full screen background image

டைனோசர்ஸ் – சினிமா விமர்சனம்

டைனோசர்ஸ் – சினிமா விமர்சனம்

இப்படத்தை கேலக்ஸி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சீனிவாஸ் சம்பந்தம் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் உதய் கார்த்திக், ரிஷி ரித்விக், சாய் பிரியா, யாமினி சந்தர், மாறா, ஜானகி, அருண் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்தில் 120 பேர் வசனம் பேசி நடித்துள்ளனர்.

இசை – போபோ சசி, ஒளிப்பதிவு – ஜோன்ஸ் வி.ஆனந்த், படத் தொகுப்பு – ஆர்.கலைவாணன், சண்டை இயக்கம் – ஸ்டன்னர் சாம், பாடல்கள் – எம்.ஆர்.மாதவன், கலை இயக்கம் – ஆர்.வலம்புரிநாதன், ஒலி வடிவமைப்பு – ஏ.எம்.செந்தமிழன், எஸ்.சதீஷ்குமார், ஒப்பனை – தாஸ், நடன இயக்கம் – தாஸ்தா, உடைகள் வடிவமைப்பு – ராதிகா சிவா, உடைகள் – கடலூர் எம்.ரமேஷ், புகைப்படங்கள் – தேனி சீனு, சுதாகர், பத்திரிக்கை தொடர்பு – சதீஷ்(எய்ம்), விளம்பர வடிவமைப்பு – தண்டோரா.

இப்படத்தை புதுமுக இயக்குநரா எம்.ஆர்.மாதவன் இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர் சுராஜின் உதவி இயக்குநராவார்.

இதுவரை சிறுத்தை’, ‘புலி’, ‘சிங்கம்’ என்ற வார்த்தைகள்தான் படப் பெயர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்தப் படத்திற்கு ‘டைனோசர்ஸ்’ என்று ஏன் வைத்திருக்கிறார்கள் என்றால் ‘Die No Sirs’ என்பதுதான் இதன் விளக்கம். அதாவது “நான் சாக விரும்பவில்லை சார்” என்பதுதான் தலைப்பின் அர்த்தம். 

ஊரையே நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கிற தாதாவானாலும், அவருக்குத் தலை வணங்காத ஒருவன், அந்த தாதாவின் கண்களுக்கு டைனோசராக தெரிவான் என்பதை இப்படி மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த ‘டைனோசர்ஸ்’ ஒரு கேங்ஸ்டர் கதை. வடசென்னைதான் கதையின் களம். சாலையார்’ என்ற மானெக்சா, ‘கிளியப்பன்’ என்ற கவின் ஜெய்பாபு. இந்த இரண்டு தாதாக்களும் வட சென்னையை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

இதில் கிளியப்பனின் மச்சானான மனோகரனை சாலையாரின் அடியாட்கள் கொலை செய்துவிடுகிறார்கள். அவர்கள் உயிருக்கு கிளியப்பனால் ஆபத்து வரலாம் என்பதாலும், அந்தப் பகுதிக்கு புதிய துணை கமிஷனராக வந்தவரின் நேரடி மிரட்டலாலும் அவர்களில் 7 பேரை சரணடைய வைக்கிறார் சாலையார்.

ஆனால் 8-வது கொலையாளியான துரை என்ற மாறாவுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்திருப்பதால், அவனுக்குப் பதிலாக தான் சிறைக்குப் போகிறார் மாறாவின் நெருங்கிய நண்பனான தனா என்ற ரிஷி.

இதன் பிறகு ஒரு புதிய அஸைண்மெண்ட்டுக்காக கிளியப்பன், சாலையாருடன் கூட்டணி வைக்கிறார். இதற்குண்டான தண்டப் பணத்தை வசூல் செய்வதற்காக சாலையார் தனது ஆட்களுடன் மாறாவையும் அனுப்பி வைக்கிறார்.

