இப்போதெல்லாம் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் எத்தனை பேர் என்கிற கணக்கெடுப்புக்கு பதிலாக, எத்தனை பேர் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள்..? எந்தப் பள்ளி மாணவர் முதலிடம்..? பாட வாரியாக எந்தப் பள்ளி அதிக முதல் மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறது..? எந்தப் பள்ளியின் மாணவர்கள் தொடர்ச்சியாக ஸ்டேட் ரேங்க் எடுத்து வருகிறார்கள்..? என்கிற புள்ளி விவரங்கள்தான் அதிகமாக மீடியா உலகத்தில் அலசப்பட்டு வருகிறது.
இதன் காரணமாகவே சமீப காலமாக பல பள்ளிகளில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கு நிறைய கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டு வருகிறது. பல பள்ளிகளில் 9-ம் வகுப்பிலேயே 10-ம் வகுப்பு பாடங்களை சொல்லித் தருகிறார்கள். இன்னும் சில பள்ளிகளில் 9-ம் வகுப்பில் சரியாக படிக்காதவர்களை அப்படியே பெயில் ஆக்குகிறார்கள். மேலும் பல பள்ளிகளில் 11-ம் வகுப்புக்கு மாணவர்களை தேர்வு செய்வதற்கே நுழைவுத் தேர்வு நடத்துகிறார்கள்.
10-ம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பெறும் அரசுப் பள்ளி மாணவர்களை, பல தனியார் பள்ளிகள் ஆசை காட்டி இழுத்துச் சென்று தங்களது பள்ளியில் சேர்த்து அவர்களை படிக்க வைத்து.. பன்னிரெண்டாம் வகுப்பில் அவர்களது உதவியால் கிடைக்கும் நற்பெயரை வைத்து மற்ற மாணவர்களின் படிப்பு கட்டணத்தை லட்சத்தில் உயர்த்தி கோடி, கோடியாக சம்பாதித்து வருகின்றன.
இன்னும் சில பள்ளிகளில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்வுக்கு கண்காணிப்பாளராக வரும் ஆசிரியர்களை கைக்குள் போட்டுக் கொண்டு, தங்களது பள்ளி மாணவர்களுக்கு பிட்டுக்களை வகுப்பிலேயே கொடுத்து, அவர்களை எழுத வைத்து பாஸ் செய்ய வைக்கின்றன.
சென்ற ப்ளஸ்டூ பொதுத் தேர்தலின்போது தேர்வுத் தாளை முன்கூட்டியே வெளியிட்டது.. தேர்வு அறையில் ஆன்ஸர் பேப்பர்களை விநியோகித்தது என்று பல தில்லுமுல்லு வேலைகளை செய்த திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகளில் அதிரடி சோதனை நடத்திய கையோடு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் போவதாக பள்ளிக் கல்வித் துறை மிரட்டியது. அவ்வளவுதான். அந்த மிரட்டல் அதோடு நின்று போனது. காரணம் யாருக்குமே தெரியாது..! இதில் பெரும் ஊழலும், லஞ்சமும் விளையாடியிருப்பதை நம்மால் உணர முடிகிறது.
அப்படி கல்வித் துறையில் இன்றைக்கும் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு ஊழலை, வெளிச்சம் போட்டுக் காட்டும் கதைதான் இந்த ‘அச்சமின்றி’ திரைப்படம்.
ஹீரோ விஜய் வசந்த் ஒரு பக்கா லோக்கல் பிக்பாக்கெட் ரவுடி. தன்னுடன் கருணாஸ், தேவதர்ஷிணி ஆகியோரை கூட்டணி வைத்துக் கொண்டு பஸ்களில் பிக்பாக்கெட் அடித்து பொழுதைக் கழிப்பவர். இவருக்குள்ளும் ஒரு காதல் பொங்கி வழிகிறது. பேருந்தில் பார்த்த மலர் என்னும் சிருஷ்டி டாங்கேயை பார்த்தவுடன் காதல் கொள்கிறார். அவரது காதலுக்கு இவரது பிக்பாக்கெட் டீமே விழுந்து, விழுந்து வேலை செய்கிறது.
ஒரு சந்தர்ப்பத்தில் விஜய் வசந்திடம் இருக்கும் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் பர்ஸை பார்த்துவிட்டு விஜய் வசந்த், போலீஸ் என்று நினைக்கும் சிருஷ்டி டாங்கே உண்மையாகவே விஜய் வசந்தை காதலிக்கத் துவங்குகிறார்.
