full screen background image

நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி..!

நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி..!

மலையாள நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யும்படி போலீஸ் தரப்பு அளித்திருந்த மனுவை எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

2017-ம் ஆண்டு மலையாளத்தின் புகழ் பெற்ற நடிகையொருவர் நள்ளிரவில் சிலரால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆட்பட்டார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பலர் கைதானார்கள். இந்த வழக்கில் நடிகர் திலீப்பும் 8-வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டார்.

87 நாட்கள் சிறையில் இகுந்த அவர் பின்பு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை தற்போது எர்ணாகுளத்தில் இருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாலச்சந்திர குமார் என்ற இயக்குநர் திலீப் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். நடிகை கடத்தப்பட்ட வீடியோவை திலீப்பின் செல்போனில் பலரும் பார்த்தார்கள் என்று பரபரப்பு புகார் தெரிவித்தார்.

இதையொட்டி போலீஸார் திலீப்பின் செல்போனை பரிசோதித்தபோது இந்த வழக்கில் சாட்சிகளாக இருந்தவர்களிடம் திலீப் பல முறை பேசியது தெரிய வந்தது. அந்த சாட்சிகள் அனைவரும் பின்பு நீதிமன்றத்தில் பல்டி சாட்சியாக மாறிவிட்டார்கள்.

இதனால் திலீப் வெளியில் இருந்து சாட்சிகளை விலைக்கு வாங்கி இந்த வழக்குக்கு இடையூறு செய்வதாகச் சொல்லி திலீப்பின் ஜாமீனை ரத்து செய்து மீண்டும் அவரை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று அரசுத் தரப்பு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, “அரசுத் தரப்பு போதுமான சாட்சியங்களை முன் வைக்காததாலும், பாலச்சந்திர குமாரின் வழக்கிற்கும், நடிகை கடத்தப்பட்ட வழக்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்பதால் அந்த வழக்கில் கிடைத்த விஷயங்களை வைத்து முதல் வழக்கின் கீழ் பெற்ற ஜாமீனை ரத்து செய்ய முடியாது…” என்றும் சொல்லி அரசு தரப்பு மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

இப்போது இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசுத் தரப்பு கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக தெரிவித்துள்ளது.

Our Score