எம்.ஜி.ஆர். என்னும் வள்ளல்..! – நடிகர் மயில்சாமி பேச்சு

எம்.ஜி.ஆர். என்னும் வள்ளல்..! – நடிகர் மயில்சாமி பேச்சு

‘வஜ்ரம்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர், நலிந்த தயாரிப்பாளர்கள் 10 பேருக்கு நிதியுதவி வழங்கினார். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தாணுவும், செயலாளர் டி.சிவாவும் இந்த நிதியுதவிகளை தயாரிப்பாளர்களுக்கு வழங்கினார்கள்.  

பின்பு நடிகர் மயில்சாமி இது பற்றி பேசும்போது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றிய ஒரு விஷயத்தையும் பகிர்ந்து கொண்டார்.

“புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உடல்நலமில்லாமல் புரூக்ளின் மருத்துவமனையில் படுத்திருந்த நேரம். அவருக்கு நினைவுகள் வருவதும், போவதுமாக இருந்த நேரம். அப்போது அமெரிக்காவில் இருந்த நடிகை மஞ்சுளா எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.

மருத்துவர்கள் மஞ்சுளாவை காட்டி எம்.ஜி.ஆரிடம் இவர் யாரென்று தெரிகிறதா என்று கேட்டிருக்கிறார்கள். அவரும் உற்றுப் பார்த்துவிட்டு சலனமேயில்லாமல் இருந்திருக்கிறார். ‘இவங்க மஞ்சுளா’ என்று மருத்துவர்கள் சொன்னவுடன், ‘ஓ மஞ்சுளா.. என்கூட நடிச்சாங்களே?’ என்றாராம் எம்.ஜி.ஆர். தொடர்ந்து மஞ்சுளா எம்.ஜி.ஆருடன் பேசும்போது சில நிமிடம் நன்றாகவும், சில நிமிடம் ஆள் யாரென்றெ தெரியாதவராகவும் பேசியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

மஞ்சுளா அங்கேயிருந்து கிளம்பும்போது எம்.ஜி.ஆர். அவரிடம் ‘கொஞ்சம் இரு’ என்று சைகை காட்டவிட்டு தன் தலையணைக்குக் கீழே இருந்து கத்தையாக டாலர் நோட்டுக்களை எடுத்து மஞ்சுளாவின் கையில் கொடுத்தாராம்.. இதை மஞ்சுளா அம்மாவே என்கிட்ட சொன்னாங்க.

எப்படின்னு யோசியுங்க.. ஆள் யாருன்னே தெரியாத நிலைமையிலேயும் தானம் கொடுக்குறதை மட்டும் மறக்காம இருக்காருன்னு அவரை மாதிரி இனிமேல் யார் வருவா..?” என்றார் மயில்சாமி.

Our Score