ஜ்யோ ஸ்டார் எண்டர்பிரைசஸ் சார்பில் எம்.கோட்டீஸ்வர ராஜூ, எம். ஹேமா ராஜு தயாரித்திருக்கும் புதிய படம் ‘ஆகம்’.
இதில் இர்ஃபான், ஜெயப்பிரகாஷ், தீக்சிதா, ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். R.V.சரண் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். ஆர்.மனோஜ் கியான் படத்தொகுப்பு செய்திருக்கிறார். நடனம் – தீனா, சண்டை பயிற்சி – ஹரி தினேஷ். அறிமுக இயக்குநரான டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் படத்தினை இயக்கியிருக்கிறார்.
டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம், மனித வள மேம்பாட்டுத்துறையில் வல்லுநர். பல கல்லூரிகள், நிறுவனங்களுக்குச் சென்று மனித வள மேம்பாடுகள் பற்றி வகுப்பு எடுப்பவர். இவர் எழுதிய ‘ஒரு சிறகு போதும்’ என்கிற தன்னம்பிக்கை நூல், விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்டு அதிகம் விற்பனையாகும் நூல் வரிசையில் இடம் பிடித்திருக்கிறது.
படத்தின் தயாரிப்பாளரான கோட்டீஸ்வர ராஜூ என்.ஐ.டி.யில் எம்.டெக். படித்து லண்டனில் வாழும் தொழில் அதிபர். ஆந்திராவில் பல கல்வி நிறுவனங்கள் நடத்துகிறாராம். இரண்டு அறிவாளிகள் சேர்ந்து படம் தயாரிப்பதாலோ என்னவோ படமும் அறிவாளித்தனமாகவே எடுக்கப்பட்டிருக்கிறதாம்.
பேச்சாளர் என்பதாலோ என்னவோ, மைக் இல்லாமலேயே ஒரு மணி நேரமாக சோர்வேயில்லாமல் படத்தினை பற்றி பேசி முடித்தார் இயக்குநர் விஜய் ஆனந்த்.
“ஆகம் என்ற சொல்லுக்கு ‘வந்து சேர்தல்’ என்று பொருள். இந்தியா மீது மறைமுகமாக தொடுக்கப்பட்டிருக்கும் பொருளாதார போர் பற்றித்தான் இந்தப் படம் பேசுகிறது.
இர்பானும், ரியாஸ்கானும் அண்ணன் தம்பிகள். அண்ணன் ரியாஸ் அமெரிக்காவில் வசிப்பவர். அந்த மேலை நாட்டு கலாச்சாரத்திலேயே ஊறிப் போனவர். ஊருக்கு வரும்போது ஆற்றோரம் காலைக் கடன் கழிக்கப் போனாலும் டிஷ்யூ பேப்பரோடு செல்பவர். ஆனால் தம்பி இர்பானோ அதற்கு நேர் மாறானவர். இந்தியர்களின் உழைப்பு, அறிவு, திறமை எல்லாம் இந்தியாவுக்கே பயன்படவேண்டும் என்று ஆசைப்படுபவர். யாராவது வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்கிறேன் என்று சொல்லி கிளம்பினால் அவர்களை எப்பாடுபட்டாவது தடுத்துவிடுபவர். இப்படி ஒரே வீட்டில் இருவித எண்ணங்களோடு வாழும் அண்ணன், தம்பிகளால் ஏற்படும் சம்பவங்கள்தான் இந்த ‘ஆகம்’ படத்தின் கதை.” என்றார் இயக்குநர்.
“இதில் இந்தியா மீதான மறைமுகமான பொருளாதார போர் எந்த இடத்தில வருகிறது..?” என்று கேட்டதற்கு அதற்கு நீண்ட விளக்கம் அளித்தார் இயக்குநர்.
“இந்தியாவுக்கு எதிராக எத்தனையோவிதமான தீவிரவாத செயல்பாடுகள் நடந்து வருகின்றன. இதில் இந்திய மக்களே அறியாத ஒரு தீவிரவாதம்தான், நாட்டு மக்களிடையே திறமைக் குறைபாட்டை உருவாக்குகிற ‘Knowledge Terrorism’ எனப்படும் அறிவு அழிப்புத் தீவிரவாதம். அது பற்றித்தான் இந்தப் படத்தில் பிரதானமாக சொல்லியிருக்கிறோம்.
