தமிழ்த் திரையுலகத்தின் பிரபலமான இளம் நடிகரான ஆர்யா மீது பகீர் புகார் எழுந்துள்ளது.
ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான விட்ஜா என்பவர்தான் ஆர்யா மீது புகார் அளித்துள்ளார்.
தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து அதை வைத்து தன்னிடமிருந்து 70 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு தன்னைத் திருமணமும் செய்து கொள்ளாமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஆர்யா ஏமாற்றி வருவதாக அந்தப் புகாரில் விட்ஜா தெரிவித்துள்ளார்.
இந்தப் புகார் மனுவை அவர் தமிழக அரசுக்கு ஈமெயில் மூலமாக அளித்துள்ளார். இதேபோல் இந்தியாவின் பிரதமர் அலுவலகத்திலும் இந்தப் புகாரை விட்ஜா பதிவு செய்துள்ளார்.
கொரோனா காலத்தில் கடனைத் திருப்பிக் கேட்டபோது தற்போது தான் படமில்லாமல் இருப்பதாகச் சொல்லித் தவிர்த்த ஆர்யா.. கொரோனா காலக்கட்டம் முடிந்த பின்பு கேட்டபோது தன்னை ஆபாசமான, கடும் சொற்களால் திட்டியதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே ஆர்யா கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக முதலில் வாக்குறுதி அளித்துவிட்டு பின்பு அது நிகழ்ச்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக சொல்லப்பட்டது என்று சொல்லி பின் வாங்கியதாக புகார் எழுந்தது. இப்போது வெளிநாட்டில் இருந்தே ஆர்யா மீது புகார் வந்துள்ளது.
ஆர்யா சக நடிகையான சாயிஷாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் ‘சார்பட்டா பரம்பரை’, ‘எனிமி’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தப் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று இப்போதுவரையிலும் தெரியவில்லை.