தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை வைத்துள்ளார் ஜெயம் ரவி. கடந்த வருடம் இவருக்கு நான்கு படங்கள் வெளியாகி, அந்த நான்குமே வெற்றி படங்களாக அமைந்து இவரது அந்தஸ்தை உயர்த்தியது.
தற்போது பிரபுதேவா தயாரிப்பில், ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லக்ஷ்மன் இயக்கத்தில் ஹன்சிகாவுக்கு இணையாக நடித்து வரும் ‘போகன் ‘ முடிவடையும் தருவாயில் உள்ளது. இதை அடுத்து அவர் நடிக்க போகும் படத்தின் அறிவிப்பை ஜெயம் ரவி இன்று அறிவித்தார்.
இயக்குனர் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ள இந்தப் படம் விரைவில் துவங்க உள்ளது. பெயரிடப்படாத இந்தப் படத்தின் மற்ற நடிக நடிகையர், தொழில் நுட்பக் கவிஞர்கள் தேர்வு நடைபெற்று கொண்டு இருக்கிறது.
“நீண்ட நாட்களாகவே எனக்கு இயக்குனர் விஜய் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. அதற்கான நேரமும் , காலமும் அமையவில்லை என்பதுதான் குறை, அவரது பாணி படங்கள் எனக்கு பொருத்தமாக அமையும் என்பதில் எனக்கு தீவிர நம்பிக்கை. இந்தப் படம் ரசிகர்களுக்கு தேவையான எல்லா அம்சங்களும் பொருந்திய , வணிக ரீதியாக பெரும் வெற்றி பெறக் கூடிய படமாக இருக்கும் என்பதில் நாங்கள் இருவருமே உறுதியாக இருக்கிறோம்..” என்கிறார் ஜெயம் ரவி.









