full screen background image

‘ஆண் தேவதை’ படம் வெளியீட்டின்போது ஏற்பட்ட அநியாயமான பிரச்சினைகள்..!

‘ஆண் தேவதை’ படம் வெளியீட்டின்போது ஏற்பட்ட அநியாயமான பிரச்சினைகள்..!

நல்ல படம் எடுத்தாலும், அப்படம் மக்களிடம் வரவேற்பு பெற்றாலும், சில சினிமாக்காரர்களினாலேயே அப்படங்களுக்கு சோதனையும் வந்துவிடுகிறது. அப்படி ஒரு சோதனையைத்தான் சந்தித்திருக்கிறது கடந்த வாரம் வெளியான ‘ஆண் தேவதை’ திரைப்படம்.

மீடியாக்களும், படம் பார்த்த ரசிகர்களும், “ஆண் தேவதை நல்ல படம், நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்” என்று பாராட்டினாலும், அப்படத்தின் இயக்குநர் தாமிரா, தற்போது பெரும் தடுமாற்றத்தில் குமுறிக் கொண்டிருக்கிறார்.

இத்திரைப்படத்தைத் திரைக்கு கொண்டு வருவதற்குள் தான் பட்ட கஷ்டங்களை பகிரங்கமாக வெளியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இனி வருவது அவரது வார்த்தைகளில்..! 

“’வட்டிக்கு வாங்கி படம் எடுக்கக் கூடாது என்கிற எண்ணத்தில்தான் வட்டியற்ற திரைப்படமாக சொந்தப் பணத்தில் ‘ஆண் தேவதை’ திரைப்படத்தினை எடுத்து முடித்தோம். 

‘ஆண் தேவதை’யை திரையிட்ட அரங்கங்களில் பார்த்த அனைவருக்கும் மிகவும் பிடித்திருக்கிறது. 

திருச்சி, கோவை, சேலம், சென்னை ஆகிய நகரங்களில் அதிக விளம்பரம் இல்லாமலேயே இத்திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

படத்தின் தொலைக்காட்சி உரிமை ஒரு நல்ல விலைக்கு விற்கப்பட்டது, படத்தின் மீதான எங்கள் நம்பிக்கையை மேலும் அதிகரித்தது. இதுவரை எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

தமிழ்நாடு திரையரங்க விற்பனை உரிமைக்காக விநியோகஸ்தர்களை அனுகியபோது வியாபாரத்தில் எங்கள் அனுபவமின்மையை பயன்படுத்தி எங்களிடமிருந்து திருச்சி விநியோகிஸ்தர்கள் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் ஒருவர் ஒன்றே முக்கால் கோடி என விலை பேசி நாற்பத்தியோரு லட்சம் முன் பணமாக தந்தார்.

கடந்த மூன்று மாத காலமாக பட வெளியீட்டு தேதியை மாற்றி மாற்றி சொல்லி தட்டிக் கழித்தபடியே இருந்தார். மேற்கொண்டு பணமும் தரவில்லை.

இதற்கிடையே அவர் எங்களுக்குக் கொடுத்த நாற்பத்தியோரு லட்சமும் வட்டிக் கடன். அந்தக் கடனுக்காக எங்கள் திரைப்படத்திற்கு ரெட்கார்டு போடப்பட்டது. ஒரு பைசா வட்டிக்கு வாங்காமல் அங்கங்கிருந்து நண்பர்கள் பணத்தை போட்டு அதில் தயாரிக்கப்பட்ட எடுக்கப்பட்ட படத்திற்கு ரெட் கார்ட்.  இதனைக் கண்டு நிலைகுலைந்து போனோம்.

அந்த விநியோகஸ்தர் வாங்கிய பணத்திற்கும் சேர்த்து வட்டி கட்ட வேண்டிய நிலைமை எங்களுக்கு ஏற்பட்டது. அந்த விநியோகஸ்தர் நாற்பத்தியோரு லட்சம் ரூபாயை வட்டிக்கு கடனாக வாங்கிய பணம் மூன்று மாதத்தில் வட்டியுடன் சேர்த்து ஐம்பது லட்சம் ரூபாயாக நின்றது. சரி, சூழல் நமக்கெதிராக வலுவான நிலையெடுத்திருக்கிறது என்று நினைத்து இந்தப் பணத்தை கட்டி படத்தை நாமே வெளியிடுவோம் என்று தீர்மானித்து நாங்களும் வெளியில் கடன் வாங்கி பணத்தை கட்டினோம்.

