மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடிக்கும் ‘பொண்ணு  மாப்பிள்ளை’ படம்..!

மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடிக்கும் ‘பொண்ணு  மாப்பிள்ளை’ படம்..!

மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்து உருவாகியிருக்கும் ‘பொண்ணு மாப்பிள்ளை.’

இப்படத்தை ஜம்பாரா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர்கள் தர்மராஜ் வேலுச்சாமி மற்றும் ஆர்.லிங்கதுரை தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் மாஸ்டர் மகேந்திரன்  நாயகனாகவும் புதுமுகம் ரூபிகா நாயகியாகவும் நடித்துள்ளனர்.  சத்யன் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் வடிவுக்கரசி, நந்தகுமார், ஆர்த்தி , நெல்லை சிவா, கிரேன் மனோகர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு எம். ராஜேந்திரன். இசை ஏ.ஜே.அலிமிர்ஸாக். இவர் எங்கள் படம் வெளி வருவதற்குள்  ‘வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ உட்பட மூன்று படங்களில் இசையமைத்து வருகிறார் . பாடல்கள் – சேட்டிபாலன். படத் தொகுப்பு –  வி.எம்.உதயசங்கர், கலை இயக்கம் – ஞானம். இப்படத்தை சேட்டி பாலன் எழுதி இயக்கியிருக்கிறார்.  

இந்தப் படம் பற்றி தயாரிப்பாளர் தர்மராஜ் வேலுச்சாமி கூறும்போது, “நான் கிராமத்திலிருந்து ஒரு இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு சென்னை வந்தேன். ஆனால் சந்தர்ப்பவசத்தால் நான் தயாரிப்பு நிர்வாகி ஆகிவிட்டேன்.

இந்த சினிமாவில் 25 ஆண்டு காலம் சுமார் 40 படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றியிருக்கிறேன். ‘நேசம்’, ‘ஏழ்மையின் சிரிப்பில்’, ‘சபாஷ்’ போன்ற இயக்குநர் கே.சுபாஷின் படங்களில் நான் பணியாற்றி இருக்கிறேன். இப்படி அவரிடம் நான் 12 ஆண்டு காலம் பணியாற்றி இருக்கிறேன்.

கின்னஸ் சாதனை படைத்த ‘சுயம்வரம்’ படத்திலும் பணியாற்றியிருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் ‘சமஸ்தானம்’, ‘பாபா’, ‘கஜேந்திரா’ போன்ற பெரிய பட்ஜெட் படங்களில் பணியாற்றிய அனுபவமும் எனக்கு உண்டு.

இத்தனை படங்களில் பணியாற்றிய அனுபவத்தில்  ஒரு தயாரிப்பு நிர்வாகியாக இருந்து ஒரு படத்தின் ஆரம்பம் முதல் கடைசிவரையிலான படத்தின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து சினிமாவைப் புரிந்து கொண்டிருக்கிறேன். இயக்குநராக வேண்டும் என்ற கனவில் இருந்த எனக்கு ஒரு படத்தைத் தயாரிக்க, இப்போது காலம் கனிந்துள்ளது.

 நாங்கள் நண்பர்கள் சேர்ந்து கிரவுட் பண்ட் மூலம் தயாரிப்பதாக இருந்தோம். பலரும் அதில் இறங்கத் தயங்கவே நானே துணிந்து இறங்கி இந்த படத்தைத் தயாரித்துள்ளேன்.

இயக்குநர் சேட்டி பாலன்  கூறிய படத்தின் கதை எனக்குப் பிடித்துப் போனதால் அவரை இயக்க வைத்து இந்தப் படத்தை எடுத்து முடித்து இருக்கிறேன். படத்தின் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் தூத்துக்குடி, மணப்பாடு பகுதிகளிலும் மற்றும் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் எடுத்து  முடித்திருக்கிறோம்.

எனக்குத் தயாரிப்பு நிர்வாகியாக அனுபவம் இருந்ததால் 57 நாட்களில் ஒரு நாளையும் வீணாக்காமல்  நேரத்தைப் பொன்னாக மதித்துப் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறோம்.

முதல் படம் என்பதால் பொருட்செலவினைப் பற்றிக் கவலைப்படாமல் சரியாகத் திட்டமிட்டு படத்தை முடித்து இருக்கிறோம்.

இந்தக் காலத்துக்கு ஏற்ற கிராமத்துக் காதல் கதையாக உருவாகியிருக்கும் படம்தான் இந்த பொண்ணு மாப்பிள்ளை.’

இப்பொழுது கிராமங்கள் மாறிவிட்டன. கிராமத்து மனிதர்களும் அவர்களுக்குள் மலரும் காதலும் மாறிவிட்டது. இந்தக் காலத்துக்கேற்ற கிராமத்துக் காதல் கதையாக  உருவாகி இருக்கிறது இந்தத் திரைப்படம்.” என்றார் தயாரிப்பாளர் தர்மராஜ் வேலுச்சாமி.

இந்தப் படத்திற்கு நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக ஊடகமான ட்விட்டர் பக்கத்தில் “பதினாறும் (Collection)பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகள்” என்று தயாரிப்பாளர்கள் தர்மராஜ் வேலுச்சாமி மற்றும் ஆர்.லிங்கதுரையை வாழ்த்தியுள்ளார். மேலும், “கதாநாயகனாக நடித்துள்ள மாஸ்டர் மகேந்திரனுக்கும் இப்படம் ஒரு வெற்றிப் படமாக அமையட்டும்…” என்றும் வாழ்த்தியிருக்கிறார்.

இந்தப் படம் 2021 டிசம்பர் வெளியீடாக வெளிவர இருக்கிறது.

Our Score