இந்த நடிகரிடத்திலும் ஒரு ஈர மனம் உண்டு என்பதை நிரூபித்திருக்கிறார் நடிகர் ஜீவா. எல்ரெட் குமார் தயாரிப்பில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கிய ‘யான்’ திரைப்படம் மிகப் பெரிய தோல்வியை சந்தித்து பல கோடிகள் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
இயக்குநர் ரவி.கே.சந்திரனை நடிகர் ஜீவாதான் தயாரிப்பாளர்களிடத்தில் அறிமுகப்படுத்தி “இவருடைய கதையில், இயக்கத்தில் நான் நடிக்கிறேன். நீங்கள் தயாரியுங்கள்..” என்று கேட்டுக் கொண்டதால் தனக்கும் இந்த்த் தோல்வியில் தார்மீகப் பொறுப்புண்டு என்பதை உணர்ந்த நடிகர் ஜீவா, அடுத்து உடனடியாக இதே நிறுவனத்திற்கு படம் நடித்துத் தர சம்மதித்தார்.
அப்படி உருவாகியுள்ள படம்தான் ‘கவலை வேண்டாம்’. ‘யாமிருக்க பயமே’ திரைப்படத்தின் இயக்குநர் டிகே இந்தப் படத்தினை எழுதி, இயக்குகிறார். ஜீவாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
காதல், நகைச்சுவை கலந்த இந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை RS Infotainment தயாரிப்பு நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் இணைந்து தயாரிக்கிறார்கள்.
ஜீவா, தற்போது நயன்தாராவுடன் இணைந்து நடித்து வரும் ‘திருநாள்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்த மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறதாம்.
படம் பற்றி இயக்குநர் டிகே பேசும்போது, “அனைவருக்கும் பிடிக்கும்வகையில் அமைக்கப்பட்டிருக்கும் கதையில் உருவாகும் இப்படத்தில் ஜீவா, கீர்த்தி சுரேஷ் மிகவும் தேர்ந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு மிகவும் அனுபவம் வாய்ந்த கதாநாயகிதான் தேவைப்பட்டார். எனினும் கீர்த்தி இக்கதாப்பாத்திரத்தில் கட்சிதமாக பொருந்தினார். ரசிகர்களுக்கு கூடுதல் இன்பமாய் பாபிசிம்ஹா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். அடுத்த மாதம் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம். இந்தப் படம் நிச்சயம் எனக்கும், ஜீவாவுக்கும் வெற்றிப் படமாய் இருக்கும் என்று உறுதியாய் நம்புகிறோம்.” என்றார்.