சாலையாரின் கூட்டாளி ஒருவன் அங்கே மாறாவைப் பார்த்துவிட்டு கிளியப்பனிடம் போட்டுக் கொடுக்க… கிளியப்பனின் ஆட்கள் மாறாவைப் படுகொலை செய்கிறார்கள். இந்த இடத்தில் எதிர்பாராதவிதமாக மாறாவின் படுகொலைக்குக் காரணமாகிறார் படத்தின் நாயகனான மண்ணு’ என்ற உதய்.

ஏற்கெனவே தாதாயிஸம் என்றாலே முகத்தைச் சுழிக்கும் மண்ணு, இந்தப் படுகொலையைப் பார்த்துவிட்டு இதற்குப் பழி தீர்க்க முனைகிறான். இதற்காக சிறையில் இருக்கும் தனாவும் உதவிகள் செய்ய… இத்திட்டம் பலித்ததா..? மண்ணு என்னவானான்…? சாலையார், கிளியப்பன் இருவரின் நிலைமையும் என்ன என்பதுதான் இந்த ரவுடியிஸ படத்தின் திரைக்கதை.

அறிமுக நாயகன் மண்ணுவாக நடித்திருக்கும் உதய் கார்த்திக்கின் நடிப்பு ஈர்ப்பாகத்தான் உள்ளது. வடசென்னைக்கேற்ற முகமாகவும், அசால்ட்டு சேது’ நடிப்புக்கும் தோதான கட்டுடலுடனும் நடித்துள்ளார்.

சாலையார் கோஷ்டியின் தளபதி மண்ணுவை தன்னுடைய அடியாள் டீமுக்குள் இழுக்க முயலும்போது பதிலடி கொடுத்து தப்பிக்கும் காட்சிகளும் ரசனையானவைதான்.

ஆனால் படம் முழுக்க, பேசிப் பேசிய கொல்லும் மண்ணு, மாறாவின் சாவு நிகழ்ச்சியில் குடித்துவிட்டு போலீஸிடமும், சாலையாரிடமும் நக்கலடிக்கும் காட்சிகள் மிக நீளமாகி போர் அடிக்கிறது. கத்திரி போட்டிருக்க வேண்டிய காட்சி இது. மேலும் தன் கூட்டாளிகள் மீதே மண்ணு, நம்பர் ஒன் போவதெல்லாம் ரொம்பவே டூ மச்சான திரைக்கதை.

மண்ணுவின் அண்ணன் தனாவான நடித்திருக்கும் ரிஷி ரித்விக், தனக்கு பார்த்த பெண்ணை மாறாவுக்காக விட்டுக் கொடுத்துவிட்டுப் பேசுவதில் ஒரு இயல்பு தன்மையுடன் கூடிய நடிப்பைக் காட்டியிருக்கிறார்.

மாறாவின் நடிப்பும் பாராட்டுக்குரியது. சாலையாரின் தளபதி வீட்டு வாசலில் வந்து நின்று ஹாரன் அடிக்கும்போது போகாமல் தயக்கத்துடன் நிற்பதும், தான் மாட்டிக் கொள்வோமோ என்றெண்ணி கிளியப்பனின் வீட்டில் பயப்படும்போதும் அழகான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். கடைசியில் இவரது மரணக் காட்சி பெரும் துயரம்தான்.

சாலையாராக நடித்திருந்த மானெக்சாவும், கிளியப்பனாக நடித்திருக்கும் கவினும் போட்டி போட்டு தாதாயிஸத்தைக் காட்டியிருக்கிறார்கள். மானக்சாவின் கண் பார்வையே பயமுறுத்துகிறது. மேலும் அவரது உடற்கட்டும், தோற்றமும், தீர்க்கமான பார்வையும், நக்கலான பதிலளிப்பும் “செமத்தியான தாதா” இவர் என்றே சொல்ல வைக்கிறது.

கிளியப்பனாக நடித்திருக்கும் கெவின் தனது கோட்டைக்குள்ளேயே கொலையாளி வந்திருக்கிறானா என்பதை அறிந்து டென்ஷனாகி அதைக் கண்டுபிடிக்கும் பரபர காட்சியில் நம்மையும் சேர்த்து பதட்டமாக்கியிருக்கிறார்.

