நடிகர் கருணாஸ், நடிகர் அருண் பாண்டியன், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ் ஆகியோரின் நடிப்பில் இயக்குநர் ராம்நாத் இயக்கியிருக்கும் புதிய படம் ‘ஆதார்’.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை, வடபழனி கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில்தான் நடிகர் அருண்பாண்டியனும், இயக்குநர் அமீரும் கருத்து மோதலில் ஈடுபட்டு பரபரப்பை உண்டாக்கினார்கள்.
தற்போது தமிழ்ச் சினிமா மோசமான நிலைமையில் இருப்பதாக நடிகர் அருண் பாண்டியனும், “அப்படியெல்லாம் இல்லை. இந்தியாவிலேயே தமிழ்ச் சினிமாதான் அனைத்திலும் முன்னணியில் இருப்பதாக…” இயக்குநர் அமீரும் இந்த மேடையிலேயே பதிலுக்குப் பதில் பேசினார்கள்.
முதலில் நடிகர் அருண் பாண்டியன் பேசும்போது, “இங்கு இயக்குநர் சரவணன் பேசும்போது,‘ தமிழ் சினிமாவின் பொற்காலம் இது’ என தவறான தகவலை சொல்லி இருக்கிறார். தமிழ் சினிமாவின் பொற்காலம் என்பது, இயக்குநர் பாரதிராஜா படம் இயக்கிய காலம்… நாங்கள் நடித்த காலம்.. என அதனைத்தான் குறிப்பிடவேண்டும். தற்போது எல்லாம் மாறிவிட்டது.
தமிழ் சினிமா எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என குறிப்பிட வேண்டுமென்றால், இன்று தமிழகத்தில் வேற்று மொழி படங்கள்தான் அதிக வசூலை குவிக்கின்றன. சமீபத்தில் வெளியான அஜித் படம் மற்றும் விஜய் படம் ஆகிய இரண்டு படங்களிலும் அதிகமானப் பணம் படத்திற்காக செலவழிக்கப்படவில்லை. தங்களுடைய சம்பளமாக எடுத்துக் கொண்டனர். தயாரிப்பு செலவின் 90 சதவீதத்தை ஊதியமாக கேட்டால் எப்படி படத்தை உருவாக்க முடியும்.
இந்த மேடையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு, இந்தப் போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன். நாங்கள் படம் எடுக்கும்பொழுது மொத்த தயாரிப்புச் செலவில் 10 சதவிகிதம்தான் சம்பளம். மீதி 90 சதவிகிதம் படத் தயாரிப்பிற்காக இருக்கும். இதனால்தான் அந்தக் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நல்ல, நல்ல கதைகளுடன் படங்கள் வெளிவந்து வெற்றியைத் தொட்டன.
இந்த ‘ஆதார் ’படத்தில் கருணாஸ் சம்பளம் வாங்கவில்லை. படத்தின் தயாரிப்பாளரை நாங்கள் யாரும் சந்திக்கவே இல்லை. இந்த மேடையில்தான் முதன்முதலாக சந்திக்கிறோம்.
தமிழ் சினிமா ஒரு மோசமான திரை உலகம். இருப்பினும் இந்த சினிமா மீது நம்பிக்கை வைத்து, புதிய தயாரிப்பாளர் ஒருவர் வந்திருக்கிறார் என்றால், அவரை மனதார பாராட்டுகிறேன். இந்தப் படத்திற்கு நாங்கள் உண்மையாக உழைத்திருக்கிறோம். அதனால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்…” என்றார்.
இதற்குப் பிறகு பேச வந்த நடிகரும், இயக்குநருமான அமீர், “அருண் பாண்டியன் இங்கே பேசும்போது நிறைய புள்ளி விவரங்களை சொல்லிவிட்டு, தமிழ் சினிமா தற்போது பின் தங்கி இருக்கிறது என குறிப்பிட்டார்.
நடிகர்களுக்கு படத்தின் பட்ஜெட்டில் 80 அல்லது 90 சதவிகிதத் தொகையைச் சம்பளமாக தர வேண்டியிருக்கிறது என சொன்னார். ஏன் கொடுக்கிறார்கள் என்பதை நான் கேட்கவில்லை. ஆனால், அவர் பேசும்போது ஒரு வார்த்தையை பயன்படுத்தினார். அதை தவறுதலாகத்தான் பயன்படுத்தியிருப்பார் என நினைக்கிறேன். ‘தமிழ் சினிமா எல்லா வகையிலும் பின் தங்கி இருக்கிறது’ என சொன்னார். இதை நான் ஏற்க மறுக்கிறேன்.
இந்தியாவிற்கே புதிய பாணியிலான சினிமாவைக் கற்றுக் கொடுத்தது தமிழ் சினிமா. ஒரு நாளும் தமிழ் சினிமா பின் தங்காது. ‘ஆர்.ஆர்.ஆர்.’, ‘கே.ஜி.எஃப்.’ போன்ற படங்களை வைத்து தமிழ் சினிமாவை எடை போடாதீர்கள். ஏனென்றால் நாங்கள் அந்த காலத்திலேயே ‘சந்திரலேகா’ என்ற பிரமாண்டமான படைப்பை உருவாக்கி இருக்கிறோம்.
‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘நாடோடி மன்னன்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ போன்ற படைப்புகளுக்கு நிகராக இதுவரை வேறு எந்த மொழிப் படங்களும் உருவாகவில்லை. தமிழில் இதுவரையிலும் வெளியாகியிருக்கும் சமூகப் படைப்புகளுக்கு இணையாகவோ எளிமையான படைப்புகளுக்கோ வேற்று மொழி படங்கள் எதுவும் ஈடு இணையாக இல்லை. அதனால், தமிழ் சினிமா எப்போதும் இந்திய சினிமாவிற்கு முன்னோடிதான்.
ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப வணிக சினிமாவாக மாறும்போது தமிழ்ச் சினிமாவில் பல மாற்றங்கள் ஏற்படும். ‘16 வயதினிலே’, ‘கிழக்கு சீமையிலே’ போன்ற படங்கள் வெளியானபோதும் வணிக சினிமா இருந்திருக்கிறது. ஆனால் அவை ஒரு போதும் இவைகள் வெளியாவதற்கு தடையாக இருந்ததில்லை என்பதை முக்கியமாக பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமாவில் பணியாற்றிய கலைஞர்கள்தான் இன்று வேற்று மொழிப் படங்களில் பணியாற்றுகிறார்கள். இயக்குநர் ராஜமவுலியே ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் விளம்பர நிகழ்வில், “தமிழ் சினிமா “எங்களது தாய் வீடு” என்று சொல்லியிருக்கிறார். இங்கு கற்றுக் கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்றும், எங்களுக்கு தமிழ் சினிமா பிரமிப்பை தருகிறது..” என்றும் சொன்னார்.
அதனால் தமிழ் சினிமாவில் முன்னேற்றத்திற்கு கலைஞர்களும், தொழில் நுட்பக் கலைஞர்கள் என்றைக்கும் அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பார்கள்…” என்றார்.