full screen background image

இயக்குநர் அமீர் தயாரித்து, நடித்திருக்கும் ‘அச்சமி்லலை அச்சமில்லை’

இயக்குநர் அமீர் தயாரித்து, நடித்திருக்கும் ‘அச்சமி்லலை அச்சமில்லை’

கடந்த 3 மாதங்களாக தமிழகத்தில் நடந்த அரசியல் மற்றும் சமூகக் களேபரத்தில் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தபடியே இருந்தார் இயக்குநர் அமீர்.

செல்லாத நோட்டு பிரச்சினையில் மோடியையும், ரஜினியையும் ஒரு பொது மேடையில் வைத்து வறுத்தெடுத்தார். “எப்படி மோடியை நல்லவர் என்று சொல்லலாம்…?” என்று ரஜினியை விளாசியெடுத்தார். தொடர்ந்து ஜல்லிக்கட்டு பிரச்சினையின் பற்றியெறிந்தபோது ஆர்யாவை வைத்து ஜல்லிக்கட்டுவை முன் வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார்.

பின்பு, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா பிரச்சினைக்காக மதுரையில் இருந்தே பேட்டியளித்து டென்ஷனை கூட்டிக் கொண்டிருந்தார். சரி. அரசியலில்தான் குதிக்கப் போகிறார் என்று நினைத்தால்.. சத்தமேயில்லாமல் ஒரு திரைப்படத்தைத் தயாரித்து முடித்திருக்கிறார்.

அவருடன் இணை இயக்குநராகப் பணியாற்றிய முத்துகோபால் நடித்து இயக்கிய ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்கிற படத்தை இயக்குநர் அமீர் தனது கம்பெனியின் சார்பிலேயே தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் இயக்குநர் முத்துகோபால் மற்றும் ஹரீஷ் ஜாலே இருவரும் கதாநாயகர்களாகவும், சாந்தினி மற்றும் தாருஷி கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர்.  மற்றும் ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ், முனீஸ் ராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குநர் அமீரும் படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – அருண்குமார், இசை – விவுரு குமார், படத் தொகுப்பு – அத்தியப்பன் சிவா.

படம் பற்றிப் பேசிய இயக்குநரும், தயாரிப்பாளருமான அமீர், “இந்த முத்துகோபால் என்னிடம் உதவி இயக்குநரா இரண்டு படங்களுக்கு வேலை செய்தான். பின்பு தனியா போய் படம் பண்ணப் போறேன்னு சொல்லிட்டிருந்தான்.

அப்புறம் ரொம்ப நாளா ஆளையே காணோம். திடீர்ன்னு ஒரு நாள் வந்து நின்னு ‘நான் ஒரு படம் இயக்கியிருக்கேண்ணே.. அதுல நீங்க நடிக்கணும்’னு சொன்னான். அதோட கூடவே ‘இனிமேல் படத்துல இன்வெஸ்ட் செய்ய என்கிட்ட காசில்லை. நீங்கதான் தயாரிக்கணும்’னு வேற சொன்னான்.

சரி.. படத்தை மொதல்ல பார்த்திட்டு பேசுவோம்னு நினைச்சேன். ஏன்னா நான் டைரக்டரா இருக்கும்போது செட்ல என்கிட்ட நிறைய திட்டு வாங்குறது இவனாத்தான் இருப்பான். அதுனால இவன் மேல எனக்கு மொதல்ல நம்பிக்கையில்லை. படம் அவ்வளவு நல்லாயிருக்காதுன்னு நினைச்சுத்தான் படம் பார்க்க உக்காந்தேன். ஆனால் நான் நினைச்சதுக்கு மாறா படம் நல்லா வந்திருந்தது.

