M.R.K.V.S. சினி மீடியா சார்பாக தயாரிப்பாளர்கள் ஆர்.முத்துக்கிருஷ்ணன் மற்றும் எம்.வேல்மணி இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’.
இந்தப் படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரங்களில் மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர்.
ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் கே.சோழன் இசையமைத்துள்ளார். படத் தொகுப்பு – திருமலை, அறிமுக இயக்குநரான சி.அருண் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
படம் பற்றி இயக்குநர் சி.அருண் பேசும்போது, “மலையும் மலை சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும் என இலக்கியங்களில் ஐந்திணைகள் பற்றி சொல்லப்படுவது உண்டு. ஆனால் ‘பேயும் பேய் சார்ந்த இடமும்’ ஆக இந்த ‘ஆறாம் திணை’ உருவாகியுள்ளது.
எப்போதும் பாசிடிவான எண்ணங்கள்தான் நல்ல விளைவுகளை கொடுக்கும் என்கிற கருத்தை முன்னிறுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பேய்ப் படங்களில் முக்கியமான அம்சமே பேய்களுக்கென இடம் பெறும் பிளாஸ்பேக் கதைதான். ஆனால் அந்த மரபை உடைத்து, ஒவ்வொரு காரியங்களுக்கான காரணங்களையும் படம் பார்க்கும் பார்வையாளர்கள் தாங்களாகவே உணர்ந்து கொள்ளும்விதமாக புதிய பாணியில் இத்திரைப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்படுள்ளது. இது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.
படத்தில் பேயை தாறுமாறாக விரட்டி, விரட்டி காதலிக்கும் மொட்டை ராஜேந்திரனின் கதாபாத்திரம் புதியதாகவும் கலகலப்புக்கு உத்தரவாதம் தருவதாகவும் இருக்கும். அதுமட்டுமல்ல நடிகர் ரவி மரியாவுக்கும் இது பேர் சொல்லும் படமாக இருக்கும் என்கிறார்…” இயக்குநர் சி.அருண்.
கன்னியாகுமரி, மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் கடும் மழையில்கூட இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை டிசம்பர் 27-ம் தேதி நடைபெற இருக்கிறது.