சினிமாவில் என்றுமே அழியாததும், அழிக்க முடியாததும் காதல் கதைகளே. காதல் கதைகளுக்கு எல்லைகளோ, கட்டுப்பாடுகளோ கிடையாது. பல ஸ்டார்களும் சூப்பர் ஸ்டார்களும் காதல் கதைகள் மூலமாக பிறந்து வளர்ந்து இருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் அழகான காதல் கதைகளுக்கும் காதல் காவியங்களும் பஞ்சம் இருந்ததேயில்லை. தற்பொழுது ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் ‘அபியும் அனுவும்’ இப்பட்டியலில் சேர்கிறது.
இந்தப் படத்தில் மலையாள திரையுலகில் தற்போது துரித வேகத்தில் வளர்ந்து வரும் நாயகனான டோவினோ தாமஸ் மற்றும் நடிகை பியா பாஜ்பாய் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சுஹாசினி, பிரபு, ரோகிணி, மனோபாலா, தீபா ராமானுஜம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை ‘ச ரி க ம India Limited’ நிறுவனத்தின் சினிமா பேனரான ‘Yodlee films’ தயாரித்துள்ளது. தரனின் இசையில், அகிலனின் ஒளிப்பதிவில், உதயபானு மகேஸ்வரனின் கதை மற்றும் திரைக்கதையில், சுனில் ஸ்ரீநாயரின் படத் தொகுப்பு மற்றும் மதன் கார்க்கியின் பாடல் வரிகளில் ‘அபியும் அனுவும்’ உருவாகியுள்ளது. பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தை பிரபல பெண் இயக்குநரான B.R.விஜயலட்சுமி இயக்கியுள்ளார்.
‘அபியும் அனுவும்’ படம் குறித்து இயக்குநர் B.R.விஜயலட்சுமி பேசுகையில், ”இதுவொரு புதுமையான, இதுவரையிலும் சொல்லப்படாத கதை. இதே போல் பல இயக்குநர்கள் முன்பு கூறியிருக்கிறார்கள் என்பதையும் நான் அறிவேன். ஆனால் நிச்சயமாக இந்தப் படம் அதுபோல் கிடையாது. இது எவ்வளவு புதுமையான கதை என்பதை இப்படத்தைப் பார்க்கும்போது ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள்.
தற்போது மலையாள சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஹீரோவான டோவினோ தாமஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக கால் பாதிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக பியா பாஜ்பாய் நடித்துள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இதுவொரு வித்தியாசமான மற்றும் துணிச்சலான படமாக இருக்கும். முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காதலை இப்படத்தில் கையாண்டுள்ளோம். சுவாரஸ்யமான திருப்பங்களுடன் ஒரு உணர்வுப்பூர்வமான காதல் கதையாக இருக்கும்.
தற்போது படப்பிடிப்பு முழுவதும் முடிந்து post production பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. ரிலீசுக்கான தகுந்த தேதியை முடிவு செய்யவுள்ளோம்.” என்றார் மகிழ்ச்சியோடு..!











