நல்லதோ, கெட்டதோ நாட்டில் எது பரபரப்பாகிறதோ அதனை வைத்து சினிமா எடுப்பது நம்ம பழக்கம்.. கிரிக்கெட் விளையாட்டில் நடைபெற்ற, நடைபெறும் மேட்ச் பிக்ஸிங், ஊழல்கள், பெட்டிங் பற்றி இந்தியில் படம் வெளிவந்துவிட்டது. இப்போது தமிழ் முறை..
‘கிரிக்கெட் ஸ்கேண்டல்’ என்ற பெயரில் ஏற்கெனவே ரோஸ் வெங்கடேசன் என்னும் திருநங்கையொருவர் ஒரு சினிமாவை உருவாக்கி வைத்திருக்கிறார். எல்லாம் ரெடி.. இன்னமும் தியேட்டருக்குத்தான் வரவில்லை.
இதேபோல் ‘வீராப்பு’, ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘தில்லுமுல்லு’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பத்ரியும் இப்போது புதிதாக ஒரு படத்தினை இயக்கியிருக்கிறார். பெயர் ‘ஆடாம ஜெயிச்சோமடா’..! நல்ல தலைப்பு..
படத்தைப் பற்றி பத்ரி சொல்லும்போது, “இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் கிரிக்கெட்டுங்கறது ஒரு மதம் மாதிரி. இங்க பிள்ளையார் கோயில் இல்லாத தெருகூட இருந்துடும், ஆனால், சுவத்துல மூணு ஸ்டம்ப் வரையப்படாத தெருவே இருக்காது. அந்த அளவுக்கு கிரிக்கெட் விளையாட்டு நம்ம ஊர்ல ரொம்ப ஆழமான, ஆர்வமான ஒரு விளையாட்டா சின்னப் பசங்ககிட்ட பரவியிருக்கு.
அப்படிப்பட்ட ஒரு விளையாட்டுல போன வருஷத்துல சில முறைகேடுகள் நடைபெற்றதா செய்தித் தாள்ல வந்த செய்திகளையெல்லாம் படிக்கும்போது, அதையே அடிப்படையா வச்சி ஒரு கதை பண்ணினால் என்னன்னு யோசிச்சி இந்த படத்தோட கதையை உருவாக்கினேன்.
மேல் மட்டத்துல மட்டுமே நடந்துட்டு வர்ற ‘பெட்டிங்’ என்ற இந்த ஊழலை , கிரிக்கெட்டைப் பற்றி எந்த ஒரு ஆர்வமும் இல்லாத, விவரமும் தெரியாத ஒரு சாதாரண மனிதனுக்குக்கூட புரியணும்கறதுக்காக நகைச்சுவை கலந்து இந்த படத்தோட திரைக்கதைய சுவாரசியமா அமைச்சிருக்கோம்.
‘ஆடாம ஜெயிச்சோமடா’-ங்கறது கிரிக்கெட் ஊழலை மையமாகக் கொண்டு, அதோடு பல சுவாரசியமான கற்பனை சம்பவங்கள், பல கற்பனை கதாபாத்திரங்கள், இது எல்லாத்தையும் சேர்த்து மக்களை சிரிக்க வைக்கணும்கற ஒரே நோக்கத்தோட உருவாக்கியிருக்கிறோம்.
இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்சோட கடைசி ஓவர் எந்த அளவுக்கு விறுவிறுப்பாவும், ரசிக்க வைக்கிற மாதிரியாவும் இருக்கோ, அதே மாதிரி இந்த படமும் ஆரம்பத்துல இருந்து முடிவுவரைக்கும் அதே வேகத்தோட ரசிக்கிற மாதிரி இருக்கும்…” என்றார்.
இந்தப் படத்தோட கதைல ஐபிஎஸ் மேட்ச் பிக்ஸிங் கேஸ்ல நடந்த அரெஸ்ட்டெல்லாம் இருக்கான்னு தெரியலை. இருந்தால் பத்ரி நிச்சயம் தைரியக்காரர் என்றே சொல்லலாம்..!