இன்றைக்கு உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில், பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் அனைவருமே இந்தியர்கள்தான். இவர்கள் எல்லோரும் இந்தியாவில், இந்திய மக்களின் வரிப் பணத்தில் இந்தியக் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள்.
இவர்களை அயல் நாட்டு நிறுவனங்கள் அதிகப்படியான சம்பளம் தருவதாகச் சொல்லி கவர்ந்திழுத்து அழைத்துச் சென்றுவிட்டன. அதிகமான அறிவுத் திறன் படைத்த இந்தியர்கள் அனைவரும் இப்போது அயல் நாட்டிற்காகவே உழைத்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் இப்போது இருப்பவர்களெல்லாம் அதற்கடுத்த நிலைமையில் இருக்கும் அறிவுத் திறன் படைத்தவர்கள்.
இப்படி இந்தியாவில் இருக்கும் அறிவுக் கூர்மையுடைவர்களின் எண்ணிக்கையை உலக நாடுகள் திட்டமிட்டு அழித்து வருகின்றன. இது இந்திய துணைக் கண்டத்திற்கு மட்டுமல்ல.. ஆசியக் கண்டத்திற்கே அச்சுறுத்தலான விஷயம். இது புத்தி சார்ந்த அரசியல் விஷயம் என்பதால் நமது அரசியல்வாதிகளும் இதனை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.
இதனால் இந்தியாவின் தொழில் நுட்ப முன்னேற்றம் தடைபடுகிறது. உலகின் அரிய கண்டுபிடிப்புகள் பலதும் அன்னிய நாட்டு நிறுவனங்களால்தான் கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால் அந்த நிறுவனங்களில் வேலை பார்க்கும் இந்திய திறமைசாலிகளால்தான் அந்த கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன என்பது மறைக்கப்படுகிறது. அல்லது திட்டமிட்டு மறுக்கப்படுகிறது.
நமது நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதற்கு உண்மையான காரணம், அங்கே அதிகச் சம்பளம் கிடைக்கிறதே என்பதால்தான். இப்போது ஒரு டாலரின் விலை 60 ரூபாய் என்பதால் அங்கே ஆயிரம் டாலர் சம்பளம் வாங்கினாலே இந்திய ரூபாயில் 60000 ரூபாய் ஆகிவிடும். இந்த டாலர்-ரூபாய் விகிதாச்சாரத்தினால்தான் நமது நாட்டு திறமைசாலிகள் பணம் சம்பாதிக்கவே அயல் நாடுகளுக்காக உழைத்து வருகிறார்கள்.
இந்த டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தால் மட்டுமே நம்மவர்களின் அன்னிய மோகம் குறைபடும். ஆனால் இந்திய ரூபாயின் மதிப்பு உயராமல் பார்த்துக் கொள்ளும் வேலையை செய்வதே, அமெரிக்காவில் இருக்கும நம்ம இந்தியர்கள்தான். இந்தக் கூத்தை நாம் எங்கே போய்ச் சொல்வது..?
இப்படி நமது இந்திய மண்ணைச் சேர்ந்தவர்களாலேயே அந்நிய தேசங்கள் முன்னேறி வருகின்றன. இதுதான் இந்தியாவுக்கு எதிரான மிகப் பெரிய தீவிரவாதமாக நான் நினைக்கிறேன். இதைதான் இதில் கதைக் கருவாக்கி படமாக ஆக்கியிருக்கிறோம்.
கதையே இப்படியிருப்பதால் படம் சீரியஸாக இருக்குமோ என்றெண்ணி விடாதீர்கள். வழக்கமான கமர்ஷியல் படங்கள் எப்படி இருக்குமோ அது போலவே, காதல், கிளாமர், நடனம், சண்டை காட்சிகள், குத்தாட்டம் போன்றவைகளும் படத்தில் இருக்கின்றன..” என்றார் முத்தாய்ப்பாக..!
இந்தப் படம் ஜெயிச்சதும், அடுத்து ஹாலிவுட்டுக்கு போறேன்னு நீங்களும் பிளைட் ஏறிராதீங்க இயக்குநர் ஸார்..!