full screen background image

“கமல்ஹாசன் என்ன அல்டிமேட்டா? விமர்சிக்கக் கூடாதா..?” – நடிகர் ராதாரவியின் கோபம்..!

“கமல்ஹாசன் என்ன அல்டிமேட்டா? விமர்சிக்கக் கூடாதா..?” – நடிகர் ராதாரவியின் கோபம்..!

நடிகர் சங்கத் தேர்தலையொட்டி சரத்குமார் தரப்பு தனது அணியினரின் சிறப்புக் கூட்டத்தை இன்று மதியம் 4 மணிக்கு கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் நடத்தினர்.

கூட்டத்தில் நடிகர் ராதாரவி பேசும்போது எப்போதும்போல் கிண்டலாகவும், நக்கலாகவும், தரக்குறைவாகவும், ‘அவனே’, ‘இவனே’, ‘வாடா’, ‘போடா’ என்றும் பல நடிகர்களை ஒருமையில் அழைத்து பேசினார். கொஞ்சம் எல்லை மீறியும் பேசினார்.

அவர் பேசுகையில், “நான் ஆரம்பத்துலேயே சொல்லிட்டேன். பொதுக்குழுவுக்கு வராதவங்களுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்னு.. பொதுக்குழுவுக்கு வராதவங்க கேள்வி மட்டும் எதுக்கு கேக்குறாங்க. இதைத்தான் அவங்களும் இப்போவரைக்கும் புடிச்சிட்டுத் தொங்குறாங்க. எனக்கு யாரைப் பத்தியும் கவலையில்லை.. கேள்வி கேவலமா இருந்தால் என் பதிலும் கேவலமாத்தான் இருக்கும்.

நாமதான் ஜெயிக்கப் போறோம். இதுல எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அதையும் மீறி தோற்றால் அது ராதாரவியால்தான்.. ஜெயித்தாலும் ராதாரவியால்தான். ஆனால் ஒண்ணு தெரிஞ்சுக்குங்க.. இந்த தேர்தல்ல நாம ஜெயிச்சா நல்லது உங்களுக்கு.. தோற்றால் நல்லது எங்களுக்கு.

என்னை வெட்டியான்னு விஷால் சொல்றாரு. வெட்டியான்னா சாதாரண ஆளுன்னு நினைச்சிட்டாரு. உன் வீட்லேயும் சாவு வரும். அப்போ வெட்டியான் எதுக்குன்னு தெரிஞ்சுக்குவ.. அவன் இ்லலைன்னா பொணத்தை எத்தனை நாள் வைச்சிருப்ப..? வீடு நாறிரும்.  நடிகர் சங்க, நாடக நடிகர்களின் மரணத்திற்கு நான் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவதால் எனக்கு இந்த நல்ல பெயர்.

18 வயசுல நடிக்க வந்தேன். இ்பபோ எனக்கு வயது 63. அப்போ நீங்க எல்லாம் எனக்கு முன்னாடி சின்னப் பையன்கள்.  என் பையனை சங்கத்துல சேர்த்துட்டேன்னு புகார் சொல்றாங்க. ராதிகா பொண்ணை சேர்த்திருக்காங்கன்னு சொல்றாங்க. ஆமாம். சேர்த்தோம். நாங்க இல்லைன்னு சொல்ல்லியே..? எங்க புள்ளைய நாங்க சேர்க்காம வேற யாருய்யா சேர்ப்பாங்க..? உங்க புள்ளைய நாங்க சேர்க்க முடியுமா..? அப்புறம் உன் குடும்பத்துல குழப்பம் வந்திராது..?

கமலை பற்றி விமர்சிக்கலாமா என்று கேட்கிறார்கள். கமல் என்ன சினிமாவுக்கு அல்டிமேட்டா..?  சினிமால யாரும் நிரந்தரம் கிடையாது. கமலும், நானும் அரை டிரவுசர் காலத்திலிருந்தே நண்பர்கள். இருவரும் மாறி மாறி கெட்டவார்த்தையில் ஒருவரையொருவர் திட்டிக் கொள்வோம். இதெல்லாம் எங்களுக்குள்ள சகஜம்தான்..