இன்னொரு பக்கம் அந்தப் பகுதி போலீஸ் ஸ்டேஷனுக்கு புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்கிறார் சமுத்திரக்கனி. என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். இவருக்கு லஞ்சம் வாங்குவது.. ஊழலில் ஈடுபடுவது.. திருட்டுக்கு துணை போவது இதெல்லாம் சுத்தமாக பிடிக்காது.
இந்த நேரத்தில் இவரது கல்லூரி கால காதலியும், வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியுமான வித்யாவை சந்திக்கிறார். வித்யாவின் தம்பி தான் படித்த பள்ளிக்கூடத்தில் ஏதோ பிரச்சினை என்று தற்கொலை செய்து கொண்டதாகவும், இதனால் வித்யாவின் தாய், தந்தை இருவரும் தொடர்ந்து இறந்துவிட்டதையும் கேட்டு அதிர்ச்சியாகிறார் சமுத்திரக்கனி.
தான் அப்போது பார்த்த அதே வித்யா இப்போது தனி மரமாக இருப்பதை உணர்ந்த சமுத்திரக்கனிக்கு இப்போது வித்யா மீது ஒரு பரிவு ஏற்படுகிறது. கான்ஸ்டபிள் கும்கி அஸ்வின் அந்தப் பரிவை பேசி பேசியே காதலாக்கிவிடுகிறார்.
இந்த நேரத்தில் திடீரென்று ஒரு விபத்தில் வித்யா இறந்து போகிறார். வித்யாவின் இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னால் அவர் பயன்படுத்திய ஸ்கூட்டருக்கு அபாரதத் தொகை கட்டச் சொல்லி போக்குவரத்து போலீஸிடமிருந்து தகவல் வருகிறது.
இதனையறியும் சமுத்திரக்கனி, வித்யா இறந்த நேரத்திற்கு பின்பே அவரது ஸ்கூட்டர் போக்குவரத்து போலீஸால் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதை கண்டறிகிறார். இதில் ஏதோ சூது இருப்பதை உணர்ந்தவர் அதைக் கண்டுபிடிக்க முயல்கிறார்.
டோல்கேட்டில் இருக்கும் சி.சி.டிவி கேமிராவில் பார்க்கும்போது வித்யாவின் ஸ்கூட்டரை யாரோ ஒரு ஆள் தள்ளி வருவதைப் பார்க்கிறார். இதை வைத்து போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர், வித்யா இறந்த நேரத்தைத் தவறாகக் குறித்துக் கொடுத்திருப்பதை உணர்கிறார்.
இதே நேரம் சிருஷ்டி டாங்கேயின் வீட்டில் வேலை செய்யும் பெண்மணியின் 10-ம் வகுப்பு படிக்கும் பெண், தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பூச்சி மருந்தை குடித்து மருத்துவமனையில் சீரியஸாக சேர்க்கப்படுகிறார். இதையறியும் சிருஷ்டி டாங்கே மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கிறார்.
இந்த மறு கூட்டலுக்கு விண்ணப்பித்த விவகாரம் கல்வியமைச்சரின் பி.ஏ.வுக்கு தெரிய வர.. அவர் தனது அடியாட்களுடன் சிருஷ்டி டாங்கேவின் வீட்டுக்கு வந்து அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்.
அவர்களிடமிருந்து தப்பிக்கும் சிருஷ்டி டாங்கே போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் செய்ய வருகிறார். ஸ்டேஷனில் இருக்கும் இன்ஸ்பெக்டரான பரத் ரெட்டி சிருஷ்டியிடம் “இது பெரிய கேஸா இருக்கு. வாங்க.. போலீஸ் கமிஷனர்கிட்ட போய் புகார் கொடுக்கலாம்…” என்று சொல்லி அவரை போலீஸ் ஜீப்பில் அழைத்து வருகிறார்.
இதே நேரம் கோவிலுக்கு வந்திருக்கும் விஜய் வசந்த், அந்த ஏரியாவின் பெரிய ரவுடியான ஆர்.கே.வின் பர்ஸை அபேஸாக்குகிறார். தனது பர்ஸ் பறி போனதை உணர்ந்த ஆர்.கே. பிக்பாக்கெட் அடித்த விஜய் வசந்தை தனது அடியாட்களை வைத்துத் தூக்கி வருகிறார்.
பர்ஸை தேடி தருகிறேன் என்று சொல்லி ஆர்.கே.வின் அடியாட்களுக்கு போக்குக் காட்டி அவர்களிடமிருந்து தப்பிக்கிறார் விஜய் வசந்த். வழியில் போலீஸ் ஜீப் வர.. அதில் வாலண்டியராக சிக்கிக் கொள்கிறார். அந்த ஜீப்பில்தான் சிருஷ்டியும் இருக்கிறார். இருவரும் ஒருவருக்கொருவர் “என்னாச்சு..?” என்று கேட்டுக் கொள்கிறார்கள்.
