full screen background image

விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு வந்துள்ள சிக்கல்..!

விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு வந்துள்ள சிக்கல்..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வாரிசு’ படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாவதில் அப்படத்தின் தயாரிப்பாளராலேயே பிரச்சனை எழுந்துள்ளது.  

இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு தமிழில் ‘வாரிசு’ என்றும் தெலுங்கில் ‘வாரசுடு’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  இத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது.

இந்தப் படம் வெளியாகும் அதே தினத்தில் தெலுங்கு திரையுலகின் சில முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாவதால் வாரிசு’ படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கலாகி, அதன் வசூல் பாதிக்கப்படும் என்று தயாரிப்பாளர் வருத்தத்தில் இருந்து வரும் நிலையில், தற்போது அவரை மேலும் கவலையடைய செய்யும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அதாவது கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கு தயாரிப்பாளர் கவுன்சில் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தில் ராஜு, “பொங்கல் மற்றும் தசரா பண்டிகையின்போது அதிகளவில் டப்பிங் படங்களுக்கே திரையரங்குகள் ஒதுக்கப்படுகின்றன. நேரடி தெலுங்கு படத்திற்கு, டப்பிங் படங்களைவிட குறைந்த அளவில்தான் திரையரங்குகள் ஒதுக்கப்படுகின்றன. 

தெலுங்கு சினிமாவை நிலைநிறுத்த வேண்டுமானால் இனிமேல் நேரடி தெலுங்கு படங்களுக்கே அதிக முன்னுரிமை கொடுத்து திரையரங்குகளை அதிகமாக ஒதுக்க வேண்டும். மீதமிருக்கும் திரையரங்குகளை வேண்டுமானால் டப்பிங் படங்களுக்கு ஒதுக்கலாம்…” என்று கூறியிருந்தார்.

தனக்குத்தானே சூனியம் வைத்தது போன்று 2019-ம் ஆண்டு தயாரிப்பாளர் தில் ராஜு இப்படி பேசியது, இப்போது அவருக்கே சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், டப்பிங் படங்கள் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு பேசியதை சுட்டிக் காட்டி “பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டும். டப்பிங் படங்களுக்கு மீதமிருக்கும் திரையரங்குகளை ஒதுக்கினால் போதும்..” என்று அதிரடியாக தெரிவித்துள்ளது. 

‘வாரிசு’ படம் முழுக்க, முழுக்க தமிழ் மொழியில் உருவான படம் என்று இதன் இயக்குநர் வம்சி சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார், இதனால் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியாகப் போகும் வாரிசு படத்திற்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் குறைவான திரையரங்குகளே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. 

மேலும் வாரிசு’ படம் வெளியாகும் அதே தினத்தில் ‘வீரசிம்ம ரெட்டி’ மற்றும் ‘வால்டர் வீரய்யா’ போன்ற நேரடி தெலுங்கு படங்கள் வெளியாகப் போவதால், வாரிசு’ படத்தின் வசூலிலும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Our Score