உதய்யின் அம்மாவாக நடித்திருக்கும் ஜானகி  இதுவரையிலும் ஆண் தாதாக்கள்தானே சவால்விடுவார்கள்.. நான் விடுறேன் பாரு என்று சொல்லி அவர் விடும் சவாலைக் கேட்டாலே நமக்குக் கெதக்கான்றாகிறது. ஆக்ரோஷம், இயல்பு என்று இரண்டுவிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஜானகி.

மண்ணுவின் காதலியாக நடித்திருக்கும் சாய் பிரியா தேவா சிறப்பான புதுமுகம். நல்வரவாகட்டும். பார்த்தவுடன் காதலிக்கத் தோணும்படியான முகம். கிடைத்த சில காட்சிகளில் நிறைவாக நடித்திருக்கிறார். டப்பிங் என்றாலும் சில்லரை சிதறாமல் நடித்திருப்பது ஆச்சரியம்தான்..!

படத்தின் துவக்கத்திலும், கடைசியிலும் வந்து முகம் காட்டும் இயக்குநர் ரமணா, மாறாவின் மனைவியாக நடித்தவர் மற்றும் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்தவர்கள் என்று அனைவருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

நம் காதுக்கு எட்டிய வசனங்களில் பலவையும் ரசிக்க வைக்கின்றன. புரியாத வசனங்களில் இன்னும் கூடுதலாக இருந்திருக்கக் கூடும். ஆனால் புரியாதபடிக்கு வேகம், வேகமாக பேச வைத்திருப்பது இயக்குநரின் தவறுதான்.

“இளமைல 25 காலண்டர், முதுமைல 35 காலண்டர்.. அவ்ளோதான் சார் வாழ்க்கை..”

ஒரு கிழவி இன்னொரு கிழவியிடம் “அந்தப் பக்கம் போகாதே… ஒருத்தன் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுக்கிறான்…” என்று சொல்ல,,, “யார் நம்ம விஜய் சேதுபதிதானே..?” என்று அந்தக் கிழவி வெட்கப்பட்டு பதில் சொல்ல, “அவர் ஆம்பளைகளுக்குதான் முத்தம் கொடுப்பார். இவன் எல்லாருக்கும் கொடுக்குறான்…” என்று முதல் கிழவி பதில் சொல்வதெல்லாம் சிரிக்க வைக்கிறது.

“இந்தக் கத்திரிக்கோலை நேர்த்தியாப் பிடிச்சி துணி வெட்ட டைம் எடுக்கும்.. காசு கம்மியாத்தான் வரும், அதையே கத்தி மாதிரி பிடிச்சி இஷ்டத்துக்கு குத்துனேன்னு வை உசுரு போயி சுளுவா வேலை முடிஞ்சிரும், காசும் அதிகம், ஆனா ஜெயிலுக்குப் போகணும்..” என்ற நிஜத்தை தனா மாறாவிடம் சொல்லும் காட்சி.

“தீபா காஃபி கொண்டு வாம்மான்னு சொன்னா… என் புள்ள காஃபி கொண்டு வரும்.. அந்த அளவுக்காது ஒன்ன என் லைஃப்ல வச்சிக்குவேன்..” என்ற காதல் டயலாக்.

“செஞ்சா செம்மையா செய்யுங்க… இல்லைன்னா.. வூட்ல போயி சமையல் செய்யுங்கடா..” என்ற ஜானகியின் கோபக் குரல்.

“நான் சாமி கும்பிட கோயிலுக்குப் போனதும் கெடையாது.. சம்பவம் பண்ணிட்டு ஜெயிலுக்குப் போனதும் கெடையாது..” என்ற மண்ணுவின் பேச்சுக்கு, “ஓ இவரு பரம்பரை ஹெல்பரா…?” என்று கிடைக்கும் பதிலடியும் சிரிப்பலையை எழுப்பியது.

