full screen background image

‘சட்டம் ஒரு இருட்டறை’ படம் உருவான கதை..!

‘சட்டம் ஒரு இருட்டறை’ படம் உருவான கதை..!

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் 1981-ம் ஆண்டில் இயக்கிய திரைப்படம் ‘சட்டம் ஒரு இருட்டறை’. இந்தப் படத்தில் விஜயகாந்த், பூர்ணிமா தேவி நடித்திருந்தனர். இந்தப் படமே விஜயகாந்துக்கு ஒரு மிகப் பெரிய ஓப்பனிங்கை தமிழ்த் திரையுலகத்தில் பெற்றுக் கொடுத்தது.

இந்தப் படத்தின் கதை உருவானவிதம் பற்றி இந்தப் படத்தின் இயக்குநரான எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்றைக்கு ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசினார்.

இந்த விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சி., பேசுகையில், “1980களிலேயே ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்றொரு படம் எடுத்தேன். அந்தக் கதையை எழுதுவதற்கு என்னைத் தூண்டியது, என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்தான்.

உதவி இயக்குநராக இருந்தபோது என்னிடம் ஒரு சைக்கிள் இருந்தது. அந்த சைக்கிளில் வள்ளுவர் கோட்டம் வழியாக வந்து கொண்டிருந்தேன். அப்போது சிக்னல் கிடையாது. போக்குவரத்துக் காவலர் ஒருவர் நின்று கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவார். நான் வரும்போது ஸ்டாப் என்று எழுதப்பட்டிருந்த போர்டைக் காட்டி வாகனங்களை நிறுத்தத் சொன்னார். நான் அதைக் கவனிக்காமல் சென்று அந்த போர்டை இடித்து வண்டியை நிறுத்தினேன்.

உடனே அவர் என்னைக் கெட்ட வார்த்தையில் திட்டி, ‘நான் நிறுத்த சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ பாட்டுக்குப் போய்கிட்டே இருக்க…’ என்றார். ‘தெரியாமல் வந்துவிட்டேன் சார்’ என்று நான் கூறியும் தொடர்ந்து என்னைத் திட்டிக்கொண்டே இருந்தார். அவர் என்னை திட்டிக் கொண்டிருக்கையில், ஒரு கார் எங்களை வேகமாக கடந்து சென்றது. நான் உடனே, ‘என்னைப் பிடிச்சீங்களே… அந்தக் கார்காரனை ஏன் பிடிக்கவில்லை..?’ என்றேன். அதற்கு அவர், ‘அவன் பின்னால் என்ன ஓடச் சொல்றியாடா..?’ என்றார். ‘கார் வைத்திருந்தால் அவனுக்கு சட்டம் வளையும். என்ன மாதிரி ஏழை பசங்க சைக்கிள்ல வந்தா பிடிச்சுக்குவிங்க… அப்படித்தான’ என்று நான் சொல்ல உடனேயே என்னை ஓங்கி அடித்துவிட்டார். இந்தச் சம்பவம்தான் ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தை எடுக்க என்னைத் தூண்டியது” என்றார்.

Our Score