சிம்பு படத்திற்கு எழுந்துள்ள புதிய பிரச்சினை

சிம்பு படத்திற்கு எழுந்துள்ள புதிய பிரச்சினை

சிம்பு படம் என்றாலே பிரச்சினைதான் போலிருக்கிறது.

இப்போதுதான் கொடுக்கப்பட வேண்டிய கடன் தொகைகளைக் கொடுத்தால்தான் அடுத்தப் படத்தில் நடிக்க முடியும் என்று சிம்புவுக்கு ரெட் கார்னர் போடும் அளவுக்கு தயாரிப்பாளர் சங்கம் சிம்புவுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்திலும் சிம்பு படத்தின் ஷூட்டிங் மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த முதல் ஷெட்யூல் முடிந்தவுடன் மீண்டும் பஞ்சாயத்து முதலில் இருந்து துவங்கும் என்று தெரிகிறது.

இந்த நேரத்தில் புதிய பிரச்சினை ஒன்று தலை தூக்கியிருக்கிறது.

வெந்து தணிந்தது காடு’ என்று இந்தப் படத்திற்கு வைக்கப்பட்டுள்ள தலைப்பில் ஏற்கெனவே ஒரு திரைப்படம் தமிழில் தயாராகியுள்ளதாம். ஆகவே, சிம்பு நடிக்கும் படத்தின் படத்தின் தலைப்பை மாற்றிக் கொள்ளும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தப் படம் இலங்கை தமிழர்களின் வாழ்வியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாம். ஈழத்து நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான மதி சுதா இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார். கிரவுண்ட் பண்டிங் எனப்படும் முறையில் நிதி திரட்டித்தான் இந்தப் படத்தை மதி சுதா தயாரித்திருக்கிறாராம்.

சினிமாவின் வழக்கமான வியாபார விஷயங்களால் இத்திரைப்படம் இன்னமும் வெளியாகாமல் இருக்கிறது. இந்த நேரத்தில் இந்த சிம்பு படமும் அதே பெயரில் வெளிவர இருப்பது அந்த சின்னப் பட்ஜெட் படத்தைப் பாதிக்கும் என்பதால் கவுதம் மேனன்- சிம்பு கூட்டணி தங்களது படத்தின் பெயரை மாற்றிக் கொள்ளும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக அந்தப் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான மதி சுதா தனது முகநூலில் எழுதியிருப்பது இது.

நானும் கெளதம் மேனனும் பயன்படுத்திக் கொண்ட ஒரே திரைப்படத் தலைப்பும் முடங்கிப் போன என் திரைப்படமும்…

1) எங்களுக்கென்றொரு சினிமா தேவையில்லை
2) மக்கள் இருக்கும் நிலையில் சினிமாவெல்லாம் ஒரு கேடா

போன்ற எதிர் நிலைப்பாடுள்ளவர்கள் இதற்கு மேல் படிக்காமல் கடந்து செல்வது ஆரோக்கியமாகும்.

ஒரு ஆலமரத்தின் கீழ் முளைக்கத் துடிக்கும் அருகம்புல்லாக சின்ன சின்ன விடயத்துக்கும் போராடிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது.

A) தென்னிந்திய சினிமாவின் ஊடக ஆக்கிரமிப்புக்களால் எம்மக்களிடம் எம்படைப்புக்களை கொண்டு சேர்க்க ஒரு புறம் போராடிக் கொண்டிருக்கிறோம்.

B ) தயாரிப்பாளர் என்று எவருமே இல்லாத இடத்தில் ஒவ்வொருவரிடமும் சிறுக, சிறுக 1000 ஆயிரம் ஆக சேர்த்து, இருக்கும் காசுக்கு ஏற்ப இருக்கும் வளத்தை வைத்துதான் ஒரு படைப்பை செய்து முடிக்க வேண்டியுள்ளது.

C) இந்தக் கனவோடு பயணிக்கும் ஒவ்வொருத்தனும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பலதை துறந்துதான் தியாக மனதுடன் உழைத்துக் கொண்டிருக்கின்றான்.

இது சில உதாரணங்களே… இந்நிலையில் ஒரு உண்மையான கலைஞனாக இன்னொரு படைப்பாளியின் படைப்புக்கும், உழைப்புக்கும் உள்ள உரிமைக்கு சின்ன அங்கீகரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தன் மொழியில் உள்ள ஒரு தலைப்பை முதன் முதலாக ஒரு திரைப்படத்தில் பயன்படுத்தும் ஒரு உரிமைகூட தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவனுக்கு இல்லையா ?