கடைசியாக “அல்லா, கோயிந்தா, அல்லேலூயா” காமெடி திடீரென்று திரையில் தோன்றி நம்மை கை தட்ட வைத்திருக்கிறது..!

ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் வி.ஆனந்தின் ஒளிப்பதிவு வட சென்னையின் அழுத்தமான அசுத்தத்திலும் ஒரு நேர்த்தியையும், அழகையும் கண்ணில் காட்டியிருக்கிறது. மாறாவை சம்பவம் செய்யும் காட்சியிரும், இறுதியில் சாலையாரை மண்ணு வதம் செய்யும் காட்சியிலும் கேமிராமேனின் ஒர்க்கும், சண்டை இயக்குநரின் பயிற்சியும் பலே. பலே.!

போபோ சசியின் இசையில் வட சென்னையின் ஒவ்வொரு சப்தமும் ஒலிக்கிறது. பாடல்களில்கூட மெலடியுடன் வடசென்னையை சம்பந்தப்படுத்துவதுபோல இசையையும், காட்சிகளையும் தொகுத்துள்ளார்கள். படுகொலைகள் நடக்குமிடத்திலும், கிளியப்பனின் வீட்டில் நடக்கும் உள் சதி நேரத்தில் ஒலிக்கும் பின்னணி இசையும் அந்த நேரத்து டென்ஷனை நமக்குள் ஏற்றியிருக்கின்றன.

“கத்தியை எடுத்தவன், கத்தியில்தான் சாவான்..” என்பதை சொல்ல வந்திருக்கும் 501-வது படம் இது. படம் நெடுகிலும் இருக்கும் மெட்ராஸ் பாஷையும், அதீதமான வசனங்களும், போரடிக்கும் திரைக்கதையும் படத்தினை நம்மிடமிருந்து அந்நியமாகியிருக்கிறது.

படத்தில் பேசப்பட்டிருக்கும் 75 சதவிகித படத்தில் வசனங்கள் புரியாத அளவுக்குக் கதாப்பாத்திரங்கள் பேசியிருப்பதுதான் படத்தின் பெரும் பலவீனம். புரிந்த வசனங்கள்கூட அந்தக் கதாப்பாரத்திற்கு வைக்கப்பட்ட குளோஸப் காட்சிகளால்தான் நமக்குப் புரிந்துள்ளது என்பதுதான் உண்மை.

மாறாவின் மரணத்தை காட்டியிருக்கும்விதமும், கிளியப்பனின் வீட்டில் நடக்கும் சதியாலோசனை காட்சிகளும், சாலையார் வதம் காட்சியும் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

“அடியாளாக மாட்டேன்.. தாதாயிஸத்துக்குள் கால் வைக்க மாட்டேன்” என்று சபதமெடுத்து ஒதுங்கிப் போகும் மண்ணை, காலம் டைம் டேபிள் போட்டு உள்ளேயிழுத்து அந்த தாதாயிஸத்தை வன்முறை மூலமாகவே முடித்து வைப்பது குறிப்பிடத்தக்க டிவிஸ்ட்டுதான்.

முதல் பாதி பரபரப்புடன், விறுவிறுப்பும் கலந்து செல்ல.. இரண்டாவது பாதியில் அது குறைந்தது படத்தை மிகவும் போரடிக்க வைத்துவிட்டது. போதாக்குறைக்கு புரியாத வசனங்களும் சேர்ந்து கொள்ள பல நிமிடங்கள் அந்நிய மொழியில் உருவான கமர்ஷியல் படத்தைப் பார்த்த எபெக்ட்டை நமக்குக் கொடுத்துவிட்டது..!

வடசென்னையின் வட்டார தமிழ் மொழி, தென்சென்னையில்கூட புரியாது. இதை தமிழகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் புரிந்து கொண்டு ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்ப்பது பச்சை முட்டாள்தனம். இனி வரும் இயக்குநர்களாவது இதைப் புரிந்து கொண்டு கதையமைப்பார்கள் என்று நம்புகிறோம்..!

RATING : 3 / 5

Our Score