full screen background image

“35 வயதில் காதல் கல்யாணம் செய்வேன்” – நடிகர் கவுதம் கார்த்திக்கின் தெளிவான பேச்சு..!

“35 வயதில் காதல் கல்யாணம் செய்வேன்” – நடிகர் கவுதம் கார்த்திக்கின் தெளிவான பேச்சு..!

நடிகர் கவுதம் கார்த்திக், நடிகை சனா நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் ‘ரங்கூன்’ திரைப்படம் தற்போது பரவலாக நல்ல பெயரோடு தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு படத்தின் ஹீரோவான நடிகர் கவுதம் கார்த்திக் இன்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசும்போது, “மிகவும் பாஸிடிவான ஒரு தருணத்தில் உங்கள் அனைவரையும் இப்போது சந்திப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. எனக்கு இப்படியொரு சிஸ்டம் இருக்கு என்பதே இன்றைக்குத்தான் தெரியும். இல்லையென்றால் பத்திரிகையாளர்களை முன்பேயே சந்தித்திருப்பேன்.

gowtham karthick

நான் நடித்த ‘ரங்கூன்’ திரைப்படம் இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கு நல்ல பெயரும் கிடைத்திருக்கிறது. இதனைக் கேள்விப்பட்டபோது மகிழ்ச்சியும், பெருமையுமாய் இருக்கிறது. ‘ரங்கூன்’ என்னுடைய முதல் வெற்றி படமாகும். நல்ல கதையும், நல்ல இயக்குநரும் அமையும்பட்சத்தில் என்னுடைய கேரியர், இன்னும் சிறப்பாக அமையுமென்று நினைக்கிறேன்.

நான் இப்போது ‘சிப்பாய்’, ‘இவன் தந்திரன்’, ‘ஹரஹர மகாதேவகி’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளேன். இப்போது ‘நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறேன். வருங்காலத்தில் நான் நடிக்கும் படங்களில் இன்னும் நிறைய கவனம் செலுத்துவேன்.

எனக்கு நடிப்பின் மேல் மிகப் பெரிய ஆசையை தூண்டிய திரைப்படம் ‘கடல்’. அதில் மணிரத்னத்தின் இயக்கத்தில் நான் நடித்தது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம்.

சினிமாவில் இப்போதைக்கு என்னுடைய நெருங்கிய நண்பர்கள் என்றால் அது நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, மற்றும் ‘ரங்கூன்’ படத்தில் நடித்த டேனியல் ஆகியோர்தான். நான் ஸ்க்ரிப்டை பற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோருடன் கலந்து பேசுவேன்.

அப்பா நான் நடித்த ‘கடல்’ மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை மட்டுமே பார்த்துள்ளார். அவைகளைப் பற்றி கருத்து எதையும் அவர் இதுவரையிலும் என்னிடத்தில் சொல்லவில்லை.

இப்போது நான் நடிக்கும் ஷூட்டிங்கில் அனைவரும் அப்பாவை பற்றி சொல்லும்போதுதான் அவரை பற்றியே எனக்கு தெரிய வருகிறது. அப்பா என்னை ‘தம்பி’ என்றுதான் எப்போதும் கூப்பிடுவார்.

எப்போதெல்லாம் நான் சோர்வாக உள்ளேனோ அப்போதெல்லாம் எனக்கு சக்தி கொடுப்பவர் என்னுடைய அம்மாதான். அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும். தற்போது வீட்டில் ஓய்வு நேரங்களில் அப்பா, மற்றும் தாத்தா நடித்த படங்களை பார்த்து வருகிறேன்…” என்றார்.

gowtham karthick

“அவருடைய அப்பாவான கார்த்திக் நடித்த படங்களில் அவருக்குப் பிடித்த படம் எது..?” என்று கேள்வி எழுப்பியபோது, “என்னை பொறுத்தவரை அப்பா மிகப் பெரிய லெஜன்ட். அவர் நடித்ததில் எனக்கு ‘கோகுலத்தில்  சீதை’ திரைப்படத்தில் வரும் ‘கிரெடிட் கார்ட்’ கொடுக்கும் காட்சிதான் மிகவும் பிடிக்கும்…” என்றார்.

“உங்கப்பாவுக்கு பெஸ்ட் ஜோடியா யாரைச் சொல்றீங்க..?” என்று கேட்டதற்கு “சினிமாவில் அப்பாவுக்கு மிகச் சிறந்த ஜோடி என்றால் நக்மா மேடம் மற்றும் ரேவதி மேடம்..” என்றார்.

“அக்னி நட்சத்திரம் திரும்பவும் ரீமேக் செய்யப்பட்டால் நடிப்பீர்களா..?” என்று கேட்டதற்கு, “அப்பா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘அக்னி நட்சத்திரம்’ ஒரு தரம் வாய்ந்த படைப்பாகும். நிச்சயம் அப்படத்தின் ரீமேக்கில் நான் நடிக்க மாட்டேன். ஒரு அக்னி நட்சத்திரம்தான் இருக்க வேண்டும்..” என்றார் தீர்மானமாக.

“உங்க தாத்தா காதல் மற்றும் கலப்பு திருமணம் செய்து கொண்டார். உங்கப்பாவும் அப்படியே..? நீங்க எப்படி..?” என்று கேட்டபோது, “கண்டிப்பாக எனக்கு காதல் திருமணம்தான். ஆனால் அது நடக்க ரொம்ப வருஷமாகும். என்னுடைய 35 அல்லது 40 வயதில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நான் நினைத்துள்ளேன்..” என்றார் கவுதம் கார்த்திக்.

ஓகே.. இவ்ளோ தெளிவா இருந்தால் போதும்.. பொழைச்சுக்கலாம் தம்பி..!

Our Score