full screen background image

‘உலகம் சுற்றும் வாலிபனை’ போல உருவாகி வரும் சுந்தர்.சி.யின் ‘ஆக்‌ஷன்’ திரைப்படம்

‘உலகம் சுற்றும் வாலிபனை’ போல உருவாகி வரும் சுந்தர்.சி.யின் ‘ஆக்‌ஷன்’ திரைப்படம்

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர்.சி., தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் ‘ஆக்‌ஷன்’.

இப்படத்தில் ‘சுபாஷ்’ என்கின்ற கதாப்பாத்திரத்தில் மிலிட்டரி ஆபீஸராக விஷால் நடித்திருக்கிறார்.

இவருக்கு ஜோடியாக தமன்னா, மிலிட்டரி கமாண்டோ கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து குடும்பப் பாங்கான பெண்ணாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

மற்றும் பாலிவுட் நடிகர் அகான்ஸா பூரி பக்கா ரெளடித்தனம் செய்யும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களைத் தவிர, அரசியல்வாதியாக பழ.கருப்பையாவும், பாலிவுட் நடிகர் கபீர் சிங் வில்லனாக டூயல் ரோலிலும் நடித்துள்ளனர். மேலும், ராம்கி, யோகி பாபு மற்றும் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கதை , இயக்கம் – சுந்தர்.சி., திரைக்கதை – சுபா, வெங்கட் ராகவன் & சுந்தர்.சி., இசை – ஹிப் ஹாப் தமிழா, ஒளிப்பதிவு – டியூட்லீ DUDLEE, படத் தொகுப்பு – ஸ்ரீகாந்த், வசனம் – பத்ரி, கலை இயக்கம் – துரைராஜ், சண்டை இயக்கம் – அன்பறிவ், நடன இயக்கம் – பிருந்தா, தினேஷ், பாடல்கள் – பா.விஜய் , ஹிப் ஹாப் தமிழா, தயாரிப்பு மேற்பார்வை – P.பால கோபி, தயாரிப்பு – ட்ரைடென்ட் ரவீந்திரன்.

‘மத கஜ ராஜா’ மற்றும் ‘ஆம்பள’ படங்களைத் தொடந்து இயக்குநர் சுந்தர்.சி.யும் நடிகர் விஷாலும் இணையும் மூன்றாவது படம் இந்த ‘ஆக்‌ஷன்’ திரைப்படம்.

இப்படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி பேசும்போது, “நான் எப்போதும் வேலை செய்து கொண்டே இருப்பதில் தீவிரமாக இருப்பேன்.  ஒரு படத்தை இயக்கி அதை ரிலீஸ் செய்வதற்குள் அடுத்த படத்தின் வேலைகளை துவக்கிவிடுவது எனது வழக்கம்.

எனக்கு, அனைத்து ஜானரிலும் படம் இயக்கத்தான் ஆசை. ‘முறை மாமன்’ படத்தின் இயக்குநராக அறிமுகமானபோது அது ரீமேக் படமாக இருந்தாலும் அந்தப் படத்தை வேறுவிதமாக கூறியிருந்தேன்.  

நான் எல்லாவிதமான கதைக் களங்களிலும் படம் செய்துள்ளேன்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘அருணாச்சலம்’ என்ற மிகப் பெரிய வெற்றிப் படத்தை இயக்கினேன். அப்படம் முழுக்க, முழுக்க காமெடி கலந்த ஆக்‌ஷன் படமாகவும் இருந்தது.

‘உள்ளத்தை அள்ளித் தா’, ‘மேட்டுக்குடி’ என்று காதல் கலந்த காமெடி படங்களையும், இடையிடையே காமெடி கலந்த பேய் படங்களையும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை சிரித்து ரசிக்கும்படியான படங்கள் தந்ததால் தமிழ்ச் சினிமாவில் என்னை காமெடி இயக்குநராகவே நினைத்துவிட்டார்கள். ஆனால் எனக்கு ‘ஆக்சன்’ படங்களை இயக்கத்தான் ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறது இந்த ‘ஆக்சன்’ திரைப்படம்.

விஷாலும் நானும் இந்த ‘ஆக்‌ஷன்’ படம் மூலமாக மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளோம். விஷாலுடன் நான் முன்பே இணைந்து படம் செய்வதாக இருந்தது. இருவரும் வேறு, வேறு படங்களில் பிஸியாக இருந்தோம். அதனால் முடியாமல் இருந்து இப்போதுதான் இணைந்துள்ளோம்.

இந்தக் கதைக்கு நல்ல உடல் வாகுடன் டூப் போடாமல் சண்டைக் காட்சிகளில் நடிக்க ஒரு கதாநாயகன் தேவைப்பட்டதால் நடிகர் விஷால் சரியாக இருப்பார் என்று படக் குழுவினருக்குத் தோன்றியது. அதனால்தான் விஷால் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளார்.

நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்  ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைப் போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன். தற்போது விஷாலின் மூலம் அந்தக் கனவு இந்தப் படத்தின் வாயிலாக நிறைவேறியுள்ளது.

இந்தப் படத்தின் எழுபது சதவிகித படப்பிடிப்பு வெளிநாடுகளிலும், ஜெய்ப்பூர், டெல்லி, ஐதராபாத் மற்றும் சென்னையிலும் படமாக்கப்பட்டுள்ளது.  

இப்படம் முழுக்க, முழுக்க சண்டைகள் காட்சி நிரம்பிய திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு ‘ஆக்‌ஷன்’ என்றே  பெயர் வைத்துவிட்டோம். ஒரு படத்திற்கு மிக முக்கியமானது டைட்டில்தான். படத்தின் மையத்தை அதிலேயே சொல்லிவிட்டால் எதிர்பார்த்து வரும் ரசிகன் நிச்சயமாக ஏமாற மாட்டான்.

அதுமட்டுமல்லாமல், தற்போது தமிழ்ப் படங்களை இந்தி ரசிகர்களும், தெலுங்கு ரசிகர்களும் தொடர்ந்து ஆதரித்து வருவதனால், இந்தத் தலைப்பு அனைத்து மொழிகளுக்கும் பொருத்தமாக இருக்கும் என்றுதான் வைத்துள்ளோம்.

இதுவரை நான் இயக்கிய படங்களிலேயே ‘ஆக்‌ஷன்’ காட்சிகள் அதிகமாக இருக்கும் திரைப்படமும் இதுதான். இதுவரையிலான தமிழ் சினிமாக்களில் ரசிகர்கள் பார்த்திராத பல புதுமையான சண்டைக் காட்சிகள் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளன..” என்றார்.

இந்தப் படத்தின் முழுப் படப்பிடிப்பும் முடிந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.

Our Score