“ரஜினிக்கு இங்கேதான் போட்டோஷூட் நடந்தது..” – ‘மய்யம்’ விழாவில் கமல் சொன்ன தகவல்..!

“ரஜினிக்கு இங்கேதான் போட்டோஷூட் நடந்தது..” – ‘மய்யம்’ விழாவில் கமல் சொன்ன தகவல்..!

பிரபல ஓவியர் ஏ.பி. ஸ்ரீதர் தயாரித்திருக்கும் ‘மய்யம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடிகர் கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் ‘மய்யம்’ திரைப்படத்தின் இசையை கமல்ஹாசன் வெளியிட நடிகை கவுதமி பெற்றுக் கொண்டார்.

விழாவில் கமல்ஹாசன் பேசும்போது, “இப்படத்தின் குழுவினருக்கு பக்கபலமாக ஸ்ரீதர் இருப்பதை கண்டு நான் மகிழ்ச்சி கொள்கிறேன். தற்போது தமிழ்ச் சினிமாவில் ஆவி, பேய் படங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. ஆனால் எனக்கு ஆவிகள் மீது நம்பிக்கை கிடையாது.

இந்த அலுவலகம் ரொம்ப ராசியான இடம். நாற்பதாண்டுகளுக்கு முன்பு நான், ஆர்.சி.சக்தி உட்பட பல நண்பர்கள் பேசிப் பழகிய இடம். எனக்கு முகவரி கொடுத்த ‘உணர்ச்சிகள்’ திரைப்படம் இங்கேதான் உருவானது. ஏன், ‘உணர்ச்சிகள்’ படத்தின் படப்பிடிப்புகூட இங்கேதான் மாடியில் நடைபெற்றது. ஒரு காலத்தில் படப்பிடிப்புக்கு இடம் கிடைக்காத நாட்களில் பல திரைப்படங்களின் படப்பிடிப்பை இந்த மாடியில் நடத்தியிருக்கிறோம்.

ஆர்.சி.சக்தி இயக்கிய அந்தப் படத்துக்கு ஹீரோ கிடைக்கவில்லை. படத்தில் பணியாற்றச் சென்ற நானே ஹீரோவானேன். அந்த ‘உணர்ச்சிகள்’ படத்தில் நான் நடிக்கும்போது எடுத்த புகைப்படம்தான் என்னை இயக்குநர் பாலசந்தரிடம் கொண்டுபோய் சேர்க்க உதவியது.

இங்கே உலவியவர்கள் பலர் இன்றைக்கு பெரிய மனிதர்களாக உருமாறியிருக்கிறார்கள். இயக்குநர்கள் பாரதிராஜா, மணிரத்னம் இவர்களோடு இதே இடத்தில் நிறைய நேரம் பேசியிருக்கிறோம். சண்டையிட்டிருக்கிறேன். பாலசந்தர் அடிக்கடி இங்கே வந்து போவார். இன்றைய பிரபலங்கள் பலருக்கும் இங்கே போட்டோ ஷுட்கூட நடந்திருக்கிறது.

எனக்கு ஒரு இனிய நண்பர் இருக்கிறார். அவர் ஸ்டைலாக  சிகரெட் பிடிப்பார். மாடியில் இருக்கும் ஒரு அறையில்தான் சிகரெட் பிடித்தபடியே அமர்ந்திருப்பார். அவரையும் இங்கேதான் போட்டோ ஷூட் எடுத்தார்கள். அவர்தான் என் நண்பர் ரஜினி. அதுபோல என்னுடைய நடன அரங்கேற்றத்திற்கான முன்னேற்பாடுகளும் இங்கேதான் நடந்தன.

எங்களை போல இந்த இளைஞர்களும் முன்னேற வேண்டும். இந்த இடத்தின் ராசி அப்படி. வருங்கால சினிமா இந்த மாதிரியான இளைஞர்கள் மத்தியில் மய்யம் கொள்ள வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..” என்றார்.

Our Score