full screen background image

நடிகர் ‘காதல்’ தண்டபாணி காலமானார்..!

நடிகர் ‘காதல்’ தண்டபாணி காலமானார்..!

நடிகர் ‘காதல்’ தண்டபாணி இன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 71.

2004-ம் ஆண்டு வெளியான ‘காதல்’ திரைப்படத்தில் ஹீரோயின் சந்தியாவின் தந்தையாக அறிமுகமானவ்ர்தான் இவர். இதற்குப் பிறகு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் இவரை ‘காதல்’ தண்டபாணி என்றே குறிப்பிட்டார்கள். டைட்டிலிலும் இதுவே பதிவானது..

‘காதல்’ திரைப்படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிகளிலும் கிட்டத்தட்ட 160-க்கும் மேற்பட்ட  படங்களில் நடித்திருக்கிறார் தண்டபாணி.

திண்டுக்கல்லை சேர்ந்த இவர், அந்த ஊரின் மிக பிரபலமான புள்ளி. திண்டுக்கல் நகர கூட்டுறவு சங்கத்தில் மிக நீண்ட காலம் தலைவராகவும் இருந்து வந்தவர். நடிக்க வாய்ப்பு வந்த பின்புதான் தான் வகித்து வந்த பதவிகளை கைவிட்டார்.

சென்னைக்கு படப்பிடிப்புக்கு வரும்போது தங்குவதற்கு வசதியாத சாலிகிராமத்தில் வீடு எடுத்து தங்கியிருந்தார். நேற்றுகூட சரத்குமார் ஹீரோவாக நடித்து வரும் ‘சண்டமாருதம்’ படத்தில் தண்டபாணி நடித்திருக்கிறார்.

ஆனால் இன்று விடியற்காலையில் திடீரென்று அவருக்கு நெஞ்சு வலி வரவும், உடனடியாக வடபழனி விஜயா மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு சென்ற சில நிமிடங்களில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது.

அவரது உடலுக்கு நடிகர் சங்கத் தலைவர் திரு.சரத்குமார் இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும் நடிகர்கள் சமுத்திரகனி, டெல்லி கணேஷ், இயக்குனர் ஏ.வெங்கடேஷ் ஆகியோரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் சங்கம் சார்பிலும் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அவரது இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான திண்டுகல்லில் நாளை நடைபெறவுள்ளது.

Our Score