சமுத்திரக்கனி பரத் ரெட்டிக்கு போன் செய்து வித்யா இறப்பு சம்பந்தமாக ஒரு க்ளூ கிடைத்திருப்பதாகவும் உடனேயே அவரை கிளம்பி வரும்படிச் சொல்ல பரத் ரெட்டி பாதி வழியிலேயே இறங்கிக் கொண்டு சிருஷ்டியை போலீஸ் கமிஷனர் அலுவலகம் செல்லும்படி சொல்லிவிட்டு சமுத்திரக்கனியை தேடி செல்கிறார்.
சமுத்திரக்கனி போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டரின் வீட்டுக்குச் சென்று பொய் சொன்னதற்காக அவரைத் தாக்குகிறார். அந்த நேரத்தில் அங்கே வரும் பரத்ரெட்டி.. அந்த டாக்டரை தன்னுடைய துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அந்தப் பழியை சமுத்திரக்கனி மீது சுமத்தி, உடனேயே மீடியாவை அழைத்து அவர்கள் முன் சமுத்திரக்கனியை காட்டிவிடுகிறார்.
இன்னொரு பக்கம் விஜய் வசந்தையும், சிருஷ்டியையும் அமைச்சர் பி.ஏ.வின் அடியாட்களிடத்தில் ஒப்படைக்கிறார்கள் போலீஸார். அங்கே விஜய் வசந்த் கடுமையாக சண்டையிட்டு சிருஷ்டியையும் காப்பாற்றிவிட்டு ஆர்.கே.வின் பர்ஸை வைத்திருக்கும் கருணாஸை தேடி காஞ்சிபுரம் அருகேயிருக்கும் ஒரு ஊருக்குச் செல்கிறார்.
இன்னொரு பக்கம் சமுத்திரக்கனியை என்கவுண்ட்டரில் போடும்படி கல்வியமைச்சரின் பி.ஏ. பரத் ரெட்டியை முடுக்கிவிடுகிறார். பரத் ரெட்டியும் இதற்காக திட்டம் தீட்டுகிறார். அந்த திட்டத்தை சமுத்திரக்கனி முறியடித்து அவரிடமிருந்து தப்பித்துச் செல்கிறார்.
விஜய் வசந்தும், சிருஷ்டியும் காஞ்சிபுரம் கல்யாணத்திற்கு வர.. அங்கே கல்வி அமைச்சரும் வருவதை தெரிந்து அவரிடத்தில் இது பற்றி புகார் தெரிவிக்கலாம் என்று நினைக்கிறார்கள். அந்த நேரத்தில் அமைச்சருடன் அவரது பி.ஏ.வும் உடன் இருக்க.. அதை சிருஷ்டி பார்த்துவிட்டு விஜய் வசந்திடம் சொல்ல.. இருவரும் இங்கேயிருந்தும் தப்பிக்கிறார்கள்.
சிருஷ்டியை கொலை செய்ய முயற்சிப்பது கல்வியமைச்சரின் பி.ஏ. இதே பி.ஏ.தான் வித்யாவின் கொலைக்கான காரணத்தை கண்டறிய நினைக்கும் சமுத்திரக்கனியையும் கொலை செய்ய முயல்கிறார். இதற்கென்ன காரணம்..? சிருஷ்டி டாங்கேவின் புகார் பின்னணி, வித்யாவின் கொலைக்கான பின்னணி என்ன என்பதெல்லாம் படம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்..!
‘என்னமோ நடக்குது’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அதே கூட்டணியோடு மீண்டும் இணைந்திருக்கிறார் விஜய் வசந்த். தன்னைப் பற்றி பெரிய அளவுக்கு நினைக்காமல் தனக்கு எது வருமோ, அதையே செய்துவிடலாம் என்கிற சின்ன தன்னம்பிக்கையோடு இந்த இரண்டாவது படத்தையும் தயாரித்திருக்கிறார். பாராட்டுக்கள்.
