“என் எதிர்காலத்தை எழுதியது கே.பி.யின் கைகள்..” – பிரகாஷ்ராஜின் உருக்கம்..!

“என் எதிர்காலத்தை எழுதியது கே.பி.யின் கைகள்..” – பிரகாஷ்ராஜின் உருக்கம்..!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருடனான தனது அனுபவங்கள் பற்றி ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் உருக்கமாக பேட்டியளித்திருக்கிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்.

தனது பேட்டியில், ”நடிகை கீதா என் தோழி. பாலசந்தரின் ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தில்  நடித்துக் கொண்டிருந்தார். அவர் மூலமாக பாலசந்தர் சார் ஆபீஸ் வாசலில் போய் நின்றேன். அப்போது எனக்கு தமிழ் தெரியாது. ‘ஏதாவது பேசு’ என்றார் கே.பி. கன்னடத்தில் உள்ள ஒரு நாட்டுப்புறக் கதையை ஆங்கிலத்தில் சொல்ல ஆரம்பித்ததும், என்னை நிமிர்ந்து பார்த்தார். நான் நாடகக்காரன் எனத் தெரிந்ததும் அவர் முகம் மலர்ந்தது. ‘நானும் நாடகத்துல இருந்துதான் வந்தேன்’ என சந்தோஷமாகச் சொல்லிட்டு கிளம்பிட்டார்.

அப்போ ‘ஜாதி மல்லி’ படம் ஆரம்பிக்க இருந்தது. ‘பத்து நாள்ல ஷூட்டிங் இருக்கு. ஆனா, இந்தப் படத்துல ரோல் இல்ல. சார் அப்புறம் கூப்பிடுவாரு’னு சொல்லிட்டாங்க. ஏமாற்றத்துடன் ஊருக்குத் திரும்பினேன்.

ஆறு மாதங்கள் கழித்து ஒரு நாள், ‘பாலசந்தர் சார் பேசணுமாம். போன் பக்கத்துல இரு’ன்னு என நண்பன் சொன்னான். சில நிமிடங்களில் போன் ஒலித்தது. ‘நான் பாலசந்தர் பேசுறேன். எப்போ சென்னைக்கு வர முடியும்..?’ என கேட்டார். ‘இப்போ கிளம்புறேன் சார்’ என சொல்லிட்டு சென்னைக்கு 42 ரூபாய் ரயில் டிக்கெட் எடுத்தேன். செலவுகள் போக கையில் 140 ரூபாய்தான் இருந்தது.

‘இன்னும் ரெண்டு மாதங்கள்ல ‘டூயட்’ பட ஷூட்டிங். தமிழ் கத்துக்கோ. பிரகாஷ் ராய் சரியா இருக்காது. ‘பிரகாஷ்ராஜ்’னு பேரை மாத்திக்கோ’ எனப் பெயர் சூட்டினார். திடீரென ஊரில் என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. உடனடியா போகணும் என்ற நிலை. காலையில் அவர் வீட்டுக்கே போனேன். ‘என்ன?’ என்றார். விஷயத்தைச் சொன்னதும், ‘பணம் இருக்கா?’னு கேட்டார். எத்தனை முகங்களைப் பார்த்திருப்பார்..? 15 ஆயிரம் ரூபாய் எடுத்து நீட்டினார். என் கண்கள் கலங்கிவிட்டன. பிள்ளையின் பசி அறியும் தாயைப்போல இருந்தது அவரின் அந்தப் பரிவு.

‘டூயட்’ ஷூட்டிங் ஆரம்பமானது. அவர் பாராட்டுகிற மாதிரி நடித்துவிட வேண்டும் என முடிவு செய்து, என் சம்பந்தப்பட்ட காட்சிக்கு பயிற்சி எடுத்தேன். முதல் நாள் ஷூட்டிங். மனம் நடுங்கியது. ‘ஆக்சன்’ என்ற வார்த்தை ஒலித்தது. சில வரிகள் இல்லாமல், மொத்தக் காட்சியின் வசனங்களையும் நடித்துக் காட்டினேன். ‘சபாஷ்’ என்றார். அதுவரை இருந்த வசனங்களை மாற்றி, அங்கேயே புதிதாக எழுதினார்.

அவர் எழுதி இருந்த வசனத்தின் முதல் வரி இதுதான்… ‘நான் சிற்பி; நடிகன்; காற்று நுழையாத இடத்தில்கூட என் புகழ் பரவிக் கிடக்கும்.’ எனக்கு வசனத்தின் அர்த்தம் புரியவில்லை. அவரிடமே கேட்டேன். ‘இது வசனம் அல்ல. உன் எதிர்காலம்’ எனச் சொல்லிச் சிரித்தார்.

என் எதிர்காலத்தை அப்போதே எழுதிய அந்தக் கைகளை, அவரைச் சந்திக்கும்போதெல்லாம் பற்றிக் கொள்வேன். அவர் மரணித்த அன்று, என் எதிர்காலத்தை எழுதிய கைகள் அசைவற்றுக் கிடந்ததைப் பார்க்க மனம் பதறியது. தோள்களில் தன்னைச் சுமந்து திரிந்த மேய்ப்பனைத் தொலைத்த இந்த ஆடு, இப்போது திகைத்து நிற்கிறது..!” என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

Our Score