யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான ‘நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு’ என்ற திரைப்பட பாடல் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு பாடகராகவும் மாறினார் நடிகர் தனுஷ். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர்கள் இருவரும் ‘யாக்கை’ திரைப்படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.
கிருஷ்ணா மற்றும் சுவாதி நடிக்கும் இந்தப் படத்தை குழந்தை வேலப்பன் இயக்க, ப்ரைம் பிச்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் முத்துக்குமரன் தயாரித்து வருகிறார்.
முன்னதாக, இந்த படக் குழுவினர் யூ டுயூபில் வெளியிட்ட ‘நீ எந்தன்’ என்னும் பாடல் மக்களிடையே பரவி கொண்டிருக்கின்ற இந்த நிலையில், தற்போது தனுஷும், யுவனும் ஜோடி சேர்ந்தது, ரசிகர்கள் மத்தியில் ஓயாத கடல் அலைகள் போல் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது,
“காதலியின் அன்பு வார்த்தைகளுக்காக ஏங்கி கிடக்கும் காதலன், ஒரு கட்டத்தில் அவள் மீது கோபம் கொண்டு பாடுவதே இந்த ‘சொல்லித் தொலையேம்மா’ பாடலின் கரு.
இந்தப் பாடலுக்கு ஏற்ற குரலை தேர்வு செய்யும் யோசனையில் இருந்தபோது, ‘தனுஷின் குரல் மட்டும்தான் இந்த பாடலுக்கு ஏற்ற குரல். எனவே அவர்தான் இந்த பாடலை பாட வேண்டும்’ என்று இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறினார். எங்களின் இந்த கூட்டு முயற்சி எங்களுக்கு கண்டிப்பாக பெரும் வெற்றியை தேடி தரும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்கிறார் படத்தின் இயக்குநரான குழந்தை வேலப்பன்.
மேலும், இதுவரை தனுஷ் பாடிய அனைத்து பாடல்களுமே மக்களின் மனதில் ஆழமாக பதிந்தவையாகும். அதே போல் இந்த பாடலும் இசை ரசிகர்களிடையே பெரிதும் ஹிட்டடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.










