“ஒரு நாளைக்கு 15 முறை முகத்தைக் கழுவினோம்..” – ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வில்லன் அபிமன்யூ சிங் பேட்டி..!

“ஒரு நாளைக்கு 15 முறை முகத்தைக் கழுவினோம்..” – ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வில்லன் அபிமன்யூ சிங் பேட்டி..!

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ராகுல் ப்ரீத் சிங் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் ‘ஓமா’ என்ற ‘ஓம்கார்’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரட்டும் வகையில் நடித்திருந்தார் நடிகர் அபிமன்யு சிங்.

இந்தப் படத்தில் நடித்தது பற்றி மிரட்டல் வில்லனான அபிமன்யு சிங் பேசும்போது, "இயக்குநர் வினோத், இந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தின் கதையை என்னிடம் சொல்லும்போது, இப்படத்தின் கதை உண்மை சம்பவத்தை மையமாக கொண்டது என்ற விஷயம் எனக்கு மிகவும் பிடித்தது.

இந்தக் கதையில் அவ்வளவு அறிவுபூர்வமான விஷயங்கள் இருந்தது. என் கதாபாத்திரத்தின் வடிவமைப்பும் அதன் வரலாறும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

கார்த்தி மிக சிறந்த மனிதர். அவர் எப்போதும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிக தெளிவாகவும், முழு கவனத்தோடும் செய்யக் கூடியவர். காட்சிக்கு காட்சி தன்னுடைய கதாபாத்திரத்தை மெருகேற்றிக்கொண்டே இருப்பார். அது சரியாக வரும்வரை தொடர்ந்து வேலை செய்துக்கொண்டே இருப்பார். ஒட்டு மொத்தக் காட்சியும் சிறப்பாக வர வேண்டும் என்று சிரத்தை எடுத்து வேலை செய்வார். கார்த்தி கண்ணியமானவர். கடின உழைப்பாளி. அதே சமயம் அனைவரிடமும் எளிமையாக பழகுபவர்.

இயக்குநர் வினோத் தன்னுடைய நடிகர்களை அதிகம் நேசிப்பார். எப்போதும் எதையும் அமைதியாக கையாளுவார். எப்போதும் மிக சிறந்த வேலையை எதிர்பார்ப்பார். காட்சிகள் சிறப்பாக வரும்வரை கடுமையாக உழைப்பார். அதிக கவனம், தூய்மையான மனம் போன்றவை எனக்கு வினோத்திடம் மிகவும் பிடித்தவை.

வெயில் மற்றும் குளிர் அதிகமாக இருக்கும் நேரத்தில்தான் எங்களது படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பில் இருக்கும்போது ஒரு நாளைக்கு 15 முறை முகத்தை கழுவ வேண்டிய கட்டாயம் இருந்தது. அந்த அளவுக்கு அங்கே தூசி படலம் பரவியிருந்தது. அத்தனை கஷ்டப்பட்டுத்தான் இந்தப் படத்தில் நடித்திருந்தோம். இப்போது படத்தின் வெற்றி நாங்கள் பட்ட அனைத்து கஷ்டங்களையும் மறக்கடித்துவிட்டது..." என்றார் அபிமன்யு சிங்.