இரண்டு மாதங்களுக்கு முன்னர் எனது திரைப்படத் தலைப்பான ‘வெந்து தணிந்தது காடு’ என்பதை பகிரங்கப்படுத்தியிருந்தேன். பலம ாதங்களுக்கு முன் திட்டமிட்ட இத்தலைப்பை பட வேலைகளை முடித்த பின் அறிவிப்போம் என்ற நிலைப்பாட்டில் படத்தை கையில் வைத்துக் கொண்டே அறிவித்தோம்.

“மூடப்பட்ட பங்கர்களுக்குள்தான் எங்கள் கதைகள் புதைந்து கிடக்கின்றன” என்ற மூலக் கருவைக் கொண்ட இத்திரைப்படத்துக்கு தயாரிப்பாளரே கிடைக்காத நிலையில் 111 பேரிடம் இருந்து சேகரித்த பணத்தைக் கொண்டு ஐ போன் மூலம் உருவாக்கியிருந்தோம்.

இன்றைய நாள், கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் திரைப்படம் அதே பெயரில் வெளியாகியிருக்கின்றது.

1) பாரதியாரின் கவிதைதானே… யாரும் அதை வைக்கலாம் என கருத்துப்பட சிலரது எதிர்வாதங்களைக் கண்டேன்.

அக்கருத்தை நான் மறுக்கவில்லை ஆனால் அதே தலைப்பை… எந்த வகைப் படைப்புக்கு முதல் முதல் யார் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற விடயமும் கணக்கில் எடுக்கப்படும். நான் தலைப்பிட முன் தேடிய வகையில் இப்பெயரில் கவிதை நூல் ஒன்று மட்டுமே இருந்தது. திரைப்படம் எதுவும் இருக்கவில்லை.

ஒரு திரைப்பட தயாரிப்புக் குழுவின் முக்கிய வேலைகளில் ஒன்றாக தலைப்புகளை ஆய்வு செய்தலும் அடங்கும். அவ்வகையில் பல இந்திய ஊடகங்களிலும் வெளியாகியிருந்த எமது திரைப்படத்தின் தலைப்பை அறிந்திருக்கவில்லை என்பதற்கு சந்தர்ப்பமே இல்லை. நிச்சயம் கூகுளிலாவது ஒரு தடவை தேடிப் பார்த்திருப்பார்கள்.

அவர்களது பணபலம், விளம்பர பலம், star value என்பவற்றின் மூலம் இச்சிறிய படைப்பு மறைக்கப்பட்டு விடும் என கருதியுமிருக்கலாம்.

2) இரண்டு வெவ்வேறுபட்ட நாடுகள்தானே… இதைக் கணக்கெடுக்க தேவையில்லை என்ற கருத்துக்கான பதில்

இலங்கையில் பணம் கொடுத்து வாங்கக் கூடிய OTT-கள் இல்லாத நிலையில் இந்தியாவை மையப்படுத்திய OTT-களுக்கு மட்டுமே விற்க முடியும்.

எமது படம் இலங்கையில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இந்தியாவில் இப்படத்தை பதிவிட இருப்பதால் படைப்பை விற்பதில் பெரும் சிக்கல் ஒன்று உள்ளது.

ஏற்கனவே இத்திரைப்படத்துக்கு வியாபார விடயம் பேசிக் கொண்டிருந்த இரண்டு பெரிய நிறுவனங்களும்(பெயர் குறிப்பிட முடியவில்லை) இத்தலைப்பால் இப்படைப்பில் ஏற்படும் தாக்கம் குறித்து பதில் தர 3 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளன. பெரும்பாலும் இத்தலைப்பில் ஒரு படைப்பு முதலில் வருவதை விரும்ப மாட்டார்கள்.

ஏதோ, என் மூன்றரை வருட ஒட்டு மொத்த கனவும், உழைப்பும், காத்திருப்பும் இந்த ஒரு சம்பவத்தால் சுக்கு நூறாக்கப்பட்டுவிட்டதாக நான் உணர்கின்றேன்.

வழமை போல இந்தப் படைப்பை ஓடுவதற்கு தற்போது தியேட்டர்களும் இல்லை. படத்துக்கு தேடி வந்த யூரியூப்காரர்களும் தமது channel-க்கு தாருங்கள் வரும் பணத்தில் 50% தருகிறோம் என்ற வியாபார கணக்கோடு வரிசையிடுகின்றார்கள்…”

இவ்வாறு இயக்குநர்-தயாரிப்பாளர் மதிசுதா பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு கெளதம் மேனன் – சிம்பு கூட்டணியின் பதில் என்ன என்பது தெரியவில்லை.

Our Score