நான் கோடிக்கணக்குல பணம் வாங்கினதா எஸ்.வி.சேகர் பேசுறான். அவன் எவ்வளவு வாங்கினான்னு எனக்குத் தெரியாது. அவன் அந்த மீட்டிங்ல சொல்றான்.. எங்கப்பா நடிகர் சங்கத்துல மெம்பரே இல்லையாம். இருந்தாலும் அவருடைய திரையுலக பங்களிப்புக்காக அவரோட போட்டோவை மேடைல வைச்சிருக்கோம்ன்னு.. மொதல்ல இவனுக்கு நடிகர் சங்க வரலாறு என்னன்னு தெரியுமா..? இந்த நடிகர் சங்கத்துல கட்டிடம் கட்டுறதுக்காக நாடகம் போட்டு பணம் வசூல் செய்து கொடுத்தவர் எங்கப்பா ராதாரவி. வரலாறு தெரிஞ்சுக்கிட்டு பேசணும்.

நாசர் சொல்றாரு. இவரை நான் அவர், இவர்ன்னு இப்போதுவரைக்கும் மரியாதையா கூப்பிட்டுக்கிட்டிருக்கேன். இதை அவர் புரிஞ்சுக்கணும். அவர் சொல்றாரு.. நடிகர் சங்கத்தின் நிதிக்காக ஒரு கோடி ரூபாய் கொடுக்க வந்தேன்னு.. இப்போ சொல்றேன்.. நாசர் ஒரு உண்மையான முஸ்லீமா இருந்தால்.. ஐந்து வேளையும் தொழுகும் முஸ்லீமாக இருந்தால்.. நேர்மையானவராக இருந்தால் அவர் கொடுக்க வந்ததை அவர் நிரூபிக்க வேண்டும்..!

யதார்த்தம் பொன்னுச்சாமி அண்ணன்கூட நடிச்ச அவரோட நண்பர் ஒருத்தர் இப்பவும் உசிரோட இருக்காரு. இவரை நான்தான் சங்கத்துல சேர்த்தேன். இவர் வீட்டுக்குப் போன விஷால் டீம் ‘பத்தாயிரம் தர்றோம். எங்களுக்கு ஓட்டுப் போடுங்க’ன்னு சொல்லியிருக்காங்க. இவர் ‘முடியாது’ன்னு சொன்னதும் ‘பதினைஞ்சாயிரம் கொடுக்குறோம். போடுங்க’ன்னு கேட்டிருக்காங்க. அவர் ‘என் கைல ராதாரவி பேரை பச்சைக் குத்தியிருக்கேன். அதெல்லாம் செய்ய மாட்டேன்’னு சொல்லியிருக்காரு. எதுக்கு இந்தக்  கேவலம்..?

தற்போது ஒரு பூச்சிதான் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது. சட்டைக்கு மேல் ஒரு பூச்சி இருந்தால் அதை தட்டி விட்டுவிடுவோம். அதே பூச்சி கழுத்தில் உட்கார்ந்து கடித்தால் அதை நசுக்கத்தானே செய்வோம்.

அதேபோல், ஒரு மோசமான பூச்சி எனது பேண்ட்டுக்குள் நுழைந்து கடித்தால், இங்கு எனது பேண்டை கழற்ற முடியாது. நான் தற்போது நான் மேடையில் நின்று கொண்டிருக்கிறேன். இங்கிருந்து வெளியே சென்றதும், அந்தப் பூச்சியைப் பிடித்து, நீதானே கடித்தாய் எனக் கூறி அதை நசுக்கிவிடுவேன்.

இப்போது 950 பேர் இந்தக் கூட்டத்துக்கு கையெழுத்து போட்டுட்டு உள்ள வந்திருக்காங்க. இதைக் கேள்விப்பட்டால் ஓட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுப்பவர்கள் பதினைஞ்சாயிரம் ரூபாய் வாங்குவார்கள். அதேபோல், 18-ம் தேதி இரவோடு அவர்களது ஆட்டம், பா்ட்டம், கொண்டாட்டம் எல்லாம் முடிந்துவிடும், அப்புறம் அனைவரையும் நசுக்கி விடுவேன்…” என்றார்.

Our Score