full screen background image

குறும்படங்களின் மூலம் கோடம்பாக்கத்தில் இடம் பிடித்த நடிகர் காளி..!

குறும்படங்களின் மூலம் கோடம்பாக்கத்தில் இடம் பிடித்த நடிகர் காளி..!

நடிகர் காளி, இன்றைய நிலைமையில் தமிழ்ச் சினிமாவின் மீடியம் பட்ஜெட் படங்களில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தனது திரையுலக வாழ்க்கையைப் பற்றி கணணீரும், மகிழ்ச்சியுமாய் அவர் அளித்திருக்கும் பேட்டி இது :

“கோவில்பட்டி பக்கத்தில் குவளையத்தேவன்பட்டி என்ற கிராமத்தில் இருந்து வந்த எனக்கு எட்டு வருடத்திற்கும் மேலான போராட்டத்திற்கு பிறகுதான் தமிழ் சினிமாத் தாயின் செல்லப் பிள்ளைகளில் ஒருவனாக வலம் வரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

சின்ன வயதில் பள்ளிகளிலும் கோவில் திருவிழாக்களிலும் நாடகங்களில் நடித்த எனக்கு நடிப்பு மீதும் சினிமாவின் மீதும் ஈர்ப்பும் ஆர்வமும் ஏற்பட சென்னைக்கு வண்டி ஏறினேன். சென்னைக்கு வந்த பிறகுதான் தெரிந்தது, சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று. சாப்பாட்டிற்கும் தங்குவதற்குமாக கிடைத்த வேலைகளை செய்து கொண்டு வாய்ப்பு தேடி அலைகின்ற எத்தனையோ திறமைசாலிகள் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இன்றும் கோடம்பாக்கத்தில் இருக்கின்றனர்.

நானும் ஏழு, எட்டு வருடங்கள் டீக்கடை, மளிகைக் கடை என்று சென்னையில் பார்க்காத வேலைகள் இல்லை. காலை முதல் இரவுவரை வயித்துப்பிழைப்புக்காக மட்டுமே அலைவது, நெருடலையும் மிகுந்த மன வருத்தத்தையும் தந்தது. இனிமேல் பட்டினியாகக் கிடந்தாலும் பரவாயில்லை.. வந்த நோக்கத்தை அடைந்தே தீரவேண்டும் என்று, முழு மூச்சாக நடிப்பதற்கு வாய்ப்பு தேடி கோடம்பாக்கத்தின் வீதிகளில் நடையாய் நடந்ததில் வருடங்கள்தான் ஓடியதே தவிர, எந்த வாய்ப்பும் கிட்டவில்லை.

kali18

ஒருநாள் இயக்குனர் விஜயபிரபாகரன் சார் கண்ணில் நான் பட, முதல் முறையாக சினிமாவில் ‘தசையினை தீச்சூடினும்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவரை நடிப்பு என்றால் என்ன என்று, என் அறிவு தெரிந்து வைத்திருந்ததை புதிய கோணத்தில் எனக்கு புரிய வைத்தார் விஜயபிரபாகரன் சார். ‘தசையினை தீச்சூடினும்’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த கண்ணபிரான் மூலமாக எனக்கு பல குறும்பட இயக்குனர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு வரிசையாக கலைஞர் டிவியின் நாளைய இயக்குனர் நண்பர்கள் தொடர்ந்து வாய்ப்புகள் தர ஆரம்பித்தார்கள்.

kaali 4

‘ஓர் குரல்’, ‘முண்டாசுப்பட்டி’, ‘சைனா டீ’, ‘ரவுடி கோபாலும் நான்கு திருடர்களும்’, ‘சட்டம் தன் கடமையை செய்யும்’, ‘ஃப்ரீ ஹிட்’, ‘அ’, ‘தோஸ்த்’, ‘வசூல்’, இப்படி பல குறும்படங்களில் அடுத்தடுத்து நடித்தேன். கிடைத்த வாய்ப்பை சரியாக என்னால் முடிந்தவரை சரியாக பயன்படுத்தினேன்.

kaali 3

அதனால், 100-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் கலந்து கொண்ட நாளைய இயக்குனர் சீசன் 3 வரிசையில், ‘பெஸ்ட் ஆக்டர் ஆப் த சீரீஸ்’ (தொடரின் சிறந்த நடிகர்) விருதை உலக நாயகன் கமலஹாசன், மற்றும் இயக்குநர் சிகரம் பாலசந்தர் முன்னிலையில் பெறும் கிடைத்தது, அதுவும் இப்பேர்ப்பட்ட ஜாம்பவான்கள் முன்னிலையில் விருது பெற்றது எனக்கு பெரும் நம்பிக்கை தந்தது.

kaali 2

அதற்கு பிறகு வரிசையாக வாய்ப்புகள் தேடியதில் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் முகத்தை சினிமா ரசிகர்களுக்கு அடையாளம் காட்டிய படங்களான, ‘பீட்ஸா 2’, ‘உதயம் NH4’, ‘விழா’, ‘தடையறத் தாக்க’, ‘தெகிடி’, ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’, ‘வாயை மூடி பேசவும்’ போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் என் இடத்திற்கான நம்பிக்கையையும் உத்திரவாதத்தையும் ஏற்படுத்தித் தந்தது. இப்போது வெளிவர உள்ள ‘முண்டாசுப்பட்டி’, ‘பூவரசம் பீப்பி’, ‘கத சொல்லப் போறோம்’, ‘உறுமீன்’ மற்றும் பல படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறேன்.

kali19

என் குடும்பத்தாரின் ஒத்துழைப்பும், நண்பர்களின் அரவணைப்பும் இல்லை என்றால் நான் ஆசைப்பட்ட இந்த சினிமாவில் ஒரு துரும்பைகூட அசைத்து பார்த்திருக்க முடியாதுண்ணே.. பணத்தை சம்பாதிக்கிறேனோ இல்லையோ இந்த சினிமாவில் நல்ல நண்பர்களையும் புது சொந்தங்களையும் சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்கேண்ணே.. அது என்னை இந்த சினிமாவிலே கரை சேர்க்கும்ண்ணே… நான் சினிமாவை உண்மையாக நேசிக்கிறேன். அது என்னைக்கும் என்னை கை விடாதுண்ணே..” என்று மண்வாசம் மாறாமல் பேசுகிற காளி முகத்தில் அப்படி ஒரு வெள்ளந்தித்தனமான சந்தோசம், புன்னகை.

Our Score