திரைத்துறையில் அனைத்துத் தொழில் நுட்பங்களையும் அறிந்தவராக, பன்முகத் திறமையாளராக வலம் வரும் நடிகர் கார்த்தி, தற்போது மூன்று பிரம்மாண்டமான படங்களில் இரவு, பகலாக உழைத்து வருகிறார்.
கார்த்தியின் 25-வது படமான ‘ஜப்பான்’ படத்தின் ‘டாக்கி போர்ஷன்’ எனப்படும் வசனப் பகுதிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், பல விருதுகளை வென்ற திரைப்பட இயக்குநர் ராஜு முருகன், கார்த்தியின் இந்த 25-வது படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளரான ரவி வர்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
‘ஜப்பான்’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார், மேலும் ஒரு பாடல் காட்சியைப் படமாக்க பல கோடி மதிப்பிலான செட் அமைக்கப்படவுள்ளது.
இடையில் கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமியின் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பில் இந்த ஆகஸ்ட் மாதம் கார்த்தி கலந்து கொள்ளவிருக்கிறார்.
இடையில், ‘ஜப்பான்’ படத்தின் கடைசி பாடல் காட்சிக்காகவும் நேரம் ஒதுக்கியுள்ளார். இந்தப் பாடல் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அக்டோபர் மாதத்திற்குள் நலன் படத்தின் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளார் கார்த்தி.
இந்த இரண்டு பெரிய படங்களை முடித்த பிறகு வரும் நவம்பரில் தனது 27-வது படத்தில் இயக்குநர் பிரேம் குமார் உடன் இணைந்து பணியாற்றவுள்ளார் கார்த்தி.
‘கார்த்தி-27′ என்ற இந்தப் படத்தில் நடிகர் அரவிந்த் சுவாமியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், முன்னணி ஆளுமையான பி.சி.ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2-டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த ‘கார்த்தி-27′ – படத்தினை தயாரிக்கிறது.
2022-ம் ஆண்டில் ‘பொன்னியின் செல்வன்-1′, ‘விருமன்’ மற்றும் ‘சர்தார்’ என மூன்று பிளாக் பஸ்டர்களை தந்ததன் மூலம் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் செல்லப் பிள்ளையாக மாறியுள்ளார் கார்த்தி.
மேலும் 2023-ம் ஆண்டை ‘பொன்னியின் செல்வன்-2′ எனும் ப்ளாக் பஸ்டர் வெற்றியுடன் துவங்கியுள்ளார். அடுத்ததாக ‘ஜப்பான்’ தீபாவளிக்கு பிரம்மாண்டமாக வெளி வரத் தயாராகி வருகிறது.
கார்த்தி இந்த ஆண்டிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால், தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
படப்பிடிப்புக்கு முன்பாகவே சிறந்த OTT தளங்கள், சாட்டிலைட் சேனல்கள், மியூசிக் லேபிள்கள் மற்றும் முக்கிய விநியோகஸ்தர்களிடமிருந்து வியாபார அழைப்பு வரப் பெற்று, லாபகரமான ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ளன.
ப்ரீ ரிலீஸ் பிசினஸ் எனப்படும், பட வெளியீட்டுக்கு முன்பான வியாபாரத்தில் தற்போது நடிகர் கார்த்தியின் படங்கள் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது. தொடர்ந்து, தீவிரமாகப் படங்களில் கார்த்தி நடித்து வருவது திரைத்துறையினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.












