பி.செந்தில் வேல், கோபாலகிருஷ்ணன், கே.பி.அண்ணாதுரை ஆகிய 14 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

small screen actors union-election 2018-6

இன்றைய அறிமுக நிகழ்ச்சியில் நடிகர் ராதாரவியும், நடிகர் ராம்கியும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நடிகர் ராதாரவி பேசும்போது தனக்கே உரித்தான ஸ்டைலில் அனைவரையும் லந்து கட்டி அடித்தார்.  மீ டூ மேட்டர் முதற்கொண்டு கடைசியாக சின்மயி வரையிலும் அனைத்தையும் தொட்டுவிட்டு பகடியாக்கினார். சீரியஸான விஷயத்தையே காமெடியாக்கி கெடுப்பதில் ராதாரவிக்கு நிகர் அவரேதான்.

அவர் பேசியதில் உருப்படியானது… “நிரோஷா என் குடும்பத்தைச் சேர்ந்தவர். திராவிட இயக்கத்தின் வழியில் வந்தவர். தலைமைப் பொறுப்பு அவருடைய ரத்தத்திலேயே இருக்கிறது.

nirosha-team-meeting-1

அவருக்குள்ள 3 நிரோஷாக்கள் இருக்காங்க. அதையெல்லாம் நீங்க பார்த்திருக்க மாட்டீங்க. அப்படியொரு டெர்ரர் பார்ட்டி என் தங்கச்சி. ஒரு விஷயத்தைத் தொடங்கிவிட்டால் எத்தனை அடம் பிடித்தாவது அதை செய்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்.

உங்களுக்கெல்லாம் வேலை வாய்ப்புக்கு நிச்சயமாக நிரோஷா கை கொடுப்பார். அவருக்கு நீங்கள் கை கொடுங்கள்.. நாம இன்னிக்கே ஜெயித்தது போலத்தான். இத்தனை கூட்டம் வந்திருப்பதைப் பார்த்தாலே எனக்கு தைரியம் வந்துவிட்டது. நிச்சயமாக நமது நம்ம அணிதான் வெற்றி பெறப் போகிறது. அடுத்து வெற்றி விழாவில் சந்திப்போம்..” என்று தில்லாக அறிவித்துவிட்டுப் போனார்.

சங்கத்தின் முன்னாள் தலைவரும் நடிகருமான ராஜேந்திரன் பேசும்போது, “இந்தச் சங்கத்தை முதன்முதலில் துவக்கியபோது உடன் இருந்தவர்களில் நானும் ஒருவன். அந்த வரலாற்றையே மறைத்துவிட்டு இப்போது பலரும் தாங்கள்தான் சங்கத்தைத் துவக்கினோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிரோஷா மேடம் நிச்சயமாக உறுதியான, நேர்மையான, திறமையான தலைவராக நமக்கு இருப்பார்கள். அவரை வெற்றி பெற வைப்பது நமது கடமை..” என்றார்.

அடுத்துப் பேசிய அனைவருமே “நடிகை நிரோஷா தங்கமானவர்.. அன்பானவர்.. ஆனால் மன உறுதியானவர். ஒரு பிரச்சினையைத் தொட்டுவிட்டால் அதனை முடிக்காமல்விட மாட்டார். அவருக்கு ஆதரவு கொடுப்பது நமது கடமை.. நிச்சயமாக வேலை வாய்ப்பில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவார்…” என்றெல்லாம் கூறினார்கள்.

ஒரு உறுப்பினர் எழுந்து “நமது உறுப்பினர்கள் சீரியல்களில் நடிக்கும்போது உடன் நடிக்கும் சக நடிகர், நடிகைகள் யாராவது சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லையென்றால் அவர்களை உறுப்பினராக்க முயல வேண்டும்…” என்றார்.

nirosha-team-meeting-2

இன்னொருவர் எழுந்து “சங்க உறுப்பினராக அல்லாதவரை தயாரிப்பாளர்கள் நடிக்க வைத்தால் சங்கத்தின் மூலமாக அதைத் தடுக்க வேண்டும்…” என்றார்.

