தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தல் – ஜெயசுதா தோல்வி – ராஜேந்திர பிரசாத் வெற்றி..!

தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தல் – ஜெயசுதா தோல்வி – ராஜேந்திர பிரசாத் வெற்றி..!

தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் தேர்தல் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை மிகுந்த பரபரப்போடு நடந்து முடிந்திருக்கிறது.

நடிகர்கள் சங்கத் தேர்தலில் இந்த முறை ஜாதி மற்றும் ஆந்திரா, சீமந்திரா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்கிற ரீதியில் நடிகர்களே தங்களுக்குள் மறைமுகமாக மோதிக் கொண்டு புதிய அத்தியாயத்தைத் துவக்கி வைத்திருப்பதாக தெலுங்கு மீடியாக்கள் பரபரப்பாக செய்திகளை வெளியிட்டுள்ளன.

கடந்த மூன்று முறை இச்சங்கத்தின் தலைவராக நடிகர் முரளிமோகன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். முதல் இரு முறை போட்டியில்லாமல் ஜெயித்த நடிகர் முரளிமோகன் சென்ற முறை சிரஞ்சீவியின் மறைமுக ஆதரவோடு போட்டியிட்ட நடிகர் ராஜேந்திர பிரசாத்தை தோற்கடித்துதான் தலைவர் பதவியில் அமர்ந்தார்.

இந்த முறை தான் போட்டியிடப் போவதில்லை என்று அவர் முன்பேயே அறவித்திருந்தாலும் தலைவர் பதவிக்கு தகுதியான ஆள் கிடைக்காமல் முரளி மோகன் திண்டாடி கடைசி கட்டத்தில் நடிகை ஜெயசுதாவை களமிறக்கினார்.

maa-election-poster-4

ஜெயசுதாவுடன் நடிகை லட்சுமி மஞ்சு, பரிச்சூரி வெங்கடேஷ்வர்ராவ், தணிகெல்லா பரணி, நரேஷ், ரகு பாபு, ஹேமா போன்ற பிரபலங்களும் இருந்தனர். ஜெயசுதாவுக்கு முரளிமோகனும் சில சீனியர் நடிகர்களும் ஆதரவளித்திருக்கிறார்கள்.

maa-election-poster-3

ராஜேந்திர பிரசாத்தின் பின்னணியில் சிரஞ்சீவியின் குடும்பமே உழைத்திருக்கிறது. சிரஞ்சீவியின் சகோதர்ர் நடிகர் நாகேந்திரபாபுதான் ராஜேந்திர பிரசாத்தின் தேர்தல் குழு தலைவராக இருந்து அனைத்தையும் வழி நடத்தியிருக்கிறார்.

Rajendra-Prasad-1

இந்தச் சண்டையில் லட்சுமி மஞ்சு ஜெயசுதாவுக்கும், இவரது சகோதரர் விஷ்ணு மஞ்சு ராஜேந்திர பிரசாத்துக்கும் ஆதரவளித்து பரபரப்பாக்கியிருக்கிறார்கள். இவர்களது தந்தை மோகன்பாபு கடைசிவரையிலும் தனது ஆதரவை வெளிப்படையாக தெரிவிக்கவில்லையாம்.

maa-election-poster-7

தலைவர் மற்றும் செயலாளர் பதவிக்கு மட்டுமே இங்கே போட்டி ஏற்பட்டுள்ளது. லட்சுமி மஞ்சு மற்றும் சிவகிருஷ்ணா இருவரும் துணைத் தலைவர்களாகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பரிச்சூரி வெங்கடேஸ்வர்ராவ் பொருளாளராக போட்டியின்றி தேர்வானார். இதேபோல் தணிகெல்லா பரணி இணைத் தலைவராகவும்  நரேஷ், மற்றும் ரகுபாபு இருவரும் இணைச் செயலாளர்களாகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு பானர்ஜி, பிரமாஜி, சார்மி, ராஜேஷ்வர், ஏ.ஸ்ரீராம், கீதாஞ்சலி, ஹரிநாத் பாபு, ஹேமா, ஜாக்கி, ஜெயலட்சுமி, காதம்பரி கிரண், நரசிங் யாதவ், ராஜீவ் கனகலா, ஸ்ரீசஷாங்கா, வித்யாசாகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் தலைவர் பதவிக்கு ராஜேந்திர பிரசாத் மற்றும் ஜெயசுதா இடையேயும், செயலாளர் பதவிக்கு சிவாஜிராஜா மற்றும் அலி ஆகிய இருவருக்கும் இடையில் போட்டி ஏற்பட இவர்களுக்கு தேர்தல் நடந்துள்ளது.

கடந்த மாதம் 29-ம் தேதியே வாக்குப்பதிவு நடைபெற்றாலும் தேர்தலில் கள்ள ஓட்டு போடப்பட்டது என்றும் சில முறைகேடுகள் நடந்த என்றும் ஹைதராபாத் சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு போடப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த்து. அந்தத் தடை கடந்த 7-ம் தேதி விலக்கிக் கொள்ளப்பட்டு நேற்று முன்தினம் வாக்குகளை எண்ணி முடிவை வெளியிட கோர்ட் அனுமதி அளித்தது.

அதன்படி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுள்ளது. மொத்தமுள்ள 702 வாக்குகளில் 394 பேர்தான் வாக்களித்துள்ளனர். இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் ராஜேந்திர பிரசாத்திற்கு 237 வாக்குகளும், நடிகை ஜெயசுதாவிற்கு 152 வாக்குகளும் கிடைத்திருக்கின்றன. 85 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார் ஜெயசுதா.

Rajendra Prasad-2

இதேபோல் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் சிவாஜிராஜா தன்னை எதிர்த்து நின்ற நடிகர் அலியை 34 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். சிவாஜிராஜாவுக்கு 216 வாக்குகளும், எதிர்த்து நின்ற நடிகர் அலிக்கு 182 வாக்குகளும் பெற்றனர்.

வெற்றி பெற்றவுடன் வழக்கமான புகழுரையை போல “நாங்கள் எல்லாருமே ஒரே அணிதான். சின்ன நடிகர், நடிகையர் நலனுக்காக நாங்கள் இணைந்து உழைப்போம். போராடுவோம்…” என்று சொல்லியிருக்கிறார் புதிய தலைவரான நடிகர் ராஜேந்திர பிரசாத். ஆனாலும் கூடவே “கடந்த ஏழாண்டு காலமாக சங்கத்து பக்கமே தலை வைத்து படுக்காத ஜெயசுதா..” என்று அவரை கார்னர் செய்து கமெண்ட் அடித்துவிட்டார்.

இதைக் கேட்டு கோபமான ஜெயசுதா, ராஜேந்திர பிரசாத் அளந்து பேச வேண்டும். சங்கத்தில் அவரும், செயலாளரும் மட்டும்தான் ஓரணி. மற்ற அனைவருமே எனது அணியைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்..” என்று எச்சரித்திருக்கிறார்.

எது எப்படியோ.. தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தும்  ஏழாண்டுகளுக்கு முன்பாக சங்கத் தேர்தலில் தோல்வியடைந்த்தை அவமானமாக கருதி ஒதுங்கியிருந்த நடிகர் சிரஞ்சீவிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இத்தனையாண்டுகள் கழித்து ஒரு திருப்தி இதன் மூலமாகக் கிடைத்திருக்கிறது..!

Our Score