full screen background image

ஆலன் – சினிமா விமர்சனம்

ஆலன் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை 3.S. பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆர்.சிவா தயாரித்து, இயக்கியிருக்கிறார்.

இந்த ஆலன்திரைப்படத்தில் வெற்றி, ஜனனி தாமஸ், அனு சித்தாரா, மதுரா, விவேக் பிரசன்னா, ஹரிஷ் பெராடி, ‘அருவிமதன் குமார், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்ய, மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். கே.உதயகுமார் கலை இயக்குநராக பணியாற்ற, படத் தொகுப்பு பணிகளை காசி விஸ்வநாத் மேற்கொண்டிருக்கிறார். இயக்குநர் ஆர்.சிவா இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் வழங்குகிறார்.

‘ஆலன்’ ஒரு எழுத்தாளனின் வாழ்க்கை தேடல்மற்றும் ஓர் அழுத்தமான காதல் களம். ஒரு முழுமையான ரொமான்ஸ் படமாக மட்டுமல்லாமல், வாழ்வின் அழகை சொல்லும் ஒரு அழகான டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.

ஆலன்என்பதன் பொருள் படைப்பாளிஎன்பதாகும். சிறு வயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன், அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராத நிகழ்வான காதல், மற்றும் இதன் தொடர்ச்சியாக 40 வயது வரையிலான அவனது வாழ்க்கைப் பயணம்தான் இப்படம்.

தியாகு என்ற வெற்றியின் சொந்த ஊர் கொடைக்கானலில் இருக்கும் பூம்பாறை கிராமம். அவனுடைய 15-வது வயதில் ஊரில் ஏற்பட்ட ஒரு பயங்கர நிகழ்வால் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறான்சென்னையிலும் அவன் இருக்கும் இடம் அவனுக்குப் பிடிக்காமல்போக அங்கேயிருந்து யாரிடமும் சொல்லாமல் காசிக்கு செல்கிறான்.

காசியில் சாமியார்களுடன் இணைந்து வேதங்களைப் படித்துக் கொண்டிருந்தாலும் அவனுக்குள் இருக்கும் சொந்த ஊரின் நினைப்பும், அந்தப் பயங்கரத்தின் நினைவுகளும் வந்து, வந்து வாட்டி வதைக்கிறது. கூடவே எப்போதும் ஏதாவது ஒன்றை எழுதியாக வேண்டும் என்று அவன் மனது சொல்கிறது.

சன்னியாசியாக வேண்டும் என்றால் எதன் மீதும் பற்றற்று இருத்தல் வேண்டும் என்பதால் தன் அகத்தில் இருக்கும் ஆசைகளை விட்டொழிக்க முயல்கிறான் தியாகு. ஆனால் முடியவில்லை. திரும்பத் திரும்ப எழுத வேண்டும் என்பதும், சொந்த ஊரின் நினைவுகளும் அவனை வாட்டியெடுக்கிறது.

இதனால் 10 வருடங்கள் கழித்து மீண்டும் சென்னைக்குப் புறப்படுகிறான் தியாகு. வழியில் ரயில் பயணித்தில் அவன் சந்திக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த ஜனனி தாமஸ், அவனது வாழ்க்கையில் வேறொரு பக்கத்தை எழுத வைக்கிறாள். ஆனால் தியாகு எழுதிய அந்தப் பக்கங்களை வாசித்து முடிப்பதற்குள்ளாக காலம் ஜனனி தாமஸைக் கிழித்துப் போட்டுவிட மீண்டும் சன்யாசம் பூண்டு ரிஷிகேஷூக்கு செல்கிறான் தியாகு.

ஜனனி தாமஸ் தன்னை எழுதச் சொன்னதால் இதுவரையில் தான் எழுதி வைத்திருந்த தனது கதைகளை தான் யார் என்பதை வெளிப்படுத்தாமலேயே புத்தகமாக வெளியிடுகிறான் தியாகு. அந்தப் புத்தகங்களை படிப்பதற்காக சென்னைக்கு வந்து நூலகத்தில் தேடும்போது நூலகராக இருக்கும் அனு சித்தாராவின் நட்பு கிடைக்கிறது.

இந்த நட்பு அந்தப் புத்தகத்தைத் தேடும் பணிக்குப் பெரும் உதவியாய் இருந்தாலும் தியாகுவின் வாழ்க்கைக்கும் பெரும் உதவியைப் பெற்றுத் தருகிறது. அந்த உதவிதான் என்ன..? புத்தகம் தியாகுவின் கைக்குக் கிடைத்ததா..? இல்லையா..? தியாகு மீண்டும் ரிஷிகேஷ் சென்றாரா..? இல்லையா..? என்பதுதான் இந்த ‘ஆலன்’ படத்தின் திரைக்கதை.

வெற்றிக்கு மிகவும் பொருத்தமான கேரக்டர்தான். சந்நியாசி வேடத்தில் இருந்தாலும் அந்த ஆன்மீகத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் அந்த நடிப்பை சிறப்பாகக் காண்பித்திருக்கிறார். முற்றும் துறந்த முனிவனாக இருக்க முடியாமல் தவிக்கும் தவிப்பும், தவ வாழ்க்கையிலிருந்து வெளியில் வர அவர் செய்யும் முயற்சிகளும் அவருடைய இயல்பான நடிப்பால் ஏற்க முடிகிறது.