அதோட எனக்குக் கொடுக்கறதா சொன்ன ஒரு கேரக்டர்கூட எனக்கு ரொம்ப பிடித்தமான விவசாயி கேரக்டர். உடனேயே ‘ஓகே’ன்னு சொல்லிட்டு ‘இந்தப் படத்தோட கதைக்காகவே இந்தப் படத்தை நானே தயாரிக்கிறேன்’னு சொல்லிட்டு மீதமான காட்சிகளை என் பணத்தைப் போட்டு எடுத்து முடித்துவிட்டேன்.

மொதல்ல இவன் வேற ஒரு டைட்டிலை படத்துக்கு வைச்சிருந்தான். ஆனால் அது இந்தக் கதைக்கு ரொம்ப பொருத்தமா இல்லை. நானும் யோசித்து பார்த்தேன். ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்ற தலைப்புதான் இந்தக் கதைக்கு பொருந்தி வரக் கூடியதாக இருந்தது.

‘அச்சமில்லை அச்சமில்லை’ கே.பி. ஸார் டைரக்டர் செஞ்சு சில்வர் ஜூப்லி கொண்டாடிய படம். அதுனால அந்த்த் தலைப்புக்கு பெருமை சேர்க்கிற மாதிரியான கதையா இருந்தால்தான் இந்த டைட்டிலை வைக்க முடியும்னு நினைச்சேன்.

கே.பி. ஸாரோட மகளும், தயாரிப்பாளருமான புஷ்பா மேடத்துக்கிட்ட இந்தத் தலைப்பை கேட்டேன்.  ‘அப்பாவோட தலைப்பு இது. இப்போ அவர் இல்லை. அதுனால நான் இஷ்டத்துக்கு கொடுத்திட்டேன்னு பெயர் வந்திரக் கூடாது’ன்னு சொன்னார். அப்புறம் நான் அவர்கிட்ட கதையைச் சொன்னவுடனேயே, சந்தோஷப்பட்டு டைட்டிலை கொடுத்தாங்க. அவங்களுக்கு எனது நன்றி.

இந்தப் படத்தின் கதை சுற்றுச் சூழல் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டும்விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. நம் இந்தியாவே இப்போது குப்பைக் கூளமாக மாறி வருகிறது. கேரளாவின் மருந்து கழிவுகளை நம் தமிழ்நாட்டில் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதேபோல் திருப்பூரில் நொய்யலாற்றில் சாயக் கழிவுகளை கொண்டுபோய் கொட்டுகிறார்கள். இதனை மையமாக வைத்துதான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம்.  

திருப்பூரில் உள்ள சாய பட்டறைகளில் வரும் கழிவுகளில் இருக்கும் நச்சுவால் நீர், நிலங்கள் பாதிக்கப்பட்டிருப்பதையும், அங்கு வசிக்கும் மக்கள் அந்த நச்சு தன்மைகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டு எத்தகைய கேடுகளை சந்தித்திருக்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

திருப்பூரில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தபோது விஷயம் தெரிந்து சாயப்பட்டறை தொழிலதிபர்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து கொண்டு, இந்தப் படத்தை எடுக்கவிடாமல் பல வழிகளில் தடுத்துள்ளார்கள். ஆனாலும் என் தம்பி முத்து கோபால், விடாப்பிடியாக இரண்டு மாதங்கள் திருப்பூரிலேயே தங்கியிருந்து மாறுவேஷத்துல எல்லாம் சுத்தி.. ஒரு வழியா படப்பிடிப்பை முடிச்சிட்டு வந்திருக்கான்.

இந்தப் படத்தில் பணியாற்றியுள்ள தொழில் நுட்ப கலைஞர்களெல்லாம் பிரபலமானவர்களிடம் தொழிலை கற்றுக் கொண்டவர்கள். அதனாலேயே இந்தப் படம் தொழில் நுட்பத்திலும் பெஸ்ட்டாத்தான் வரப் போகுது. இந்தப் படம் லாபம், நஷ்டத்தையும் தாண்டி மக்களிடையே பேசப்பட்டால் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் நானே தயாரிப்பேன்…” என்றார் உறுதியான குரலில்..!

Our Score