full screen background image

ஆடாம ஜெயிச்சோமடா – திரை முன்னோட்டம்

ஆடாம ஜெயிச்சோமடா – திரை முன்னோட்டம்

அப் ஷாட் பிலிம்ஸ் P. மதுசூதனன் வழங்க, ஸ்கை லைட் கிரியேஷன்ஸ் சுதீர் ஜெயின்-உடன் இணைந்து பி அன்ட் சி பிலிம்ஸ் சார்பில் பத்ரி தயாரித்து இயக்கும் படம் ‘ஆடாம ஜெயிச்சோமடா’.

 “வீராப்பு, ஐந்தாம்படை, தம்பிக்கு இந்த ஊரு, தில்லுமுல்லு” ஆகிய படங்களைத் தொடர்ந்து பத்ரி இயக்கத்தில் வெளிவர உள்ள ஐந்தாவது படம் இது.

படத்தைப் பற்றி இயக்குனர் பத்ரி கூறியதாவது, “ஒவ்வொரு விளையாட்டிலும் மைதானத்தில் ஒருவர் ஜெயிப்பார், மற்றொருவர் தோற்பார். ஜெயிக்கிறவனுக்கு கோப்பை கிடைக்கும். தோற்கிறவனுக்கு ஒன்றும் கிடைக்காது. இதுதான் விளையாட்டின் பொதுவான விதி. ஆனால், இப்ப இந்த விதி எல்லாமே மாறிப் போச்சி. ஜெயிக்கிறவனுக்கு ‘கோப்பை ’  கிடைக்குதோ இல்லையோ, தோற்கிறவனுக்கு கட்டாயம்  நிறைய பணம் கிடைக்குது. அந்த அளவுக்கு சூதாட்டமும், ஊழலும் ஒவ்வொரு விளையாட்டுலயும் எல்லா மட்டத்துலயும் பரவியிருக்கு.

முன்னாடிலாம் ஒரு டீம், மேட்சுல தோத்துட்டாங்கன்னா எதனால தோற்றோம்னு ஆராய்வாங்க. ஆனால், இப்ப எவனால தோத்தோம்னு ஆராய்ச்சி பண்ண வேண்டி இருக்கு. பொதுவாவே, நாம கற்பனையா ஒரு கதை எழுதி, அந்த கதைக்கு திரைக்கதை வடிவம் கொடுத்து, வசனம் எழுதி, அதை இயக்கி இரண்டு மணி நேர படமா காட்டுவோம். இதுல எந்த ஆச்சரியமும் இல்லை.

ஆனால், லைவ்வா நடக்கிற கிரிக்கெட் மேட்ச்சுலயே எவனோ ஒருவன் கதை எழுதறான், அதுக்குத் தகுந்த மாதிரி சில கதாபாத்திரங்கள் நடிக்குது. அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு அந்த எவனோ ஒருவனே தீர்மானிக்கிறான். அப்ப, நாம லைவ்வா வெறித்தனமா பார்த்துட்டிருக்கிறதே ஒரு நாடகம்தான்.

இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் கிரிக்கெட்டுங்கறது ஒரு மதம் மாதிரி. இங்க வந்து பிள்ளையார் கோயில் இல்லாத தெருகூட இருந்துடும், ஆனால், சுவத்துல மூணு ஸ்டம்ப் வரையப்படாத தெருவே இருக்காது. அந்த அளவுக்கு கிரிக்கெட்டுங்கறது இங்க ரொம்ப ஆழமான, ஆர்வமான ஒரு விளையாட்டா சின்னப் பசங்ககிட்டகூட பரவியிருக்கு.

அப்படிப்பட்ட ஒரு விளையாட்டுல போன வருஷத்துல சில முறைகேடுகள் நடைபெற்றதா செய்தித் தாள்ல வந்த செய்திகளையெல்லாம் படிக்கும்போது, அதையே அடிப்படையா வச்சி ஒரு கதை பண்ணினால் என்னன்னு யோசிச்சி இந்த படத்தோட கதையை உருவாக்கினேன்.

மேல் மட்டத்துல மட்டுமே நடந்துட்டு வர்ற ‘பெட்டிங்’ என்ற இந்த ஊழலை , கிரிக்கெட்டைப் பற்றி எந்த ஒரு ஆர்வமும் இல்லாத, விவரமும் தெரியாத ஒரு சாதாரண மனிதனுக்குக்கூட புரியணும்கறதுக்காக நகைச்சுவை கலந்து  இந்த படத்தோட திரைக்கதைய சுவாரசியமா அமைச்சிருக்கோம்.

‘ஆடாம ஜெயிச்சோமடா’–ங்கறது கிரிக்கெட் ஊழலை  மையமாகக் கொண்டு , அதோடு பல சுவாரசியமான கற்பனை சம்பவங்கள், பல கற்பனை கதாபாத்திரங்கள், இது எல்லாத்தையும் சேர்த்து மக்களை சிரிக்க வைக்கணும்கற ஒரே நோக்கத்தோட உருவாக்கியிருக்கிறோம்.

இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்சோட கடைசி ஓவர் எந்த அளவுக்கு விறுவிறுப்பாவும், ரசிக்க வைக்கிற மாதிரியாவும் இருக்கோ, அதே மாதிரி இந்த படமும் ஆரம்பத்துல இருந்து முடிவுவரைக்கும் அதே வேகத்தோட ரசிக்கிற மாதிரி இருக்கும்.

 ‘சூது கவ்வும்’ புகழ் கருணாகரன், ‘நேரம்’, ‘ஜிகர்தண்டா’ புகழ் சிம்ஹா, பாலாஜி, ‘‘சென்னை 28’,  அஞ்சாதே” புகழ் விஜயலட்சுமி, ‘ஆடுகளம்’ நரேன், ராதாரவி, விச்சு, சித்ரா லட்சுமணன், சேத்தன், அபிஷேக் இவர்களுடன் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் பேரன் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஐந்து பாடல்கள் படத்தில் இடம் பெற்றுள்ளன. பா.விஜய், ரமேஷ் வைத்யா, ஜி.கே.பி. இவர்களுடன் ஷான் ரோல்டன் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.

‘தமிழ்ப் படம்’, ‘சென்னை 28’, ‘தில்லுமுல்லு’, ‘வணக்கம் சென்னை’ படங்களின் நாயகன் சிவா, இந்தப் படத்திற்கு வசனம் எழுதி, வசனகர்த்தாவாக அறிமுகமாகிறார்.

துவாரகநாத் ஒளிப்பதிவு செய்ய, கே.ஜே.வெங்கட்ரமணன்  படத்தொகுப்பைக் கவனிக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டராக ‘தளபதி’ தினேஷ் மகன் ஹரி தினேஷ் அறிமுகமாகிறார். சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

இசை வெளியீடு வரும் ஏப்ரல் மாதமும், படத்தை மே மாதம் கோடை விடுமுறையில் வெளியிடவும் திட்டமிட்டு வருகிறார்கள்.

Our Score