full screen background image

‘டாப்சி’ அமைப்பின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நடிகர் மன்சூரலிகான்

‘டாப்சி’ அமைப்பின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நடிகர் மன்சூரலிகான்

‘பெப்சி’ அமைப்புக்கு மாற்றாக சில ஆண்டுகளுக்கு முன்பு தான் தொடங்கிய ‘டாப்சி’ அமைப்பின் தலைவர் பதவியை உதறினார் நடிகர் மன்சூரலிகான்.

 தமிழ் சினிமாவின் படப்பிடிப்புகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் பெப்சி’ என்ற கூட்டமைப்பின் மூலம் செயல்பட்டு வந்தனர். பெப்சி அமைப்பினரின் ஆதரவு இல்லாமல் எந்த பெரிய நடிகரின் படமும் படபிடிப்புகளை நடத்த முடியாத சூழல் நிலவி வந்தது. இதன் மூலம் சிறு பட தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர்.

இந்தச் சூழலில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர், தயாரிப்பாளர் மன்சூரலிகான் ‘அதிரடி’ என்ற படத்தை தொடங்கினார். அப்போது பெப்சி’ தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மன்சூர் அலிகான் தலைமையில் ‘டாப்சி’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

சுமார் 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த நேரத்தில் இந்த அமைப்பை உருவாக்கிய நடிகர் மன்சூரலிகான் அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை இது : 

“2 ஆண்டுகளுக்கு முன்பு நான் தயாரித்த ‘அதிரடி’  படத்தின்போது எனக்கு ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக ‘டாப்சி’ என்ற அமைப்பை தொடங்கி அதன் தலைவராக இருந்து வந்தேன்.

தற்போது பிரதமர் மோடியின் பண மதிப்பு மாற்ற கொள்கையின் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் பெரும்பாலும் குறைந்துவிட்டன. படப்பிடிப்புகள் நடக்காததால் தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கிறார்கள். இந்த டாப்சி அமைப்பில் 700 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு வேலை தரவேண்டியது அவசியமாகிறது.

அதோடு, பெப்சி அமைப்போடு இணக்கமான சூழலில் பல படங்களில் நான் பணியாற்ற வேண்டியிருப்பதாலும், வரப் போகும் தயாரிப்பாளர் சங்க தேர்தல், நடிகர் சங்கம் உட்பட பல்வேறு திரைத்துறை அமைப்புகளில் நடைபெற உள்ள தேர்தல்களில் போட்டியிட உள்ளதாலும் நான் உருவாக்கிய இந்த ‘டாப்சி’ அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்திருக்கிறேன்.

முறைப்படி தலைவர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்தாலும் சாதாரண உறுப்பினராக தொடர்ந்து நான் நீடிப்பேன். பெப்சி அமைப்புகளில் பல்வேறு அதிரடிகளை தொடர வேண்டியிருப்பதால்தான் இந்த  முடிவினை நான் எடுத்திருக்கிறேன். நான் வெளியில் இருந்தால்தான் பலருக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்ய  முடியும்…” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் மன்சூரலிகான்.

இவர் மானஸ்தன்.. நியாயவான். நேர்மையாளன்.. இன்னும் சிலர் இருக்கிறார்களே..? பதவிக் காலம் முடிந்தும் அவரவர் சங்கத்தின் தேர்தலைக்கூட நடத்த மனமில்லாமல் இன்னமும் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்..!

என்ன செய்ய..? வில்லன்களெல்லாம் ஹீரோக்களாக தோன்றும் காலமிது..!

Our Score