இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷுக்கு இப்போது சுக்ர திசை நடைபெறுகிறதுபோலும்..! இவர் நடிப்பில் வெளியானது ஒரேயொரு படம். ‘டார்லிங்’. நல்ல ஓட்டம். இதனால் ஜி.வி.பிரகாஷின் ஓட்டமும் அதிகரித்துள்ளது.
இப்போதே அவர் ‘பென்சில்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதற்குள்ள அடுத்த படமும் புக்காகியுள்ளது.
கென்ன்யா பிலிம்ஸ் சார்பில் ஜெ.செல்வகுமார் தயாரிப்பில்தான் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் ஜி.வி.பிரகாஷ். இந்தப் படத்திற்கு இன்னமும் பெயர் வைக்கப்படவில்லை.
கெனன்யா பிலிம்ஸ் ஏற்கெனவே ‘திருடன் போலீஸ்’ படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது. இப்போதும் ‘உள்குத்து’ மற்றும் ‘ஒரு நாள் கூத்து’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கும் இந்தப் படம் இந்த நிறுவனத்திற்கு 4-வது தயாரிப்பாகும்.
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் பாலசரவணன், ‘முண்டாசுப்பட்டி’ ராமதாஸ் மற்றும் பலர் நடிக்கவிருக்கிறார்கள். ஷங்கர் கேமிராவை இயக்கவுள்ளார். பாண்டிராஜிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய பிரசாந்த் பாண்டியராஜ், இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.
வரும் செப்டம்பரில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இந்தப் படம் காமெடி, ஆக்சன், திரில்லர் கலந்த படமாம்..!