full screen background image

தான் நடித்த முதல் படத்திற்கே தடை போட்ட நடிகர்..!

தான் நடித்த முதல் படத்திற்கே தடை போட்ட நடிகர்..!

பொதுவாக தங்களுடைய படங்களின் பத்திரிகையாளர் காட்சி முடியும்போது நகத்தைக் கடித்துக் கொண்டு வாசலில் டென்ஷனோடு காத்திருக்கும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை பார்த்திருக்கலாம்.

இன்றைக்கு ‘சென்னை உங்களை அன்போடு வரவேற்கிறது’ படத்தின் தயாரிப்பாளர் – இயக்குநர் மருதுபாண்டியனோ, கூடுதல் டென்ஷனோடு அரக்கப் பறக்க ஓடி வந்து பத்திரிகையாளர்களிடம் ‘ஸாரி’ கேட்டது கொடுமையாக இருந்தது.

இந்தப் படம் 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே தயாரானாலும் இப்போதுதான் விடிவுகாலம் பொறந்திருக்கிறது. இதில்தான் ‘ஜிகர்தண்டா’ படத்திற்காக தேசிய விருதினை பெற்றிருக்கும் நடிகர் பாபி சிம்ஹா அறிமுகமாகியிருக்கிறார். ஆனால் இந்தப் படம் ரிலீஸாவதற்குள்ளாக சில படங்களில் நடித்து முன்னுக்கு வந்த கையோடு தேசிய விருதினையும் பெற்றுவிட்டார்.

ஆனாலும் தான் நடித்த முதல் படம் என்பதால் நடிகர் பாபி சிம்ஹா இந்தப் படத்தை பெரிய அளவுக்கு பிரமோஷன் செய்வார் என்று எதிர்பார்த்தால் நிலைமை அப்படியே உல்டாவாகியிருக்கிறது.

படத்தின் லாபத்தில் தனக்கும் ஷேர் கொடுக்க வேண்டும். அல்லது கூடுதல் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளரின் கழுத்தில் கத்தியை வைக்காத குறையாக மிரட்டியிருக்கிறார் சிம்ஹா. கொடுக்க வழியில்லாமல்தான் படமே தாமதமாக வெளியாகவுள்ளது என்பதைக்கூட புரிந்து கொள்ளாமல் இருக்கிறாரே என்கிற வருத்தத்திலும், படம் ரிலீஸாக வேண்டிய அவசரத்திலும் பாபி சிம்ஹாவுக்கு பதிலாக வேறொருவரை டப்பிங் பேச வைத்து படத்தை திரைக்குக் கொண்டு வர முடிவு செய்துவிட்டார் தயாரிப்பாளர்.

படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இன்றைக்கு படத்திற்கெதிராக தான் உறுப்பினராக இருக்கும் நடிகர் சங்கத்திலும், டப்பிங் கலைஞர்கள் சங்கத்திலும் புகார் கொடுத்திருக்கிறாராம் பாபி சிம்ஹா. இதனால் படம் நாளை வெளியாகுமா என்கிற சந்தேகத்திலும், சங்கடத்திலும் இருக்கிறது.

பேச வேண்டிய சங்கங்களின் முக்கிய பிரமுகர்கள் வெளிநாட்டில் இருப்பதால் தயாரிப்பாளருக்கு மேலும் சிக்கல் கூடியிருக்கிறது. இன்றைய இரவுக்குள் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்து படத்தை வெளியிட விரும்பும்  தயாரிப்பாளர் மருதுபாண்டியன், கடைசியாக தான் உறுப்பினராக இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தை மட்டுமே நம்பியிருக்கிறார்.. ஏதோ நல்லது நடந்தால் சரி..!

பாவம்.. நாளைய பொழுது அவருக்கு நல்ல பொழுதாக விடியட்டும்..! 

Our Score