மதுராவை சந்தித்தத் தருணத்தில் இருந்து வேறொரு உலகத்தில் வாழ்வதைப்போல அவர் காட்டும் நடிப்பும், ஜனனிக்காகவே எழுதத் துவங்கி, அது முடியும்போது ஜனனியும் இல்லை என்ற உண்மையை உணரும்போதும் நமது பரிதாப உணர்வை வரவழைத்திருக்கிறார் வெற்றி. கிளைமாக்ஸில் மட்டும் இன்னும் கொஞ்சம் அழுத்தத்தோடு நடித்திருந்தால், படத்தின் கதையோடு நாமும் ஒன்றிப் போக முடிந்திருக்கும்.

நாயகிகளில் ஒருவரான ஜனனி தாமஸ் செம அழகு. கேமிராவுக்கேற்ற முகம். பல காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் நடிப்பு இமை கொட்டாமல் திரையைப் பார்க்க வைத்திருக்கிறது. இன்னொரு நாயகியான அனு சித்தாராவின் இளமைப் பூரிப்புள்ள உடலும், வனப்பும் ஈர்ப்பாக இருந்தாலும் முக அழகையும், நடிப்பையுமே இயக்குநர் அதிகம் காட்டியிருப்பதால் இவரும் நம்மைப் பெரிதும் கவர்ந்திழுக்கிறார்.

காசியின் சாமியாராக ஹரீஷ் பெராடி, மேன்ஷன் உரிமையாளர் கருணாகரன், அப்பா, அம்மா, மாமா விவேக் பிரசன்னா, ரவுடி சித்தப்பாக்கள் என்று படத்தில் நடித்த மற்றையவர்களும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

விந்தன் ஸ்டாலினின் ஒளிப்பதிவில் கொடைக்கானல், காசி, ரிஷிகேஷ் என்று மூன்று இடங்களுமே மிக அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லட்டு மாதிரியான குளோஸப் ஷாட்டுகளை நாயகிகளுக்கு வைத்து படம் முழுவதும் ரசிகர்களை வைப் மோடிலேயே வைத்திருக்கிறார் விந்தன் ஸ்டாலின்.

மனோஜ் கிருஷ்ணாவின் இசையில் கவிஞர் கார்த்திக் நேத்தா பாடல் வரிகள் சங்கர் மகாதேவனின் வசீகர குரலில் வாரணாசியில் மனித பிறப்பின் ரகசியங்களை சிவனைப் பார்த்து கேட்பது போல் ஒலிக்கும் ‘ஓம் நவச்சிவாய’ பாடல் திரும்பத் திரும்ப கேட்க வேண்டும் போல ரசிக்க வைத்திருக்கிறது.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தன் காந்தக் குரலால் காதலில் பரிதவிக்கும் ஒரு பாடலை பாடியிருக்க.. பாடகிகள் சின்மயியும், மும்பை நிகிதா காந்தியும் பாடியிருக்கும் இன்னொரு பாடலும் காதலை உணர வைக்கிறது.

வாழ்வின் எதிர்பாராத நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம்காதல் ஆன்மீகம், எழுத்து என ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் சிவா.R.

இந்தப் படம் காதலும், ஆன்மீகமும் கலந்த படம். ‘ஆலன்’ என்றால் சிவனாம். ‘எதை நீ அதிகமாக நேசிக்கிறாயோ.. அதுவே ஆன்மிகம்.‘ என்று இந்தப் படத்தில் ஒரு வசனம் வருகிறது. இந்தக் கருத்துப்படி “இந்த ஆலனுக்கு மிகவும் பிடித்தமானது எழுத்து. அந்த எழுத்துதான் அவனது ஆன்மீகம்” என்று சொல்லி முடித்திருக்கிறார் இயக்குநர்.

“எதுவாக ஆக வேண்டும் என்று உங்களது உள் மனது சொல்கிறதோ.. அதுவாகவே ஆகிவிடுங்கள். அந்த வாழ்க்கையையே தேர்ந்தெடுங்கள். நெஞ்சுக்கு நிம்மதி கிடைக்கும்” என்பதை சுற்றி வளைத்து சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

இயக்குதலில் கொஞ்சம் குறைவான விகிதாச்சாரம் இருப்பதாலும், திரைக்கதையில் சுவாரசியமும், வேகமும் இல்லாததாலும், படத்தின் கதை, வெகுஜன ரசிகர்களால் சட்டென்று புரிந்து கொள்ள முடியாததாக அமைந்துவிட்டதாலும் இந்தப் படத்தை ஓஹோ என்றும் சொல்ல முடியவில்லை. அதே சமயம் பார்க்கவே முடியலை என்றும் சொல்ல முடியவில்லை.

ஒரு முறை பார்க்கலாம்தான்..!

RATING : 2.5 / 5

Our Score