சாதாரண மக்களுக்குப் பிடித்தது போன்ற முகம்.. மிகச் சரளமான நடிப்பு. டைமிங்கை தவறவிடாமல் பேசும் டயலாக்குகள்.. ஆக்சன் காட்சிகளுக்கேற்ற வேகம்.. கொஞ்சம், கொஞ்சம் நடனம்.. நகைச்சுவையை வரவைக்கும் அளவுக்கான நடிப்புத் திறன்.. இதையெல்லாம் இயக்குநரின் அருமையான இயக்கத்தினால் வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய் வசந்த். இப்படியே உதயநிதி ஸ்டாலின், விஜய் ஆண்ட்டனி, விஜய் சேதுபதி வரிசையில் இவரும் இடம் பிடித்து தனக்கு பொருத்தமான கேரக்டர்களை மட்டுமே செய்தால் எல்லாம் சுபமே.
கன்னக்குழி என்ற அழகை வைத்தே அசத்தி வருகிறார் அழகி சிருஷ்டி டாங்கே. பிக்பாக்கெட்காரனை போலீஸ் என்று அப்பாவியாய் நம்பி இவர் பேசும் பல வசனங்கள் பல இடங்களில் சிரிப்பை வரவழைத்திருக்கின்றன. கிளாமரை காட்டாவிட்டால் தமிழில் காலம் தள்ளுவது முடியாது என்பதை உணர்ந்து பாடல் காட்சிகளில் தாராளமயக் கொள்கையை அமல்படுத்தியிருக்கிறார் சிருஷ்டி. இயக்குநரும் இவரை மிகச் சரியாகவே பயன்படுத்தியிருக்கிறார்.
சமுத்திரக்கனிதான் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார். என்கவுண்ட்டர் ஸ்பெஷலிட்டுதான் என்றாலும் அவருக்குள் இருக்கும் மனிதாபிமானத்தை உணர்த்தும் காட்சி அந்த போலீஸ் சீருடைக்கே பெருமை தருவது போலிருக்கிறது.
வித்யாவின் மீதான காதலை மீண்டும் உணரும் தருணம்.. வித்யாவின் மரணச் செய்தி கேட்டு கலங்குவது.. தன்னை திட்டமிட்டு சிக்க வைத்தவர்களை வரிசையாக நொங்கி எடுப்பது என்று ஆக்சன் காட்சிகளில் கடைசிவரையிலும் விஜய் வசந்துக்கு இணையாகவே நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி.
இவர்கள் அனைவரையும்விடவும் கலக்கியிருப்பர்கள் இருவர். கல்வித் தாயாக நடித்திருக்கும் ராஜலட்சுமி என்னும் சரண்யா பொன்வண்ணனும், கல்வி அமைச்சராக நடித்திருக்கும் ராதாரவியும்தான்.
சரண்யாவுக்கு இது முற்றிலும் வேறுபட்ட கேரக்டர். இதுவரையிலும் அன்பான அம்மா.. பொறுப்பான மனைவி கேரக்டர்களிலேயே நடித்திருந்தவர் இப்போதுதான் முதல் முறையாக வில்லி வேடத்தை ஏற்றிருக்கிறார். சிரித்துப் பேசியே கழுத்தில் கயிற்றை இறுக்கும் அவரது குணாதிசயத்திற்கு அவரது சிரிப்பே ஒரு அருமருந்தாக இருக்கிறது. செம நடிப்பு..
இவரும் ராதாரவியும் மோதிக் கொள்ளும் காட்சி இந்தாண்டுக்கான டாப் டென் வரிசையில் இடம் பிடிக்க வேண்டிய காட்சி என்றே சொல்ல வேண்டும். ராதாரவியைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. எந்த இடத்தில் வசனத்தை ஏற்ற வேண்டுமோ அங்கே ஏற்றி.. எங்கே குறைக்க வேண்டுமோ அதை குறைத்து.. தன்னுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சை உணர்ந்து நடித்திருக்கிறார். பெர்பெக்ட் ஆக்சன் எனலாம்.
சில காட்சிகளே வந்தாலும் பிக்பாக்கெட் கும்பலான தேவதர்ஷிணியும், கருணாஸும் சிரிக்க வைத்திருக்கிறார்கள். வித்யா அழகோ அழகு. ஏன் இவருக்கு தொடர்ந்து படங்கள் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை. அவருடைய சைகை பாஷை நடிப்பும் மனதைத் தொடுகிறது.
இது போன்ற அரசியல் பேசும் படங்களுக்கு தேவையான வசனத்தை கொடுத்திருக்கிறார் வசனகர்த்தா ஆர்.ராதாகிருஷ்ணன். கடைசி காட்சியில் நீதிமன்றத்தில் அரசுப் பள்ளிகளின் லட்சணம், தனியார் பள்ளிகள் செய்யும் அராஜகம். அரசுகளின் பாராமுகம்.. இவைகளையெல்லாம் ஆள் ஆளுக்கு விளாசும் காட்சிகளில் வசனங்களே கைதட்டலைக் குவிக்கின்றன. பாராட்டுக்கள் ராதாகிருஷ்ணன்.
