பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸின் மகனும், பின்னணி பாடகருமான விஜய் யேசுதாஸும் நடிகராக மாறிவிட்டார்.
பல்வேறு மொழிகளில் இதுவரையிலும் 500-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கும் விஜய் யேசுதாஸ் இரண்டு முறை சிறந்த பாடகருக்கான கேரள அரசின் விருதையும், நான்கு முறை சிறந்த பாடகருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் யேசுதாஸ் ஏற்கெனவே ‘அவன்’ என்ற மலையாளப் படத்திலும், தனுஷுடன் ‘மாரி’ படத்திலும் நடித்திருக்கிறார். இப்போது முதன்முறையாக ‘படை வீரன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கப் போகிறார். இப்படத்தில் அம்ரிதா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கிறார்.
கதையின் களம் மிகவும் பிடித்திருந்ததால் இயக்குநர் இமயம் பாரதிராஜா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ‘கல்லூரி’ அகில், கலையரசன், இயக்குநர் விஜய் பாலாஜி, இயக்குநர் மனோஜ் குமார், நித்தீஷ், இயக்குநர் கவிதா பாரதி, கன்யா பாரதி, ‘தெய்வம் தந்த வீடு’ நிஷா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இசை – கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன், படத் தொகுப்பு – புவன் சீனிவாசன், கலை இயக்குநர் – சதிஷ் குமார், பாடல்கள் – தனா, ப்ரியன், மோகன் ராஜன், நடனம் – விஜீ சதிஷ், சண்டை பயிற்சி – தில் தளபதி, நிர்வாக தயாரிப்பாளர் – விஜய் பாலாஜி, மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு – மதிவாணன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – தனா.
‘கடல்’, ‘ஓ காதல் கண்மணி’ ஆகிய படங்களில் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்த தனா, இப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார்.
தேனி மாவட்டத்தில் உயிர்ப்போடு வாழும் ஒரு கிராமமும்… அதன் மண்சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையுமாக உருவாகும் படம் ‘படைவீரன்’.
இறுதிக்கட்ட பணிகளில் நெருங்கியுள்ள ‘படை வீரன்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் அரவிந்த்சாமி இன்று வெளியிட்டார்.