இப்போது இடைமறித்த நடிகர் செல்வராஜ், “எதுக்கு அவ்வளவு தூரம் போகணும்..? ‘சங்க உறுப்பினர்களாக இல்லாதவர்களுடன் நாங்கள் நடிக்க மாட்டோம்’ன்னு சொல்லிட்டு நீங்களே ஸ்டிரைக் செய்யலாமே..? யார் உங்களை வேண்டாம் என்று சொன்னது.. அப்படிச் செய்தால் மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்..” என்றார்.

கரோலின் என்ற செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் உறுப்பினர் பேசும்போது, “நான் முதன்முதலில் நடிக்க வந்தபோது சங்கத்தில் உறுப்பினராக இல்லை. சில மாதங்கள் கழித்து என்னை சங்கத்தில் சேரும்படி சக நடிகர், நடிகைகள் பலரும் வற்புறுத்தினார்கள். அதன் பின்புதான் நமது சங்கத்தில் சேர்ந்தேன். ஆனால் நான் சங்கத்தில் சேர்ந்த உடனேயே எனக்கு வேலை வாய்ப்பே இல்லாமல் போனது..” என்றார் பரிதாபமாய்.

nirosha-team-meeting-3

நிரோஷாவின் கணவரான நடிகர் ராம்கியும் கூட்டத்திற்கு வந்திருந்து தனது மனைவியைப் பற்றியும், நடிகர் சங்கத்தைப் பற்றியும், விஷால் பற்றியும் கலந்து கட்டி அடித்து யாருக்கும் புரியாத அளவுக்கு பேசி முடித்தார்.

கூட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்திருந்த பல நடிகர், நடிகைகளும் மேடைக்கு வந்து மைக்கைப் பிடித்து பேசித் தீர்த்தார்கள். அனைவரின் ஒரே கோரிக்கை “பல நடிகர், நடிகைகளுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் சங்கத்தில் உறுப்பினராக அல்லாத வேற்று மொழி நடிகர், நடிகைகளுக்கு அதிகமாக வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதைத் தடுக்க வேண்டும்” என்பதே..!

இந்தக் கூட்டத்துக்கு வர முடியாமல் பல நடிகர், நடிகைகள் தங்களுடைய ஆதரவை வீடியோ மூலமாகத் தெரிவித்திருந்தனர். அவர்களில் நடிகை ராதிகா, நடிகர்கள் சஞ்சீவ், Sree, நடிகை ரக்சிதா போன்றோர் முக்கியமானவர்கள்.

கடைசியாக தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நடிகை நிரோஷா பேசும்போது, “எனக்கு இந்தச் சங்கத்தின் மூலமாகவும், பதவியின் மூலமாகவும் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லை. சின்னத்திரை நடிகர், நடிகையரின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்தத் தேர்தலில் நிற்கிறேன்.

நமது சங்க உறுப்பினர்களுக்கு நான் செய்யப் போகும் ஐந்து முக்கியமான விஷயங்களை நான் இப்போதே தயார் செய்து வைத்துள்ளேன். வெற்றி பெற்றுவிட்டால் உடனேயே அதனை அமல்படுத்த வேண்டியதுதான் பாக்கி.

nirosha-team-meeting-4

நமது சங்க உறுப்பினர்களுக்காக மருத்துவ சிகிச்சைக்காக மேத்தா மருத்துவமனை என்கிற ஒரு பெரிய மருத்துவமனையில் பேசியிருக்கிறேன். அவர்களும் நமது உறுப்பினர்களுக்கு இலவச சிகிச்சை தருவதற்கு ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதேபோல் நான் என்னுடைய ஆட்சிக் காலத்திலேயே நமது சங்கத்திற்கு நிரந்தரமாக ஒரு கட்டிடத்தைக் கட்டியே தீருவேன். இதற்காக நிச்சயமாக சங்கப் பணத்தில் கை வைக்க மாட்டேன். சங்கப் பணத்தைத் தொடாமலேயே நிச்சயமாக கட்டிடத்தைக் கட்டித் தருவேன்..” என்று பலத்த கை தட்டலுக்கிடையில் பேசி முடித்தார்.

வந்திருந்த உறுப்பினர்களில் பெரும்பாலோர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிப்பவர்களாகவும், ராடான் நிறுவன சீரியல்களில் நடிப்பவர்களாகவும் இருந்ததால் நிரோஷா தலைமையிலான ‘நம்ம அணி’ என்பது ராடான் டிவியின் ஒரு முன்னெடுப்பு என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

 

Our Score