நடிகர் வடிவேலு-இயக்குநர் ஷங்கர் இடையிலான பிரச்சினை தீர்ந்ததாம்..!

நடிகர் வடிவேலு-இயக்குநர் ஷங்கர் இடையிலான பிரச்சினை தீர்ந்ததாம்..!

‘வைகைப் புயல்’ வடிவேலுவுக்கு திரையுலகத்தில் இருந்த பெருந்தடை இன்றைக்கு நீங்கிவிட்டது.

வடிவேலுவுக்கும், ‘மெகா’ இயக்குநர் ஷங்கருக்கும் இடையில் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பாக மிக நீண்ட வருடங்களாக பிரச்சினை இருந்து வந்தது.

இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கர் லைகா நிறுவனத்தோடு இணைந்து தயாரித்தார். இதில் நடிப்பதற்கு வடிவேலுவுக்கு மிகப் பெரிய தொகை சம்பளமாகப் பேசப்பட்டது. சென்னை ஈ.வி.பி. ஸ்டுடியோவில் 3 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான செட் போடப்பட்டது.

ஆனால், ஷூட்டிங் துவங்கும்போது வடிவேலு நடிக்க வரவில்லை. பேசிய சம்பளத்தைவிட அதிக சம்பளம் கேட்டார் வடிவேலு. கூடுதலாக இயக்குநர் சிம்புத்தேவனிடம் கதையை மாற்று.. திரைக்கதையை மாற்று என்று பலவித இம்சைகளையும் கொடுத்துவிட்டார் வடிவேலு. இதனால் போடப்பட்ட செட் ஒரு ஷாட் கூட எடுக்கப்படாமல் பிரிக்கப்பட்டது.

இதனால் செட் வாடகை.. துவக்க செலவுகள் என்று தனக்கு 7 கோடி ரூபாய் செலவானதாகவும், அந்தப் பணத்தை வடிவேலு நஷ்ட ஈடாக தர வேண்டும் என்று கேட்டு இயக்குநர் ஷங்கர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார்.

ஆனால் இந்த விசாரணைக்கு வடிவேலு ஒத்துழைப்பே தரவில்லை. இதனால் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் ரெட் கார்டு போட்டிருந்தனர். மற்றைய தயாரிப்பாளர்களும் வடிவேலுவை வைத்து படம் தயாரிக்க முன் வரவில்லை. இதனால் வடிவேலு கடந்த சில ஆண்டுகளாகவே நடிக்க முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.

இப்போது அந்தப் பிரச்சினையை சுமூகமாகப் பேசி முடித்துத் தீர்த்து வைத்துவிட்டதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள எஸ்.பிக்சர்ஸ் ஷங்கர் அவர்கள்,            “23ம் புலிகேசி-II” திரைப்படத்தில் நடித்த, நடிகர் திரு.வடிவேல் மீது புகார் அளித்திருந்தார்.

மேற்படி புகார் சம்பந்தமாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் திரு. வடிவேலு மற்றும் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனத்தினை நேரில் அழைத்து பேசி மேற்கண்ட பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டுள்ளது..” என்று குறிப்பிட்டுள்ளனர்.

எனவே வடிவேலுவைச் சுற்றியிருந்த ஒரு மிகப் பெரிய பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது என்று சொல்லலாம்.

இந்தப் பிரச்சினை முடிந்தாலும் மேலும் 2 பஞ்சாயத்துகள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வடிவேலுவுக்கு எதிராக உள்ளது.

தயாரிப்பாளர் ஆர்.கே. தயாரித்த ‘நீயும் நானும் நடுவுல பேயும்’ படத்தில் வடிவேலு நடிக்க ஒத்துக் கொண்டு பின்பு நடிக்க மறுத்தது தொடர்பாகவும், ஜி.வி.பிரகாஷூடன் ராம்பாலா இயக்கத்தில் தயாரிப்பாளர் ஸ்டீபனின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க ஒத்துக் கொண்ட வடிவேலு அட்வான்ஸை வாங்கிக் கொண்டு பின்பு நடிக்க மறுத்தது தொடர்பாகவும் புகார் மனுக்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கின்றன.

இவைகளிலிருந்தும் விடுபட்டால்தான் வடிவேலுவால் சுதந்திரமாக தமிழ்ச் சினிமாவில் நடிக்க முடியும்.

 
Our Score