1992-ம் வருடம் வெளியான ‘ரோஜா’ படம் மூலமாக ஒரு இசையமைப்பாளராக தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானார் ஏ.ஆர்.ரஹ்மான். தனது முதல் படத்திலேயே வெளியான பாடல்களால் இந்தியா முழுவதும் அறியப்பட்டவராக புகழடைந்தார் ரஹ்மான்.
அதற்குப் பிறகு ஏறுமுகத்தில் இருந்த ரஹ்மானின் இசை வாழ்க்கை இப்போதுவரையிலும் அப்படியேதான் இருக்கிறது. 2 ஆஸ்கர் விருதுகளை ஒரே வருடத்தில் வாங்கி உலகம் அறிந்த இசையமைப்பாளாராகவும் மாறிவிட்டார் ரஹ்மான்.
முக்கியமான இயக்குநர்களின் படங்களுக்கு மட்டுமே தற்போது இசையமைக்க ஒத்துக் கொள்ளும் ரஹ்மான் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படங்களுக்கு இசையமைத்த தருணங்கள்தான் தனக்கு நரக வேதனையைக் கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இதுவரையிலும் ரஜினியின் நடிப்பில் உருவான ‘முத்து’, ‘படையப்பா’, ‘சிவாஜி’, ‘கோச்சடையான்’, ‘எந்திரன்’, ‘லிங்கா’, ‘எந்திரன்-2’ ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
அவர் இது குறித்து பேசும்போது, “1990-களில் ரஜினி போன்ற முன்னணி நாயகர்களின் படங்களில் பணியாற்றுயது மிக கடினமான ஒன்றாக இருந்தது. மார்ச் மாதத்தில் துவங்கப்படும் படங்கள் அந்த வருட தீபாவளிக்கே வெளியாகும் என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்படும். காலம் குறைவாக இருப்பதால் பின்னணி இசையும், பாடல்களையும் விரைவில் செய்து தரும்படி தன்னை வற்புறுத்துவார்கள்.
அடிக்கடி பவர்கட் செய்யப்படும் ஏரியாவில் எனது ஸ்டுடியோ இருந்ததால் ஜெனரேட்டர் உதவியுடன் பல இரவுகளில் கடினமாக உழைத்தேன். அந்தக் காலங்கள் நரகம்போல தனக்குத் தோன்றியது. மேலும், மற்ற படங்களை காட்டிலும் ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியதாயிற்று. இது சில நேரங்களில் என் மீதே எனக்கு எரிச்சலையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது…” என்று குறிப்பிட்டுள்ளார்.