இதன் பின்பு ஒவ்வொரு பூதமாக கிளம்பியது.

இந்தப் படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை நியூ ஆர்.எஸ்.எம். பிலிம்ஸிற்கு வழங்கியிருக்கிறோம் என எங்கள் பணத்தில் விளம்பரம் கொடுத்த ஒரே காரணத்திற்காக அந்த நபர் முன்னம் பெற்றிருந்த அனைத்து கடனுக்கும் ’ஆண் தேவதை’ திரைப்படமே பொறுப்பு என்கிற நிலையை திரைப்பட விநியோகஸ்தர் சங்கம் உருவாக்கியது.

அந்த வகையில் மேலும் ஐம்பத்தியாறு லட்சத்திற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் ’ஆண் தேவதை’ வெளியாகவே ஆகாது என்கிற கெட்ட சூழ்நிலை மேலும் எங்களை நெருக்கடிக்குள் தள்ளியது. எங்களுக்கு வேறு வழியில்லை. சங்கத்திற்கு எங்கள் மேல் எந்தத் தவறும் இல்லையென்று தெரியும். தெரிந்தும், இவ்வாறான ஒரு தீர்வினை முன் வைத்தது.

ரிலீஸிற்கான தேதியை மூன்றாம் முறையாக அறிவித்திருந்தோம். இதையும் தள்ளி வைத்தால் இனி திரைப்படமே வெளியாகாது என்கிற சூழ்நிலை. 

எட்டு ஆண்டுகள் கழித்து வெளியாகவிருக்கும் எனது ‘ஆண் தேவதை’ ஒரு நல்ல திரைப்படம் என பார்த்தவர்களால் பாராட்டப்பட்ட திரைப்படம்.

இனி மக்களை நம்பி திரைப்படத்தினை வெளியிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிலையில் திரையரங்கத்திற்கு படத்தினை கொண்டு வந்தோம்.

கடைசி நேர நெருக்கடியில் ஒரு குடும்பத் திரைப்படம் வெளியாக வேண்டிய திரையரங்கங்களில் எங்களுக்கு இடம் கிடைக்காத நிலை. இருந்தும் நல்ல திரையரங்குகளில் நல்ல வசூலைப் பெற்றது ’ஆண் தேவதை’. மற்ற திரையரங்குகளில் பார்த்தவர்கள் எல்லோரும் ‘நல்ல திரைப்படம்’ என பாராட்டும்படியாகவும் இருக்கிறது. 

படம் மெல்ல மக்கள் கருத்தில் கவனம் பெறும் தருணத்தில் ’வடசென்னை’, ’சண்டக்கோழி 2’ என இரண்டு பெரிய திரைப்படங்களின் வருகையும் நடந்துள்ளது. இத்தனையும் தாண்டி தமிழகமெங்கும் திரையரங்குகளில் ’ஆண் தேவதை’ வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறான்.

இனி இந்தப் படத்திற்குப் பெரிதாக விளம்பரம் செய்யும் வாய்ப்பு எங்களிடமில்லை. இப்போது நாங்கள் சமூக வலைத்தளங்களையும், மக்கள் ரசனையையும் மட்டுமே நம்பி இருக்கிறோம்.

அருகிலிருக்கும் திரையரங்குகளில் ‘ஆண் தேவதை’யைப் பாருங்கள். இது நல்ல படமென உணரும்பட்சத்தில்  உங்கள் அக்கம்பக்கத்தினரிடம் இந்தப் படம் பற்றிய கருத்தினை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சொல் எங்களின் வெற்றியாகட்டும். எங்களை இழப்புகளிலிருந்து மீட்கட்டும்…”

– இவ்வாறு உருக்கமாக எழுதியுள்ளார் இயக்குநரும், தயாரிப்பாளருமான தாமிரா.

யாரோ வாங்கிய கடனுக்கு யாரோ பொறுப்பேற்கும் கில்லாடியான திருட்டு வேலைகள்தான் தமிழ்த் திரையுலகில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை இதில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.

பின்பு எப்படி சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் இங்கே வாழ முடியும்..? திரும்பவும் படம் எடுக்க முடியும்..? இதைத் தட்டிக் கேட்க வேண்டிய சங்கங்களும் அதற்கான வலிமையுடன் இல்லை. பின்பு இத்திரையுலகம் எப்படி சுபிட்சமாக வாழ முடியும்..!?

பாவம் அப்பாவி தயாரிப்பாளர்கள்..!!!

Our Score