‘ஆண்பாவம்’ திரைப்படம் ரீமேக் செய்யப்படுகிறது..!

‘ஆண்பாவம்’ திரைப்படம் ரீமேக் செய்யப்படுகிறது..!

1985-ம் வருடம் வெளிவந்து 300 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய திரைப்படம் 'ஆண்பாவம்'.

நடிகரும், இயக்குநருமான பாண்டியராஜன் இயக்கிய முதல் படம் இது. இந்தப் படத்தில் பாண்டியராஜனும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். உடன் பாண்டியன், ரேவதி, சீதா, வி.கே.ராமசாமி, ஜனகராஜ், கொல்லங்குடி கருப்பாயி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

இளையராஜாவின் இன்னிசை மழையின் உதவியுடனும் ஒரு சோகம் த்தும்பிய காதல் கதையுடன், நகைச்சுவையான திரைக்கதையுடன் பாண்டியராஜனின் வித்தியாசமான நடிப்புடன் வெளிவந்த இந்தப் படம் பாண்டியராஜனுக்கே வாழ்க்கை கொடுத்த்து.

இந்தப் படத்தின் வாய்ப்பு பாண்டியராஜனுக்கு வந்தபோது அவர் இயக்குநர் கே.பாக்யராஜிடம் 'முந்தானை முடிச்சு' படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். கிடைத்த வாய்ப்பை நழுவவிடக் கூடாதே என்பதற்காக  'முந்தானை முடிச்சு' ஷூட்டிங்கில் இருந்தே ஒரு நாள் தனது சக துணை இயக்குநர்களையும் அழைத்துக் கொண்டு எஸ்கேப்பாகிவிட்டார். விவரம் தெரிந்த பாக்யராஜ் மிகவும் வருத்தப்பட்டு வேறு செட் துணை இயக்குநர்களை திரும்பவும் சேர்த்துக் கொண்டு அந்தப் படத்தை இயக்கி முடித்தது தனிக் கதை.

இந்த 'ஆண் பாவம்' படம் வெளியான சமயத்தில் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தார். அவரைப் பற்றியும் டைட்டில் பாடலில் குறிப்பிட்டு அவரது புகைப்படத்தையும் காட்டி அசத்தியிருந்தார் பாண்டியராஜன். இதற்காக இந்தப் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர். பாண்டியராஜனின் கைகளை முத்தமிட்டது பாண்டியராஜனுக்கே கிடைத்த ஒரு இன்ப அதிர்ச்சி..!

சமீப காலமாக இந்த 'ஆண் பாவம்' படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் நமது நடிகர்கள் சிலர் ஈடுபட்டு வந்தனர். கடைசியாக உதயநிதி ஸ்டாலினையும், சந்தானத்தையும் நடிக்க வைத்து தயாரிக்கவும் முயற்சிகள் நடந்தன.

ச்சும்மா இருந்தால் இப்படித்தான் நாலு பேர் வந்து கேட்கத்தான் செய்வார்கள் என்று நினைத்த பாண்டியராஜன் இப்போது தானே இந்தப் படத்தை ரீமேக் செய்ய முடிவெடுத்துவிட்டார்.

இப்போதைய காலத்திற்கு ஏற்ப திரைக்கதையை மாற்றியமைத்து பாண்டியராஜனே இதனை இயக்கப் போகிறாராம். படத்தின் பெயரை 'ஆண்பாவம் 99%' என்று வித்தியாசமாக வைத்திருக்கிறார்கள்.

இதில் பாண்டியராஜனின் மகன் பிரிதிவிராஜன், தனது அப்பா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார், ‘வஜ்ரம்’ படத்தை தயாரித்த ஸ்ரீசாய்ராம் பிலிம் பேக்டரி சார்பில் இப்படத்தை R.சங்கர் தயாரிக்கிறார், நிர்வாக தயாரிப்பு K.சிவசங்கர், மற்ற நட்சத்திர தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கேரளாவிலுள்ள ஒற்றப் பாலத்தில் விரைவில் 'ஆண்பாவம் 99%'  படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாம்.   

படம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!