தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் நடிகர் நாசருக்கு, பழம்பெரும் நடிகர் சாருஹாசன் ஒரு கடிதத்தை தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் “இனிமேல் நடிகர் சங்கத்தின் பொறுப்புகளுக்கு போட்டியிடுபவர்கள் அணி, அணியாக போட்டியிடாமல், தனித்தனியாக போட்டியிடும்வகையில் சங்கத்தின் விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும்…” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்தக் கடிதம் இங்கே :
அய்யா…!
தாங்கள் சினிமாவில் ஒரு வில்லனாகவே தோன்றி அதிகமான படங்களில் கமலஹாசன் என்ற ஹீரோவுக்கு எதிராகவே நீங்கள் நடித்ததால்… இந்தத் தேர்தலில் அவர் உங்களுக்கு சாதகமாக மறைமுகமாக வேலை செய்ததாக நாங்கள் கேள்விப்படுகிறோம். நம்பவில்லை….
முந்தைய நாட்களில் நான் நம்பியார் அவர்களை அடிக்கடி கடற்கரையில் காலை நடைப் பயிற்சியின்போது சந்திப்பேன். ஆனால் படங்களில் அவர் புரட்சி தலைவருக்கு செய்த துரோக காட்சிகள் இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை.. அதனால் என் ஒட்டு யார் என்ன செய்தாலும் எம்.ஜி.ஆரு.க்குத்தான்..?
அவைகளையெல்லாம் விட்டுவிடுவோம். ஒரு நாள் என் வீட்டிற்கு வந்து பாருங்கள்.. நான் தேசீய விருது பெற்றதற்காக எனக்கொரு வாழ்த்து செய்தியை ஒரு அரசு காகிதத்தில் புரட்சி தலைவர் அனுப்பியுள்ளார். இதற்காகவே நான் நம்பியாரை எதிர்த்து எம்ஜிஆருக்குத்தான் ஓட்டளிப்பேன்.
ஒரு ஹீரொவை ஓரங்கட்டிவிட்டு வில்லனாகிய உஙகளுக்கு நடிகர்கள் ஓட்டளித்தது ஆச்சரியம்தான். இதுவரை சொன்னதெல்லாம் ஒரு சினிமா ரசிகனாக நான் சொன்ன கருத்துக்கள்.
என்னுடைய உண்மையான் எதிர்ப்பை இப்போது சொல்லி விடுகிறேன்.
என் நடிகர் சங்க உறுப்பினர் அட்டை கடந்த ஒன்பதரை ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் நடந்த ஒரு விபத்தில் காணாமல் போய்விட்டது.. அது முதல் பெரிய வெளிநடப்புக்களுக்கு நான் தகுதி பெறாததால் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை.
நான் முன்னாள் செயற்குழுவில் கொஞ்சம் கரடு முரடான பொறுப்புக்களை ஏற்றவன்தான். இன்று பழயன கழிந்து புதியன புகுவதின் நம்பிக்கையில் ஒதுங்கிக் கொண்டேன்.
உறுப்பினர் அட்டையில்லாதவர்களுக்கு வாக்களிக்க அனுமதியில்லை என்று கேள்விப்பட்டுத்தான் நான் வாக்களிக்க வரவில்லை.
என்னுடைய கடைசியான கோரிக்கை. இந்த தேர்தல், அணி, கூட்டம்.. நாம் ஏதோ அமெரிக்க அரசியல் நாகரிகத்தை பின்பற்றுவதுபோல் உள்ளது. தமிழக அரசியலில் இரண்டே கட்சிகள்தான் 1977 முதல் இன்றுவரை ஆளுமை செய்வதுபோல ஆகிவிடக் கூடாது.
நடிகர் சங்கத்தில் கட்சிகள் கிடையாது எனபதை உறுதி செய்ய ஒரு அணி சேரா விதியை நம் நடிகவியல் அமைப்பில் MEMORANDAM OF ASSOCIATION மூலம் கொண்டு வர வேண்டும்.
என்னை ஒரு உறுப்பினன் என்ற முறையில் கூட்டங்களுக்கு அழையுங்கள். ஒட்டு உரிமை எனக்கு தேவையில்லை. நானும் நடிகர் பார்த்திபனும் வெளியிலிருந்தே போதுமான தொல்லை கொடுக்கும் உரிமை உள்ளவர்கள்.
சந்திப்போம் சிந்திப்போம்.
சாருஹாஸன்