1987-ம் ஆண்டில் வெளியான ‘சின்னப்பூவே மெல்லப் பேசு’ படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் நடிகர் ராம்கி.
அதற்கடுத்த ஆண்டிலேயே 8 படங்களில் நடித்து பரபரப்பான நாயகர்களில் ஒருவராக மாறினார் ராம்கி.
‘செந்தூரப்பூவே’, ‘மருதுபாண்டி’, ‘பூவிழி ராஜா’, ‘பார்வைகள் பலவிதம்’, ‘இணைந்த கைகள்’, ‘வெற்றிப் படிகள்’, ‘ஆத்மா’, ‘மாயா பஜார்’, ‘கருப்பு ரோஜா’, ‘தாலி புதுசு’, ‘தடயம்’, ‘சாம்ராட்’, ‘புதல்வன்’, ‘பாளையத்து அம்மன்’, ‘ராஜராஜேஸ்வரி’, ‘வனஜா கிரிஜா’ என்று 2000-ம் வருடம்வரையிலும் பல வெற்றிப் படங்களில் நாயகனாக நடித்திருந்தார்.
இதன் பின்பு ‘மாசாணி’, ‘பிரியாணி’, ‘அட்டி’, ‘வாய்மை’, ‘ஆங்கிலப் படம்’, ‘ஆர்.எக்ஸ்.100’, ‘ஆக்சன்’ ஆகிய படங்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
நடிப்பில் இருந்து சில காலம் விலகியிருந்தபோது பல தொலைக்காட்சித் தொடர்களை இலங்கையைச் சேர்ந்த சில தொலைக்காட்சிகளுக்காகத் தயாரித்தார்.
தற்போது நடிகர், தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி இயக்குநராக மாறப் போகிறார் ராம்கி.
ஆனால், இவர் இயக்குநராவது திரைப்படத்திற்காக அல்ல.. வெப் சீரிஸிற்காக.. ஒரு முன்னணி ஓடிடி தளத்திற்காக ஒரு வெப் சீரிஸை தயாரித்து இயக்கவிருக்கிறார் ராம்கி.
இதற்கான அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டதாம். மிக விரைவில் முறைப்படியான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.