ஏ.வெங்கடேஷின் ஒளிப்பதிவில் குறைவில்லை. படத் தொகுப்பாளர் கே.எல்.பிரவீனின் தொகுப்புக்கு மிகப் பெரிய சல்யூட். நிறைய இண்ட்டர்கட் காட்சிகள் இருப்பதால் எதுவும் ஜெர்க் ஆகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனாலேயே படம் இடைவேளைக்கு பின்பு விறுவிறுப்பாகச் செல்கிறது.
பிரேம்ஜியின் இசையில் ‘அச்சமின்றி’, ‘காசு கைல’, ‘பாப்பா’ பாப்பா’, ‘உன்னை பார்த்தால்’ பாடல்கள் கேட்க வைக்கின்றன. ‘உன்னைப் பார்த்தால்’ பாடல் தவறான இடத்தில் இடம் பெற்றிருக்கிறது. படம் ஒரு டெம்போ ஏறியிருக்கும்போது இந்தப் பாடல் அந்த டென்ஷனை குறைப்பதால், இதனை நீக்கியிருக்கலாம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
எழுதி, இயக்கியிருக்கும் இயக்குநர் பி.ராஜபாண்டிக்கு ஒரு பெரும் பாராட்டு. இப்போதைய தமிழகத்திற்கு மிகத் தேவையான ஒரு கருத்தை இந்த கமர்ஷியல் படம் மூலமாகச் சொல்லியிருக்கிறார். தன்னால் முடிந்த அளவுக்கான இறுக்கமான இயக்கத்தினால்தான் படத்தை கடைசிவரையிலும் பார்க்க வைத்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
ஆனாலும் சில லாஜிக் மீறல்களும் இல்லாமல் இல்லை. படத்தின் துவக்கத்தில் மாவட்ட ஆட்சியாளர் ‘தலைவாசல்’ விஜய்யை குண்டு வைத்து கொலை செய்யும் ராதாரவி, கடைசியில் கோர்ட்டில் வந்து நீதி, நேர்மை, நியாயம், தர்மம் பற்றியெல்லாம் பேசுவதும்.. அவரை நல்லவராகிவிடுவதும் முரண்பாடாக இருக்கிறதே இயக்குநரே..!?
என்னதான் பிக்பாக்கெட்டுகளிடம் மாமூல் வாங்கி ஒத்துழைப்பு கொடுக்கும் போலீஸாக இருந்தாலும் ஸ்டேஷனுக்குள்ளேயே அவர்களை அழைத்து வந்து அவர்களுடன் சீட்டு விளையாடும் அளவுக்கு நெருக்கத்தைக் காட்டுவது அப்படியொன்றும் இயல்பாக இல்லையே இயக்குநர் ஸார்..?
சமுத்திரக்கனியை கொலை வழக்கில் சிக்க வைத்து கைது செய்யும் பரத் ரெட்டி அந்த இடத்தில் அத்தனை மீடியாக்களை அந்த நேரத்தில் கொண்டு வந்து வைப்பதும்.. ஒரு அமைச்சரின் பி.ஏ. இந்த கேஸுக்காக ஒரு பெண்ணை வீடு தேடி வந்து தாக்குவதும்.. கொஞ்சம் ஓவரான திரைக்கதையாகத்தான் தோன்றுகிறது..!
இதேபோல் சரண்யாவின் சொத்துப் பட்டியலை பி.ஏ.விடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ராதாரவி.. அதற்கு அடிபோடுவது போல சரண்யாவை அழைத்து மிரட்டுவதும்.. பதிலுக்கு சரண்யா அவரின் பி.ஏ.வை வைத்து ராதாரவிக்கே ஸ்கெட்ச் போடுவதும் திடுக்கிடும் திருப்பமாக இருக்கலாம். ஆனால் இது ஈபிள் டவருக்கு ஒப்பான லாஜிக் மீறல் திரைக்கதையாகும்.
மற்றபடி ஒரு கமர்ஷியல் பொழுது போக்கு படத்தில் கூடுமானவரையிலும் படம் பார்க்கும் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை கொடுக்கும்வகையில் காட்சிகளை வைத்து.. அவர்களுக்கும் புரியும்வகையில் எளிய வசனங்களையும் வைத்து.. அரசுகளின் கடமையை வரையறுத்துக் கொடுத்திருக்கும் இந்தப் படத்தின் இயக்குநரை நாம் பெரிதும் பாராட்டுகிறோம்..!