நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டு அரசின் கலாச்சாரத் துறை மிக உயர்ந்த செவாலியர் விருதினை வழங்குவதாக அறிவித்துள்ளது.
உலக அளவில் கலைத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு பிரான்ஸ் நாட்டு அரசு செவாலியர் விருது வழங்கி கெளரவித்து வருகிறது.
அந்த வகையில் 1995-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த செவாலியர் விருதினைப் பெற்றார்.
இ்பபோது நடிகர் கமல்ஹாசனுக்கும் இந்த விருதினை வழங்குவதாக பிரான்ஸ் நாட்டு அரசின் கலாச்சாரத் துறை அறிவித்திருக்கிறது.
இந்த விருது வழங்கும் விழா பிரான்ஸ் தலைநகரமான பாரீஸில் உள்ள அதிகாரப்பூர்வமான அதிபர் மாளிகையான, எல்சீ அரண்மனையில் விரைவில் நடைபெறும். அல்லது இங்கேயே வந்தும் கொடுப்பார்கள்..!
இந்த விருது பெற்றவர்களை நேரில் காணும் பிரான்ஸ் நாட்டு ராணுவ வீரர்கள், அவர்களுக்கு தலைவணங்கி “ஸார்” அல்லது “மேடம்” என்று அழைக்க வேண்டும் என்பது மரபு.
உலகத்தின் மாபெரும் வீரரான நெப்போலியனால் தனது நாட்டு ராணுவம் மற்றும் சிவில் மக்களில் வீர, தீர செயல்களைச் செய்தவர்களுக்கு கொடுப்பதற்காக துவக்கப்பட்ட இந்த செவாலியர் விருதினை 1802-ம் ஆண்டில் இருந்து பல்வேறு நாடுகளில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பிரான்ஸ் அரசு வழங்கி வருகிறது.
இந்த செவாலியர் விருதினைப் பெறுபவர்கள் அவரவர் துறையில் 20 அல்லது 25 வருடங்களாக சேவையோ அல்லது பணியாற்றியோ இருக்க வேண்டும்.
பல நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், ராணுவ வீரர்கள், கலைஞர்கள், சமூக சேவகர்கள் என்று பல்வேறு தரப்பினருக்கும் பிரான்ஸ் அரசு இந்த விருதினை வழங்கியிருக்கிறது.
இந்தியாவின் சார்பில் ஜே.ஆர்.டி.டாட்டா(1983), சத்யஜித்ரே(1987), சிவாஜிகணேசன்(1995), ஜூபின் மேத்தா(2001), எம்.பாலமுரளிகிருஷ்ணா(2005), அமிதாப்பச்சன்(2007), ஐஸ்வர்யா ராய்(2012), ஷாரூக்கான்(2014), யஷ்வந்த்சின்ஹா(2015) ஆகியோர் இதற்கு முன்பு இந்த விருதினைப் பெற்ற முக்கியஸ்தர்களில் சிலர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு செவாலியர் விருது வழங்கப்பட்டபோதும், இப்போது நடிகர் கமல்ஹாசனுககு இதே செவாலியர் விருது வழங்கப்பட்டபோதும் தமிழகத்தில் ஆட்சியில் இருப்பது ஜெயலலிதாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அப்போது உடல் நலம் சரியில்லாததால் அவர் நேரில் சென்று வாங்க இயலாத நிலைமை. இதனால் பிரான்ஸ் நாட்டு தூதரே நேரில் செவாலியர் விருதினை வழங்க முன் வந்தார்.
இந்த விருது வழங்கும் விழாவினை தமிழ்த் திரையுலகம் 1995, ஏப்ரல் 22-ம் தேதி சென்னை எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஒரு விழா நடத்தி அதில் சிவாஜியை விருதினை பெற வைத்தது.
இந்த விழாவில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா நடந்து கொண்ட முறை தமிழ் திரையுலகத்தினரை மிகவும் கோபப்படவும், வருத்தப்படவும் வைத்தது.
விருது பெற வருபவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். ஆகவே அவரைத்தான் அந்த விழாவில் முன்னிலைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதையெல்லாம் செய்யாமல், நடிகர் திலகத்தை முன்கூட்டியே வரவழைத்து மேடையில் அமர வைத்துவிட்டு பின்பு ஜெயலலிதா மெதுவாக வந்தபோது மேடையில் இருந்த அனைவரையும் எழுந்து நிற்க வைத்து பாடாய்படுத்திவிட்டார்கள் அரசு அதிகாரிகள்.
ஏதோ அந்த விருதே தமிழக அரசு கொடுப்பது போல் அந்த விழா நடத்தப்பட்டது. இதனைக் கண்டு திரையுலகப் பிரமுகர்கள் கோபமடைந்தாலும், யாரும் எதுவும் பேசவில்லை. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி விடவில்லை.
அந்த விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக அரசு சிவாஜியை அவமானப்படுத்திவிட்டதாக பகிரங்கமாக மேடையிலே குற்றம் சாட்டிப் பேசினார் என்பதும், இதனாலேயே ஜெயலலிதாவுக்கும் அவருக்குமான மோதல் துவங்கியது என்பதும் தமிழக அரசியல் கலந்த சினிமா வரலாறாகும்..!
விருதினைப் பெற்றிருக்கும் நடிகர், பத்மபூஷன் கமல்ஹாசனுக்கு நமது வாழ்த்துகள்..!











