“ராஜகுமாரி தியேட்டர் அருகே பிளாட்பாரத்தில் படுத்திருந்தேன்..” – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மலரும் நினைவுகள்..!

“ராஜகுமாரி தியேட்டர் அருகே பிளாட்பாரத்தில் படுத்திருந்தேன்..” – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மலரும் நினைவுகள்..!

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்து, இயக்கி நடித்திருக்கும் ‘டூரிங் டாக்கீஸ்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று காலை வடபழனி ஆர்.கே.வி. பிரிவியூ தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது ஆரம்ப கால வாழ்க்கையை பகிர்ந்து கொண்டார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, “நான் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கவில்லை. கதையின் கதாபாத்திரங்களில் ஒருவன். அவ்வளவுதான். சென்னைக்கு வந்து சினிமாவில் சேர வேண்டுமென்பதற்காக பாண்டிபஜார் ‘ராஜகுமாரி’ தியேட்டர் அருகில் மூன்றாவது பிளாட்பாரத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள் படுத்திருந்தேன். இப்போதும் அந்தப் பக்கமாக போனால் அந்த இடத்தைப் பார்த்துக் கொண்டேதான் செல்வேன்.

அப்போதெல்லாம் சாப்பாட்டுக்கூட காசில்லாமல் வெறும் தண்ணியை மட்டுமே குடித்து வாழ்ந்தவன் நான். சினிமாவையே நான் சுவாசித்துக் கொண்டிருந்ததால்தான் என்னால் உயிரோடு இருக்க முடிந்தது.

இந்த வயதிலும் உழைக்க வேண்டுமா என்று கேட்கிறார்கள். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் மருத்துவமனைக்கு செல்வதற்கு முந்தைய நாள்வரையிலும்கூட தனது அடுத்தப் படத்திற்காக உழைத்துக் கொண்டிருந்திருக்கிறார். நான் இனிமேலும் உழைக்க நினைப்பதில் தவறென்ன..?

இந்தப் படத்தை என்னுடைய முதல் படம்போல நினைத்து உருவாக்கியிருக்கிறேன். ஒரு படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதற்காக இன்றைய இளம் இயக்குநர்கள் எடுத்த படங்களை போட்டுப் பார்த்து கற்றுக் கொண்டிருக்கிறேன். அதுவும் ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கி படத்தை எடுத்திருந்தவிதம் என்னை ரொம்பவே பாதித்த்து. தம்பி என்னிடம் துப்பாக்கி படத்தின் கதையைச் சொல்ல வந்தார். இடைவேளையில் அவர் நிறுத்தியபோது நான் எழுந்து சென்று அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டேன். அந்த அளவுக்கு என்னை மிகவும் கவர்ந்த ஸ்கிரிப்ட் அது. இவர் போன்ற இளம் இயக்குநர்களிடமிருந்துதான் நான் இப்போது கற்றுக் கொண்டு வருகிறேன்.

எத்தனை படங்கள் எடுத்திருக்கேன் தெரியுமா என்று பழைய கதையைச் சொல்லிக் கொண்டே இருந்தால் போதாது. புது இயக்குநர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும் தயங்கக் கூடாது. அப்படி நான் கற்றுக் கொண்டு எடுத்த படம்தான் இந்த ‘டூரிங் டாக்கீஸ்’.  இந்த படத்தை வெற்றியடையச் செய்த பிறகு இதை எல்லா மொழிகளிலும் எடுக்க இருக்கிறேன்.

இனிமேல் நான் படங்களை இயக்கவே மாட்டேன். இதுதான் எனது இயக்கத்தில் வெளிவரும் கடைசி படம். இனி இளம் இயக்குநர்களை வைத்து புதிய படங்களை தயாரிக்க மட்டுமே செய்வேன்..” என்றார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

Our Score