தமிழ்ச் சினிமாவின் வழக்கமான பார்முலாவை உடைத்தெறிந்துவிட்டார் இயக்குநர் ராம்..!  

தமிழ்ச் சினிமாவின் வழக்கமான பார்முலாவை உடைத்தெறிந்துவிட்டார் இயக்குநர் ராம்..!  

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘தரமணி’ திரைப்படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் ‘பர்ணபாஸ்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த இயக்குநர் அழகம்பெருமாள்தான்.

இந்தப் படத்தில நடித்த அனுபவம் பற்றியும், தனது திரையுலக பயணம் பற்றியும் சமீபத்தில் பத்திரிகையாளர்களிடத்தில் அழகம்பெருமாள் பேசினார்.

அப்போது அவர் பேசும்போது, "ரொம்ப நாளைக்கு அப்பறம் இந்த ‘தரமணி’ திரைப்படத்தில் நான் நடித்துள்ள பர்ணபாஸ் கதாபாத்திரம் அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. “பர்ணபாஸ் வாக்கு, பைபிள் வாய்க்குலே“ என்று நான் பேசிய வசனம் இப்போது மிக, மிக பிரபலமாயிருச்சு.

இந்தப் படத்தை பொறுத்தவரை இயக்குநர் ராம் ஒவ்வொரு காட்சிகளுக்கும் 4 நடிகர்களை நடிக்க வைத்து கருத்து சொல்ற மாதிரி நீளமான காட்சியா இல்லாம.. போறபோக்குல நம்ம மனச தொடுற மாதிரி சொல்லிக்கிறது படத்தை பார்த்த ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

director ram

இப்போது ட்ரோல் மற்றும் மீம்ஸ்தான் உலகம் என்றாகிவிட்டது. எல்லாம் போராடி, போராடி பாத்துட்டாங்க... விளைவுகள் ஒண்ணும் நடக்க மாட்டேங்குது. படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும், வசனங்களும் மீம்ஸ் மற்றும் ட்ரோல் போல் அமைந்துள்ளது.

ராம் என்னிடம் கதை சொல்லும்போது இந்தக் காட்சிகள் இவ்வளவு ஸ்ட்ராங்காக வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சமூகத்துக்கு தேவையான கருத்து சொல்றேன் என்று எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து ஒப்பாரி வச்சு சென்டிமெண்டா திரும்ப, திரும்ப இந்த விஷயங்களை பேசி ஒண்ணும் நடக்கப் போவது கிடையாது. இதை யாராவது பிரேக் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். நல்ல வேளையாக ராம் வந்து உடைத்தெறிந்துவிட்டார். 

இப்போது மாற்று சினிமாவுக்கான காலம் வந்தாச்சு, எவ்வளவு நாள்தான் ஒரே படத்தை போட்டு பார்த்து பார்த்து ஒரே பார்மலாவுக்குள்ளேயே சிக்கிக் கொண்டிருப்பது...? எனக்கு கடைசிவரை தெரியாது ராம் ‘தரமணி’யில் இப்படி ஒரு முயற்சியைத்தான் படத்துக்குள் கொண்டு வர போகிறார்னு.

என் கேரக்டர் இதான்னு சொன்னாரு.. ஷூட்டிங் போனேன். நடிச்சி கொடுத்தேன். பிறகு படத்தை பார்க்கும்போதுதான் படத்தின் வீரியம் தெரிந்தது. இயக்குநர் ராமின் வாய்ஸ் மிக பெரிய அளவில் படத்துக்கு உதவியிருக்கு. அது ஒரு ஆரோக்கியமான வரவேற்க வேண்டிய விஷயமாகும். 

tharamani-poster-7

இதில் கன்னியாகுமரி தமிழ் எனக்கு ஒரு ப்ளஸ். இருந்தாலும் எல்லாருக்கும் புரிதல் அவசியம் என்பதால் கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணிகிட்டேன். ஏனென்றால் ‘தரமணி’ படத்தை பொறுத்தவரை நிறைய விஷயங்கள் ஏமோஷனலா சொல்லுறோம். எல்லா ஆடியன்ஸ்க்கும் புரியாமல் இருக்கக் கூடாது என்பதால் கொஞ்சம் சினிமா தமிழையும் கலந்துக்கிட்டேன். இருந்தாலும் சொல்ல வரும் விஷயத்தை நாம் அந்த ஸ்லாங்கில் புரியும்படி சொல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்.

இந்த படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் அமைந்துள்ளது. சில ரசிகர்கள் பேஸ்புக்குல வந்து பர்ணபாஸ் கேரக்டர்ல நீங்க கலக்கிட்டீங்கனு கமெண்ட் போட்டிருந்தாங்க.. படிக்கும்போதே பெருமையாக  இருந்தது. இந்த படத்தின் மூலம் மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. இயக்குநர் ராமுக்கு நன்றி.

இப்போ ஆறு, எழு படம் புதிய தலைமுறை இளம் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றுகிறேன். இப்போ என்ன பிரச்சனைனா படத்துக்கு டைட்டில் வைப்பதே கிடையாது. மனோஜ் என்று புதிதாக ஒரு இயக்குநர்  அமெரிக்காவில் இருந்து வந்து அவரே படத்தை இயக்கி, தயாரிக்குறார், அவரே எல்லாவற்றையும் பண்றார். கேமராமேன்கூட அமெரிக்காவில் தன்கூட படிச்சவரையே கூட்டிட்டு வந்து இந்த D16 படம் மாதிரி புதுசா முயற்சி பண்றாங்க.

அடுத்தது இயக்குநர் செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷ் 'புதுப்பேட்டை-2' பண்ணுற முயற்சில இருக்குறாங்க. அது நடந்தால் எனக்கும் அதில் முக்கிய ரோல் இருக்கும் என்று நினைக்கிறன். ஜி.வி.பிரகாஷ் உடன் ஒரு படம் போயிட்டு இருக்கு. 

actor alagam perumal

எல்லாவித கேரக்டரும் பண்ணுறேன். அப்பா கதாபாத்திரம், வில்லன்... இப்படித்தான் நடிப்பேன்.. அப்படித்தான் நடிப்பேன்னு இல்லாமல் எந்த கதாபத்திரத்தில் நடிச்சாலும் அதுல நம்ம விஷயத்தை சரியா பண்ணனும் என்பது என்னுடைய விருப்பம்.

நானும் ஒரு சரியான படத்தை பண்ணிட்டுத்தான் நண்பர்களை சந்திக்கணும்னு தள்ளி போட்டுக்கிட்டே இருந்தேன். ஏன்னா முன்னாடி நிறைய படங்களில் நடித்தேன். அந்த படங்கள் நன்றாக அமைந்தும் மக்களிடம் அது சரியா போய் சேரவில்லை.

வேலூர் மாவட்டம்னு ஒரு படம் பண்ணேன். அதுல முழு நீள  வில்லன் பாத்திரம். படம் சரியாக மக்களிடம் போய் சேராததால் எனக்கான அங்கீகாரம் பெரிதாக கிடைக்கவில்லை.

பிலிம் இன்ஸ்டிடியுடில் படித்து முடித்து 1989-ல் இயக்குநர் மணிரத்தினம் அவர்களிடம் நான் உதவி இயக்குநராக பணியாற்ற துவங்கினேன்.

நான் உதவி இயக்குநராக பணியாற்றிய முதல் திரைப்படம் தளபதி. பணியாற்றிய முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மம்மூட்டி என்று மிகப் பெரிய ஜாம்பவான்கள் இருந்த படம் அது. அப்போது ஆரம்பித்து இப்போதுவரை இயக்குநர் மணிரத்தினத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறேன். அவரோடு பணியாற்றியும் வருகிறேன்.

மணிரத்னம் சாரின் ‘குரு’ படத்துக்கு நான்தான் தமிழில் வசனம் எழுதினேன். மேலும் ‘ரோஜா’, ‘பாம்பே’, ‘கடல்’ போன்ற படங்களில் இடம் பெற்ற திருநெல்வேலி, நாகர்கோவில் வட்டார தமிழ் வசனங்களுக்கு நான்தான் பொறுப்பு.

‘இருவர்’ படத்துக்கு பின்னர் மணிரத்னத்திடம் இருந்து வெளியில் வந்து விஜய், சிம்ரன் நடித்த ‘உதயா’ படத்தை இயக்கினேன். அந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹமான் இசை. பின்னர் மணிரத்னம் சார் தயாரித்த ‘ டும் டும் டும் “ படத்தை இயக்கினேன். படம் வெற்றி பெற்று எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.

இப்போதும் தொடர்ந்து நடித்து வருகிறேன். மீண்டும் எப்போது படம் இயக்குவீர்கள் என்று எல்லோரும் கேட்கிறார்கள். இவ்வளவு நாள் படம் இயக்காமல் இடைவெளி விழுந்துவிட்டது. அதற்கு எல்லாம் பதில் செல்லும் வகையில் நல்ல கதையோடு ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்..." என்றார் நடிகர் அழகம்பெருமாள்.